murasoli thalayangam

காந்தியின் ராமராஜ்யமும், பா.ஜ.கவின் வதை ராஜ்யமும் : தெள்ளத் தெளிவாக விளக்கிய முரசொலி!

முரசொலி தலையங்கம் (18-12-2025)

காந்தியின் ராமராஜ்யமும், பா.ஜ.கவின் வதை ராஜ்யமும்!

“காந்தி விரும்பியது ராம ராஜ்யம்தான். அவருக்கு விருப்பமான ராமர் பெயரைத் தானே வைத்திருக்கிறோம்” என்று ஒன்றிய அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். அவருக்கு காந்தியையும் தெரியவில்லை. அவர் சொன்ன ராமராஜ்யமும் புரியவில்லை.

‘மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்ட'த்தின் பெயரை ‘விக்சித் பாரத் ராம்ஜி திட்டம்' என்று மாற்றிவிட்டார்கள். காந்தியின் பெயரைப் பார்த்தால் அவர்கள் கண்ணுக்கு எரிச்சலாக இருக்கிறது. அதனால் அதனைத் தூக்கிவிட்டார்கள். துண்டித்து விட்டார்கள். அதற்காக அவர்கள் சொன்ன காரணம்தான் அவர்களது அறியாமையைக் காட்டுகிறது.

காந்தியடிகள் சொன்ன ராமராஜ்யம் வேறு. இன்று பா.ஜ.க. செய்து கொண்டிருக்கும் வதை ராஜ்யம் வேறு.

1. இந்தியாவில் இந்துக்கள் தவிர வேறு யாரும் வாழக்கூடாது என்று இந்துக்கள் யாராவது நினைத்தால் அவர்கள் தங்கள் மதத்தையே அழிக்கிறார்கள்.

2. தீண்டாமை என்ற விஷம் இந்த மதத்துக்குள் புகுத்தப்பட்ட போதே அதன் சரிவும் தொடங்கிவிட்டது.

3. ஒவ்வொருவனும் தனது சமயத்தின் உண்மையை அறிந்து, போலிக் குருக்களின் போதனையைக் கேளாமல் இருந்தால் சச்சரவுக்கு இடம் இருக்காது.

4. இந்து-முஸ்லிம் ஒற்றுமை, சத்தியாகிரகம் ஆகிய இரண்டுக்குமே என் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன்.

5. தனிநபர் செய்த குற்றத்தை ஒரு சமூகத்தின் மீது சுமத்தாமல் இருப்போமாக.

6. சூத்திரர்கள் வேதம் படிக்கக்கூடாது என்ற தடையை நான் ஆதரிக்க முடியாது. நாம் அந்நியர்க்கு அடிமையாக இருந்து வரும் வரையில் அனைவருமே சூத்திரர்களே.

7. இன்றைய சாதி முறை, வர்ணாசிரமத்துக்கு விரோதமானது.

8. நான் கொல்லப்பட்டாலும் கூட ராமா, ரகீம் என்ற பெயர்களை அடிக்கடி உச்சரிப்பதை விடமாட்டேன். அவ்விரண்டும் ஒரே கடவுளின் பெயர்கள்.

9. இந்துஸ்தான் இந்துக்களுக்கு, பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு என்று ஆனால் இரண்டுமே விஷம் வழிந்தோடும் நாடாகிவிடும்.

18. அரசியலில் மதத்தைக் கலந்த பாவத்தைச் செய்தது நான்தான். அதற்கான தண்டனையை நான் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

- இப்படிச் சொன்னவர் காந்தியடிகள். அவரது சொல்லில் ஒன்றைக்கூட ஏற்றும் கொள்ளுமா பா.ஜ.க.?

"இந்தியாவில் இந்துக்களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று இந்துக்கள் நினைப்பதாயிருந்தால்,இந்துக்களல்லாதவர்கள், முக்கியமாக முஸ்லிம்கள் இங்கே வாழ விரும்பினால் இந்துக்களின் அடிமைகளாகத்தான் வாழ வேண்டும் என்று நினைத்தால், இந்துக்கள் இந்து மதத்தையே கொன்று விடுகிறார்கள்.

இதேபோன்று பாகிஸ்தானில் முஸ்லிம்களுக்கு மாத்திரமே நியாயமான உரிமை உண்டு என்று பாகிஸ்தான் நம்பினால், முஸ்லிம் அல்லாதவர்கள் தங்களுக்குத் தாழ்ந்தவர்களாகவும் தங்கள் அடிமைகளாகவுமே வாழ முடியும் என்று நம்பினால், இந்தியாவில் இஸ்லாமுக்கு சாவு மணி அடித்துவிட்டதாகவே ஆகும்" என்று சொன்னவர் காந்தியடிகள். இதனை ஏற்றுக் கொள்ளுமா பா.ஜ.க.வின் மதவாத அரசியல்?

