murasoli thalayangam

கட்டடக் கலையைப் போற்றும் திராவிட மாடல் அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கலை உள்ளம்!

முரசொலி தலையங்கம் (29-12-2025)

போற்றப்படும் கட்டடக் கலை!

திராவிட முன்னேற்றக் கழக அரசின் கலைத் தொண்டுக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. தலைநகர் சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் 133 அடியில் திருவள்ளுவருக்குச் சிலை, பூம்புகார் கோட்டம் என முத்தமிழறிஞர் கலைஞர் தம் ஆட்சியில் எத்தனையோ கலைப் படைப்புகளை உருவாக்கினார்.

அந்த வரிசையில் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ஏராளமான கலைப் படைப்புகளை உருவாக்கி வருகிறார்.

சென்னை கடற்கரையில் கலைஞர் உலகம், வள்ளுவர் கோட்டம் புதுப்பிப்பு, குமரி வள்ளுவர் சிலையில் கண்ணாடிப் பாலம், மதுரைக்கு அருகில் கீழடி அருங்காட்சியகம், திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம், மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம், மதுரையில் மாபெரும் கலைஞர் நூலகம் ஆகியவை இன்றைய முதலமைச்சர் அவர்களின் கலை உள்ளத்துக்கு சாட்சியாக அமைந்துள்ளன.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் உலகத் தமிழர்கள் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் கீழடி அருங்காட்- சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் 12 லட்சத்து 58 ஆயிரம் பேர் உலகெங்கிலும் இருந்து வந்து பார்த்துள்ளார்கள்.

திருநெல்வேலியில் 55,900 சதுர அடியில் பாரம்பரிய வடிவமைப்போடும், அதிநவீன தொழில்நுட்பங்களோடும் பொருநை அருங்காட்சியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பொருநை ஆற்றங்கரை அகழாய்வுகளில் கிடைத்த அரிய தொல்பொருட்கள் இங்கு அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆசியாவிலேயே மாடு பிடிவிளையாட்டுக்கான முதல் அரங்கமாக மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் கம்பீரமாக நிற்கிறது. 66.89 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த இடத்தில் 16 ஏக்கரில் அரங்க வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்- தில் 4,500 பேர் உள்ளே அமர்ந்து பார்க்கலாம். 62.77 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் 46 கோடியில் கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வைக்கத்தில் 8 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியார் நினைவகத்தை எழுப்பினார் முதலமைச்சர் .

தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்களைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரத்தில் புதிய அருங்காட்சியகம் 18 ஏக்கர் பரப்பில் 22 கோடி மதிப்பீட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். தஞ்சையில் உள்ள மாமன்னர் இராசராச சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் அறிவித்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை விக்டோரியா அரங்கம் அதன் பழமை மாறாமல் மீண்டும் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

விக்டோரியா பொது அரங்கம், சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களில் ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்தின் விக்டோரியா ராணி ஆட்சியின் பொன் விழாவை நினைவு கூரும் வகையிலும் அமைக்கப்பட்டது. ராபர்ட் சி சோல்ம் என்பவரால் இந்தோ சாரசெனிக் கட்டடக்கலையில் 1887-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு, நம் பெருமாள் என்பவரால் இந்த அரங்கம் கட்டப்பட்டது. கலை அரங்கமாக, அரசியல் அரங்கமாகச் செயல்பட்ட இடம் இது. தமிழ் நாடகங்கள், இசை அரங்கேற்றங்கள் நடந்துள்ளன. இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் பல்வேறு தலைவர்கள் உரையாற்றிய இடம் இது.

நீதிக்கட்சிக் காலத்துச் செயல்பாடுகளுக்கு இது அடித்தளமாக அமைந்தது. நீதிக்கட்சியின் தொடக்கவிழா இங்கு தான் நடந்தது. நீதிக்கட்சித் தலைவரான டி.எம். நாயர் தனது முக்கியான சில உரைகளை இங்கு ஆற்றி இருக்கிறார். அவரது தொடக்க கால உரைகளே சமூகநீதிக்கு அடித்தளம் அமைத்தன என்று திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் எழுதி இருக்கிறார்கள். இதே விக்டோரியா பப்ளிக் ஹாலில் 9.9.1934 அன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இயற்றிய "இரணியன் அல்லது இணையற்ற வீரன்” என்ற நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. தந்தை பெரியார் தலைமை வகித்துப் பாராட்டிப் பேசினார் என்றும் சொல்லி இருக்கிறார் அவர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க, தொன்மை வாய்ந்த விக்டோரியா பொது அரங்கினை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணியினை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டார். பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 32.62 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கும் பணி 20.03.2023 அன்று துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்தாலிய பாணி கோபுரத்தின் உச்சியில் திருவிதாங்கூர் கூரையுடன், செந்நிற சீன செராமிக் கற்களால் கட்டப்பட்ட மூன்றடுக்கு மன்றம் இது. விக்டோரியா அரங்கம் மீண்டும் பரபரப்பான இடமாக மாறி உள்ளது. இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கவிதை வாசிப்பு, உரைகள் போன்ற நிகழ்வுகளை இங்கு நடத்தலாம். கட்டிடத்தின் முன்புறத்தில், ஒரு காலத்தில் சென்னையில் பரவலாக பயன்படுத்தப்பட்ட சைக்கிள் ரிக்ஷா, டிராம், படகுகள் ஆகியவற்றின் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. கீழடி அருங்காட்சியகம் நினைவூட்டப் பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசானது அரசியல், பொருளாதார, சமூக வளர்ச்சியை மட்டுமல்ல; கலை வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது. பழமை மாறாமல் புதுப்பித்தல் என்பது அசல் வடிவமைப்பை மாற்றாமல் புதுப்பித்தல் ஆகும். இதற்காக தமிழ்நாடு அரசு நிதி உதவி வழங்கி வருவது கட்டடக் கலைக்குச் செய்யப்படும் சிறப்பு ஆகும். பழமை மாறாமல் புதுப்பிக்க 158 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. திராவிட மாடல் அரசானது கட்டடக் கலையைப் போற்றும் அரசாகவும் செயல்பட்டு வருகிறது.

Also Read: “நாடாளுமன்றத்தில் தமிழ் முழக்கம் - தாய்மொழிக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு MP-க்கள்” - முரசொலி புகழாரம்!