murasoli thalayangam

SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!

முரசொலி தலையங்கம்

04.12.2025

ஆணையத்தின் உண்மையான நோக்கம்!

SIR படிவங்களை வழங்க டிசம்பர் 11 வரை கால நீட்டிப்பு தந்துள்ளது தேர்தல் ஆணையம். நவம்பர் 4 ஆம் தேதியன்று SIR படிவங்களை தேர்தல் ஆணையம் கொடுக்கத் தொடங்கியது. நிரப்பிய படிவங்களை டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் தந்தாக வேண்டும் என்று சொன்னார்கள். ஒரு மாத காலத்துக்குள் கோடிக்கணக்கான மக்கள் திரும்பத் தருவது சாத்தியம் இல்லை என்று எடுத்துச் சொல்லப்பட்டது. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் இருந்தது தேர்தல் ஆணையம். தொடர் வலியுறுத்தல்களுக்குப் பிறகு நிரப்பிய படிவங்களை டிசம்பர் 11 ஆம் தேதி வரை திருப்பித் தரலாம் என்று மனமிரங்கி இருக்கிறது தேர்தல் ஆணையம்.

வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று வெளியிடப்படும்.

தேர்தல் சீர்திருத்தத்தை யாரும் தடுக்கவில்லை. முழுமையான வாக்காளர் பட்டியல் தேவை என்பதும், அது சுத்தமான பட்டியலாக இருக்க வேண்டும் என்பதும்தான் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரது வேண்டுகோளாக எப்போதும் இருந்து வந்துள்ளது. இப்போதும் இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், அவசர அவசரமாக SIR பணிகளைச் செய்ய முடியாது, செய்ய வேண்டாம் என்பதுதான் நம்முடைய கோரிக்கை ஆகும். ஆனால் அதைப் பற்றி எல்லாம் தேர்தல் ஆணையத்துக்கு கவலை இல்லை.

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் அனைத்தையும் அழைத்து ஆலோசனை நடத்தி, அவர்களது வேண்டுகோள்களை நிறைவேற்றுவது தான் தேர்தல் ஆணையத்தின் பணியாக எப்போதும் இருந்துள்ளது. ஆனால் இம்முறை அரசியல் கட்சிகள் சொல்வதை, காதில் போட்டுக் கொள்வதே இல்லை. யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் செய்து கொண்டு இருக்கிறது தேர்தல் ஆணையம். SIR பணிகளை மேற்கொள்ளும் சூழல் இல்லை. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

கோடிக்கணக்கானவர்களுக்கு படிவம் கொடுத்து, அதனை திருப்பி வாங்கும் பணி என்பது அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்துள்ளது. அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். பணிச்சுமை காரணமாக மற்ற மாநிலங்களில் அரசு ஊழியர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். வாக்காளர்களுக்கு குழப்பத்தையும், களத்தில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கும் சிக்கல் ஏற்படுத்துகிறது SIR பணி.

கொடுக்கப்பட்ட படிவங்களும் நிரப்பும் நிலையில் இருக்கிறதா என்றால் இல்லை. 2002 வாக்காளர் பட்டியல் எண்ணை இணை, 2005 வாக்காளர் பட்டியல் எண்ணைக் கொடு என்று பலராலும் கண்டுபிடிக்க முடியாத கேள்விகள் அதில் இருக்கிறது. இதைக் கண்டு பிடித்து எழுதுவதற்கான இணையதளம் பல நேரங்களில் முடங்கி இருக்கிறது என்று வாக்காளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

தகவல் பெற முடியாமல் முடக்கி வைக்கும் தேர்தல் ஆணையத்துக்கு கால வரையறை செய்ய தகுதி இருக்கிறதா? ‘உறவினர் பெயரைச் சொல்' என்றால் எந்த உறவினரைச் சொல்வது? என்பது அனைவர் மனதில் எழும் சாதாரணக் கேள்வி ஆகும். 'உறவினர் பெயரைச் சொல்லவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை' என்று தேர்தல் ஆணையர் சொல்கிறார். இது வெறும் வாய்மொழி அறிவிப்பு ஆகும். உறவினர் பெயரைச் சொல்லவில்லை என்பதற்காக படிவம் நிராகரிக்கப்பட்டால், தேர்தல் ஆணையரைப் போய் கேட்க முடியுமா? அவர் பொறுப்பு ஏற்பாரா?

தமிழ்நாடு, சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய ஒன்பது மாநிலங்களிலும், புதுச்சேரி, அந்தமான், லட்சத்தீவு ஆகிய மூன்று யூனியன் பகுதிகளில் SIR பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படி ஒட்டுமொத்தமாக இதுவரை செய்யப்பட்டது இல்லை.

தமிழ்நாட்டில் 2002 ஆம் ஆண்டு 197 தொகுதிகளிலும், 2005 ஆம் ஆண்டு 37 தொகுதிகளிலும் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இப்பணிகளுக்காக 6 மாத காலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்போது அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரு மாத காலம் என்று சொல்லப்படும் அவசரத்தைத் தான் கண்டிக்கிறோம்.

அனைவருக்கும் பொதுவானதாக முந்தைய பணிகள் செய்யப்பட்டன. ஆனால் இப்போது வயது மிக முக்கியமான காரணமாக வைக்கப்பட்டுள்ளது. 38 வயதுக்கு அதிகமானவர்கள் தங்கள் அடையாளச் சான்றை வைக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. இடத்தை அடையாளப்படுத்தியாக வேண்டும். அந்தத் தகவலை பெறுவது அவ்வளவு எளிதல்ல.

பீகாரில் நடந்தது பீதியைக் கிளப்புகிறது. 65 லட்சம் பேர் அங்கு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. 36 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் மாறிவிட்டனர் அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டது. 7 லட்சம் பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்ய விருப்பம் இல்லை என்று சொன்னதாக தேர்தல் ஆணையம் சொன்னது. இந்தத் தகவல்கள் எதற்கும் விளக்கம் அளிக்க, பதில் அளிக்க தேர்தல் ஆணையம் தயாராக இல்லை.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தகுதியான அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க இதனை தேர்தல் ஆணையம் செய்யவில்லை. எதையாவது சொல்லி, அனைவரையும் விலக்கி வைக்கவே தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என்பதே முழு உண்மையாகும்.

Also Read: “அது ‘மக்கள் பவன்’ அல்ல; மக்கள் ‘விரோத’ இல்லம்!” - ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளுத்து வாங்கிய முரசொலி!