murasoli thalayangam

பிரதமர் மோடி பாட வேண்டியது ‘வந்தே ஏமாத்துறோம்' : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!

முரசொலி தலையங்கம் (10-12-2025)

இங்கே வள்ளுவர் அங்கே பக்கிம் சந்திரர்!

‘“பத்தாண்டு காலம் ஆளும் பிரதமர் மோடி அவர்களே? இந்திய நாட்டை என்னவாக வளர்த்துள்ளீர்கள்? இந்திய நாட்டின் வளர்ச்சி என்ன? சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றால்.. "வந்தே மாதரம் என்போம்” என்கிறார்.

வந்தே மாதரம் என்போம். இந்தியத் தாயை எல்லோரும் வணங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ‘பிரதமர் ஆன நீங்கள் இந்திய நாடு என்னும் தாயை எப்படி வளர்த்து உள்ளீர்கள், அதைச் சொல்லுங்கள்'என்றால், 'ஜவஹர்லால் நேரு துரோகம் செய்துவிட்டார்' என்கிறார்.

கேட்ட கேள்விக்கு இதுவா பதில். ஆனாலும் கூச்சம் இல்லாமல் வந்தே மாதரம் பாடுகிறார் பிரதமர் மோடி. அவர் பாட வேண்டிய பாடல், ‘வந்தே ஏமாத்துறோம்' என்பதுதான்.

தமிழ்நாட்டுக்கு இரண்டு திருக்குறள் சொன்னால் போதும் என்றுநினைப்பதைப் போல, மேற்கு வங்கத்தில் பக்கிம் சந்திரரின் ஒரு பாட்டைச்சொன்னால் போதும் என்று முடிவெடுத்துவிட்டார்கள். மற்றபடி தமிழ்நாட்டுக்கோ, மேற்கு வங்கத்துக்கோ எந்தத் திட்டமும் தேவையில்லை. தரப் போவதும் இல்லை. தர நினைக்கவும் இல்லை.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1870 ஆம் ஆண்டுகளில் God Save theQueen என்று தொடங்கும் பாடலைக் கட்டாயம் ஆக்கினார்கள். அப்போதுபக்கிம் சந்திரர், 'வந்தே மாதரம்' பாடலை எழுதினார். அவர் எழுதிய ‘ஆனந்தமடம்' நாவலில் இந்தப் பாடல் இருந்தது. ‘தாய் மண்ணே, உன்னை நான் வணங்குகிறேன்' என்பது இந்தப் பாடலின் உள்ளடக்கம் ஆகும். அடிமை இந்தியாவில் சுதந்திர எண்ணத்தை மூட்டுவதற்கு பக்கிம் சந்திரரின் இந்தப் பாடல் பயன்பட்டது. இத-னால் இப்பாடலைப் பாட பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. ஆனாலும் சுதந்திர இந்தியாவில் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 'ஜன கன மன' தான் தேசியப் பாடல் ஆனது.

“எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ, எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ, எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும் தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ, தாயே வணங்குகிறோம், ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும் அன்னை துர்க்கை நீயே, செங்கமல மலர் இதழ்களில் உறையும் செல்வத் திருமகள் நீயே, கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே, தாயே வணங்குகிறோம், திருமகளே, மாசற்ற பண்புகளின் மனையகமே, ஒப்புயர்வற்ற எம் தாயகமே..." என்று அந்தப் பாடல்நீளும். தாய் மண் என்று தொடங்கும் இந்தப் பாடல், குறிப்பிட்ட தெய்வம்என்று பின்னர் மாறும் என்பதால் இதனை விடுத்து பொதுவான பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதில் முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு குறை கண்டுள்ளார் பிரதமர் மோடி. இந்திய விடுதலைப் போராட்டம் பற்றி அவர் ஆற்றி இருக்கும் உரையை அவரது முன்னோர்கள் கேட்டால் தலையில் அடித்துக் கொள்வார்கள்.

இந்தியா தனது விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த போது, அதற்கு எதிராக இருந்த அமைப்பினர்தான் பா.ஜ.க.வின் முன்னோர்கள்.

* இந்திய விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, ‘“சிறைக்குச் செல்வது மட்டுமே தேசபக்தி அல்ல” என்று சொன்னவர் ஹெட்கேவர்.

