murasoli thalayangam

பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி

முரசொலி தலையங்கம் (20-12-2025)

பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சினை அல்ல!

‘மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்ட’த்தின் பெயரை மாற்றி விட்டதும், அதில் இருந்து மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதும் மட்டுமே பிரச்சினை அல்ல. அந்தத் திட்டத்தின் உண்மையான நோக்கத்தையே சிதைத்து விட்டார்கள் என்பதே முக்கியமானது.

இவர்கள் காந்தியின் பெயரை எடுத்துவிட்டதால் காந்தியடிகளுக்கு எந்தக் குறைபாடும் ஏற்படப் போவது இல்லை. பெயர் நீக்கத்தின் மூலமாக காந்திதான் பேசப் படுகிறாரே தவிர, மற்றவர்கள் அல்ல. ஆனால் ‘காந்தி பெயர் நீக்கம்’ என்ற பிரச்சினைக்குள் மற்ற பிரச்சினைகள் மறைக்கப்படுகின்றன.

‘இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு என்ன?’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டதும் ஒப்புக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் பழனிசாமி. ‘காந்தி பெயரை மறுபடியும் சூட்ட வேண்டும்’ என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். மற்றபடி இப்போது செய்துள்ள மாற்றங்கள் அனைத்தையும் பழனிசாமி தலையாட்டி ஏற்றுக் கொள்கிறாரா?

பா.ஜ.க. எதைக் கொண்டு வந்தாலும் தலையாட்டி ஏற்றுக் கொள்பவர்தான் பழனிசாமி. குடியுரிமைச் சட்டத்தில் பார்த்தோம். ‘எந்தச் சிறுபான்மையினரும் பாதிக்கப்பட மாட்டார்கள்’ என்று சொன்னவர் அவர்தான். மூன்று வேளாண் சட்டத்தில் பார்த்தோம். ‘இது விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் சட்டம்’ என்று இந்தியாவிலேயே பச்சைத் துண்டைப் போட்டுக் கொண்டு பச்சைப் பொய் சொன்ன ஒரே பொய்யர் பழனிசாமி மட்டும்தான். அதைத் தான் இப்போதும் செய்கிறார் பழனிசாமி.

உண்மையில் இந்தச் சட்டத்தை எதிர்க்கப் பல காரணங்கள் இருக்கின்றன.

1. ஒன்றிய அரசு 60 சதவிகிதம் – மாநிலங்கள் 40 சதவிகிதம் என நிதிப் பகிர்வுமுறை என்று மாற்றப்பட்டு இருப்பது மாநிலங்களின் நிதி மூலதனத்தைக் கொள்ளையடிக்கும் வழிமுறை ஆகும். இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கும் நிதியில் இருந்து ஒன்றிய அரசு தனது பங்களிப்பை 40 விழுக்காடு குறைத்துக் கொள்கிறது. ஏற்கனவே தர வேண்டிய நிதியைத் தராமல் இழுத்தடிக்கிறது ஒன்றியம். 4000 கோடி நிதியை தமிழ்நாட்டுக்கு விடுவிக்க எத்தனை போராட்டங்கள் நடைபெற்றது என்பதை அறிவோம். மக்களே வீதிக்கு வந்து போராடினார்கள். இப்போது சொல்லிக் கொள்ளும் 60 விழுக்காட்டையும் தர மாட்டார்கள். அல்லது இழுத்தடித்துக் கொடுப்பார்கள். மக்களுக்கு நேரடியாகப் பதில் சொல்ல வேண்டியவை மாநில அரசுகள்தான். அதனால் மக்களுக்கு மாநில அரசுகள் நிதியைக் கொடுத்தே ஆக வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும்.

2. இப்போது 125 நாட்கள் வேலை என்று சொல்கிறார்களே தவிர, அது உறுதியாக நடக்காது. ஏனென்றால் இதுவரை 100 நாட்கள் வேலையைக்கூட ஒழுங்காக ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒதுக்கவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 100 நாட்கள் கிடைத்த வேலை, மோடி ஆட்சியில் 30 நாட்கள் கூட கிடைக்கவில்லை. 2021–ஆம் ஆண்டு முதல் 7.6 கோடி தொழிலாளர்களின் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டப்பணி அட்டைகள் நீக்கப்பட்டன. இப்போதும் அதுதான் நடக்கப் போகிறது.

3. முந்தைய திட்டத்தில் வேலை வழங்குவதற்கு எந்தக் காலமும் தடை இல்லை. இப்போது, அறுவடைக் காலங்களில் 60 நாட்கள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் பணிகள் வழங்கப்படாது என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது வேளாண் பணி செய்யாதவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.

4. ‘ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்படவுள்ள பன்முக வறுமைக் குறிகாட்டிகளின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்’ என்று சொல்லப்படுகிறது. வறுமைக் குறியீட்டை அளவீடாக நிர்ணயிக்கும் போது, அது தமிழ்நாடு போன்ற வறுமையை ஒழிக்க நியாயமாகப் போராடி வரும் மாநிலங்களை நேரடியாய் பாதிக்கும்.

5. கிராமப்புற வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்புத் திட்டமாக இதுவரை இது அமைந்திருந்தது. அந்த வகையில் மக்களின் வாழ்க்கையை நோக்குவதாக இந்தத் திட்டம் இருந்தது. இதனை வழக்கம் போல, ‘வளர்ச்சித் திட்டம்’ என்று மாற்றி விட்டார்கள். ‘நாடு வளர்ந்து விட்டது’ என்று சொல்லி எப்போது வேண்டுமானாலும் திட்டத்தை நிறுத்தி விடுவார்கள். ‘வறுமை ஒழிந்துவிட்டது’ என்று ஏதாவது ஒரு புள்ளிவிவரத்தைக் காட்டி, இந்தத் திட்டத்தையே நிறுத்தி விடலாம்.

6. வேலை பெறுவது மக்களின் உரிமை என்று முந்தைய சட்டத்தில் இருந்தது. இப்போது அப்படி இல்லை. வேலை இருந்தால் தருவார்கள்.

7. எந்த மாநிலத்துக்கு எவ்வளவு வேலை வாய்ப்புகளை வழங்குவது என்று ஒன்றிய அரசு முடிவு செய்யலாம் என்று சொல்லி இருப்பது, மாநில சுயாட்சிக் கொள்கைக்கு விரோதம் ஆகும். பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் திட்டமிட்டுப் பழிவாங்கப்படும்.

8. முந்தைய சட்டத்தில் வேலைகேட்டு முறையிட்டால் 15 நாட்களுக்குள் வேலை தர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. வேலை வழங்க முடியாத நிலையில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று இருந்தது. அது இப்போது இல்லை.

9. “மொத்தம் 125 நாட்கள் வேலை தருவோம்” என்ற உறுதிமொழியும் இதில் இல்லை.

10. இந்தத் திட்டத்தை எப்போது வேண்டுமானாலும் நிறுத்துவார்கள் என்பதற்காக அனைத்து முன்னோட்டமும் இதில் இருக்கிறது.

– இந்த அடிப்படையில் முழுக்க முழுக்க எதிர்க்க வேண்டியதாக இருக்கிறது அந்த வாய்க்குள் நுழையாத சட்டம்.

Also Read: “SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!