murasoli thalayangam

“அது ‘மக்கள் பவன்’ அல்ல; மக்கள் ‘விரோத’ இல்லம்!” - ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளுத்து வாங்கிய முரசொலி!

மொத்தத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாழும் ‘தமிழ்நாடு’ என்ற பெயரே எனக்குப் பிடிக்கவில்லை. மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என்ற பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும். காதுக்கு இனிமையாக இருக்கும். தமிழ் என்ற பெயர் காதில் விழாமல் இருக்கும். இன்பத் தேள் கொட்டாமலாவது இருக்கும் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு:-

தமிழ்நாட்டு மக்களை தேச விரோதிகள் என்பேன். தேசத் துரோகிகள் என்பேன். அவர்களுக்கு இந்திய நாட்டுப் பற்றே கிடையாது என்பேன். குறுகிய எண்ணம் கொண்டவர்கள் என்பேன். தமிழ்நாட்டைத் தவிர அவர்களுக்கு அக்கறை கிடையாது என்பேன்.

தமிழ்நாட்டு மக்கள் வட மாநிலத்து மக்களை அடிக்கிறார்கள் என்பேன். உதைக்கிறார்கள் என்பேன். பீகார் மக்கள் இங்கு நிம்மதியாக வாழ முடியாத வகையில் தமிழ்நாட்டு மக்கள் நடத்துகிறார்கள் என்பேன். வடமாநிலத் தொழிலாளர்கள் இங்கு வர மறுப்பதால் தான், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியும் இங்கு குறைந்து வருகிறது என்பதை நான் கண்டுபிடித்துள்ளேன்.

தமிழ்நாட்டு மக்கள், தமிழ் நீங்கலாக மற்ற மொழி பேசும் மொழிச் சிறுபான்மையினரை தொல்லைதருவார்கள் என்பேன். தமிழ்நாட்டில் மொழிச் சிறுபான்மையினர் அச்சத்தோடு வாழ்கிறார்கள் என்பேன். அவர்களின் மொழியை வீட்டுக்கு வெளியே பேச பயப்படுகிறார்கள் என்பேன்.

அன்னிய சக்திகள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி விட்டார்கள் என்பேன். அந்நிய சக்திகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் இறையாகி விட்டார்கள் என்பேன்.

ஜெர்மன் நாசிக்களின் சிந்தனை தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்டான் என்பேன். அதனால்தான் தமிழர்களைத் தவிர மற்றவர்களை இவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பேன்.

இவர்கள் ஆங்கிலத்துக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பேன். அதனால் தான் இந்தியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்று நான் கண்டுபிடித்தேன்.

தமிழ்நாட்டுப் பள்ளி மாணவ,மாணவியருக்கு அறிவில்லை என்பேன். அடிப்படை அறிவைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்பேன். ஆங்கிலம் தெரியவில்லை என்பேன். அடிப்படைக் கணிதம் தெரியவில்லை என்பேன்.

தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு அறிவில்லை என்பேன். ஆராய்ச்சித் திறன் இல்லை என்பேன். அவர்கள் நடத்துவது எதுவுமே ஆராய்ச்சி அல்ல என்பேன்.

தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் அனைத்தையும் ‘வேஸ்ட்’ என்பேன். எந்தப் பல்கலைக் கழகமும் முறையாக ஒழுங்காக செயல்படவில்லை என்பேன். இங்கு ஆராய்ச்சிகள் நடக்கவில்லை என்பேன்.

தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் அடையாளமாக இருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத்தை மதிக்க மாட்டேன். இலட்சக்கணக்கான மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டத்தை, மசோதாக்களை மதிக்க மாட்டேன். ‘ஊறுகாய் பானை’யில் ஊறப்போடுவேன். ஊசிப் போனதும் ஜனாதிபதிக்கு அனுப்பி விடுவேன். அங்கே நாற்றமடிக்கட்டும் என்று விட்டுவிடுவேன்.

தமிழ்நாட்டுக்கு நன்மை தரும் மசோதாவோ, அரசியல் தீர்மானமோ அது எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மேலும், ‘ரம்மி’ நடத்துபவர்களுக்கு எதிரான சட்டத்தையும் ஏற்க மாட்டேன். ‘ரம்மி’யால் எத்தனை மக்கள் செத்தாலும் எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.

தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வராதீர்கள் என்பேன். இங்கு தொழில் தொடங்கினால் முன்னேற முடியாது என்பேன். தமிழ்நாட்டில் அமைதி இல்லை என்பேன். ‘கொலை நடக்கிறது, பாலியல் நடக்கிறது’ என்று பீதியைக் கிளப்புவேன். ‘பெண்கள் நடமாட முடியவில்லை’ என்பேன். ‘தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்பேன்.

மக்கள் மன்றமான சட்டமன்றத்தை மதிக்க மாட்டேன். அதன் நெறிமுறைகளை மதிக்க மாட்டேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் எழுதி அனுப்பிய உரையைப் படிக்க மாட்டேன். அதை நீக்குவேன். என் விருப்பப்படி சேர்ப்பேன். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்திய நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கும் போதே அதை மதிக்காமல் வெளியேறுவேன்.

ஈராயிரம் ஆண்டு பழமையான திருக்குறளையே திருப்தி எழுதுவேன். திருவள்ளுவருக்கே காவி உடை தைத்து மாட்டுவேன். திருக்குறளுக்கே தப்புத் தப்பாய் பொழிப்புரை சொல்வேன்.அருட்பெருஞ்சோதி வள்ளலாரையும் மடை மாற்றுவேன். மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்படும் அண்ணல் அம்பேத்கரையும், அறிவுலக மேதை காரல் மார்க்சையும் அவமானப்படுத்துவேன். தமிழ்நாட்டு மக்களால் மதிக்கப்படும் தலைவர்களை நான் மதிக்க மாட்டேன்.

பேச்சுரிமை என்ற பெயரால் அவர்கள் பேசுவதையும், எழுத்துரிமை என்ற பெயரால் எழுதுவதையும் நான் ஏற்க மாட்டேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி இங்கு இருப்பதே எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை பெற்ற மாண்புமிகு முதலமைச்சரை மதிக்க மாட்டேன். அவர் கோரிக்கைகளை ஏற்க மாட்டேன்.

உச்சநீதிமன்றம் என் தலையில் கொட்டுவதைப் பற்றி கவலை இல்லை. அவர்களின் தீர்ப்புகள் என்னைக் கட்டுப்படுத்தாது.

‘தினந்தோறும் தமிழ்நாட்டை அவமானப்படுத்த வேண்டும்’ என்பதே என்னுடைய ஒரே இலக்கு. அதை ஜாலியாகச் செய்து வருகிறேன்.

மொத்தத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாழும் ‘தமிழ்நாடு’ என்ற பெயரே எனக்குப் பிடிக்கவில்லை. மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என்ற பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும். காதுக்கு இனிமையாக இருக்கும். தமிழ் என்ற பெயர் காதில் விழாமல் இருக்கும். இன்பத் தேள் கொட்டாமலாவது இருக்கும்.

இப்படி மக்களுக்காகவே வாழும் நான் குடியேறி இருக்கும் இடத்துக்கு ‘மக்கள் பவன்’ என்று பெயர் சூட்டிக் கொண்டேன். ‘லோக் பவன்’ என்று சொல்லும் போது புல்லரிக்கிறது. இன்பத் தேன் பாய்கிறது.

மகாகவி பாரதியாரின் ‘...........’ என்ற வரிதான் இந்த இடத்துக்கு மிகமிகப் பொருத்தமானது!

Also Read: கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!