*டாக்டர் ஹெட்கேவரை 1930 ஆம் ஆண்டு சிலர் சந்தித்து, “நாங்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுக்கப் போவதாகச் சொன்னார்கள். அப்போது டாக்டர்ஜி, ‘நீங்கள் செல்லுங்கள், ஆனால் உங்கள் குடும்பத்தை யார் கவனித்துக் கொள்வார்கள்?” என்று கேட்டார். இதைச் சொல்லி இருப்பவர் கோல்வால்கர்.

*கோல்வால்கர் சொல்கிறார்: “1942 ஆம் ஆண்டுக்குப் பிறகு சட்டத்தை மதிக்கவேண்டிய தேவையில்லை என்று மக்கள் நினைக்கத் தொடங்கினர்”. இதுதான் ‘வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தால் இந்தியா கொந்தளித்துக் கொண்டிருந்த நேரம்.

*கோல்வால்கர் சொல்கிறார்: “பிரிட்டிஷ் காரர்களைத் தூக்கி எறிந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் பலர் உழைத்தனர். உண்மையில் இந்த அளவு உத்வேகம் கொள்ளத் தேவையில்லை.”

*சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி கோல்வால்கர் சொல்கிறார்: “வீர மரணத்தைத் தழுவிய அத்தகைய மனிதர்கள் சிறந்த ஹீரோக்கள் என்பதில் சந்தேகமில்லை. இருந்த போதிலும், அத்தகைய நபர்கள் நம் சமூகத்தில் இலட்சியங்களாகக் கருதப்படுவது கிடையாது”

-இவை அனைத்தும் கோல்வால்கர் எழுதிய நூலில் தான் இருக்கின்றன. இவர்கள் தான் 75 ஆண்டுகள் கழித்து தேசபக்த வகுப்பு எடுக்கிறார்கள்.

“முஸ்லிம் லீக் கட்சி வந்தே மாதரம் பாடலை வெறுத்தது. ஆகவே வந்தே மாதரம் பாடல் இஸ்லாமியர்களை எரிச்சல் அடைய செய்யலாம் என கருதிய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அப்பாடலை தேசிய கீதமாக ஆக்கவில்லை” என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருக்கிறார். முஸ்லீம் லீக்குடன் இந்து மகாசபை கூட்டணி ஆட்சி நடத்தியது பிரதமர் மோடிக்குத் தெரியுமா?

1942 ஆம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற இந்து மகாசபை 24 ஆவதுமாநாட்டில் சாவர்க்கர் பேசும் போது சொல்கிறார்: "நடைமுறை அரசியலிலும், நியாயமான சமரசங்களின் மூலம் நாம் முன்னேற வேண்டும் என்பதை இந்து மகாசபை அறிந்திருக்கிறது. அண்மையில், சிந்துப் பகுதி இந்து மகாசபை தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பின்பேரில், கூட்டணி அரசாங்கத்தை நடத்துவதற்கு முஸ்லிம் லீக்குடனேயே கைகோர்த்துக் கொள்ளும் கடமையை நிறைவேற்றி உள்ளது என்பதைப் பாருங்கள். வங்காளத்தில்என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். மிகப் பணிந்துபோகும்தன்மைகொண்ட காங்கிரசுகாரர்கள்கூட சமாதானப்படுத்த முடியாத, பக்குவமடையாத முஸ்லிம் லீக் கட்சியினர்கூட இந்து மகாசபையுடன் தொடர்பில் வந்த பின்னர் நியாயமான சமரசம் செய்து கொள்பவர்களாகவும் நேசத்தன்மை உடையவர்களாகவும் மாறினர். கூட்டணி அரசாங்கமானது ஃபஸ்லுல் ஹக்கின் தலைமை மற்றும் நமது மதிப்புக்குரிய டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் திறமைமிகு வழிகாட்டுதலின் கீழ் சுமார் ஒரு வருட காலம் இரண்டு சமூகங்களுக்கும் பயன்தரும் வகையில் வெற்றிகரமாகச் செயல்பட்டது” என்று பேசி இருக்கிறார். தனக்குத் தேவை என்றால் எவரையும் உறிஞ்சத் தயங்காதவர்கள் என்பதற்கு இது உதாரணம் அல்லவா?

அதனால்தான் சொல்கிறோம், பிரதமர் பாட வேண்டிய பாடல், 'வந்தே ஏமாத்துறோம்' என்பதுதான்

Also Read: ‘இண்டிகோ’ விமானங்கள் ரத்து செய்வதற்கு காரணம் என்ன? : உண்மையை எடுத்துச் சொல்லும் முரசொலி தலையங்கம்!