"ராமராஜியம் என்று நான் கூறுவது இந்து ராஜ்ஜியத்தை அல்ல. ராமராஜ்ஜிய தெய்வீக ராஜ்ஜியம், கடவுளின் ராஜ்ஜியம் என்று நான் கூறுகிறேன். எனக்கு ராமரும் ரஹீமும் ஒரே கடவுள். சத்தியமும் நீதியும் கொண்ட ஒரே கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் நான் ஒப்புக்கொள்ளவில்லை.

என் கற்பனையில் ராமர் இந்த பூமியில் வாழ்ந்தாரோ இல்லையோ, ராமராஜ்ஜியத்தின் பண்டைய இலட்சியம் சந்தேகத்திற்கு இடமின்றி உண்மையான ஜனநாயகத்தின் ஒரு இலட்சியமாகும், அதில் மிகவும் கீழ்த்தரமான குடிமகனும் விரிவான மற்றும் விலையுயர்ந்த நடைமுறை இல்லாமல் விரைவான நீதியை உறுதி செய்ய முடியும்” என்று சொன்னவர் அண்ணல்.

"ஒரு சிலர் மட்டுமே செல்வத்தில் மூழ்கி, மக்கள் போதுமான அளவு சாப்பிட முடியாத அளவுக்கு சமத்துவமின்மை நிறைந்த தற்போதைய நிலையில் ராமராஜ்ஜியம் இருக்க முடியாது” என்று சொன்னார்.

ஆனால் பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் இந்திய நாட்டின் நிலைமை என்ன? பா.ஜ.க. ஆட்சியின் தவறான செயல்பாடுகளால் கிராமப்புற, நகர்ப்புற மக்களின் வறுமை அதிகமாகி இருக்கிறது. வேலையின்மை அதிகம் ஆகி இருக்கிறது. அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகமாகி இருக்கிறது. பணக்காரர்களை அதிக பணக்காரர்களாகவும், ஏழைகளை அதிக ஏழைகளாகவும் மாற்றி இருக்கிறது மோடி அரசின் பொருளாதார நடவடிக்கைகள். சமத்து- வமின்மையே அனைத்து நிலைகளிலும் அதிமாகி இருக்கிறது.

பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள், இளைஞர்கள், உழவர்கள் ஆகியோர் பா.ஜ.க. அரசால் கண்டுகொள்ளப்படவில்லை. அவர்களுக்காக சிறப்புக் கவனிப்புத் திட்டங்கள் இல்லை. கல்வியை முன்னேற்றத்தில் இருந்து பின் தங்கிய காலத்துக்கு கொண்டு செலுத்தத் திட்டமிடுகிறார்கள்.

வரிப் போடுவது. அதற்கும் மேல் வரிப் போட்டு வதைப்பதே ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஒற்றை நடவடிக்கையாக இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் விழுமியங்களையும் மதிப்பதே இல்லை. மாநிலங்களை கழிப்பறைகளைவிடக் கேவலமாக நினைக்கிறார்கள். இனம், மொழி, பண்பாடு என பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடு என்ற எண்ணத்தையே மறந்து, ஒற்றைத் தன்மை கொண்டதாக மாற்றத் துடிக்கிறார்கள்.

மதம் நீங்கலாக அனைத்தும் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. தனது சகிப்பின்மையை அவதூறுகளாக வெளிப்படுத்தி சமூகத்தில் சக மனிதனை விரோதிகளாக்கி, அமைதியற்ற சூழலை உருவாக்குவதே பா.ஜ.க.வின் பாணியாக இருக்கிறது. அதற்காக சொந்த மதத்தினருக்கு நன்மை செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. மத உணர்வுகளைத் தூண்டி, ஒரு சில கார்ப்பரேட் கம்பெனிக்கு அரசு மூலதனத்தை திருப்புவது மட்டுமே ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஒற்றைக் கொள்கையாக இருக்கிறது.

"என்னுடைய இந்து மதம் எல்லா மதங்களையும் மதிக்கக் கற்றுக்கொடுக்கிறது. இதில்தான் ராமராஜ்ஜியத்தின் ரகசியம் இருக்கிறது” என்று சொன்னவர் அண்ணல் காந்தி. நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டாம், அடுத்தவரை மதிக்க பா.ஜ.க.வால் முடியுமா? அந்த சகிப்புத் தன்மையாவது உண்டா அவர்களுக்கு?

Also Read: காந்தி பெயரை நீக்கதான் முடியும், இதை உங்களால் சிதைக்க முடியாது : முரசொலி தலையங்கம்!