murasoli thalayangam

கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!

முரசொலி தலையங்கம் (02-12-2025)

காக்கும் அரசு!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாடு - புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா' புயலில் இருந்து மக்களைக் காக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு முன்கூட்டியே எடுத்தது. அதனால் எந்தப் பாதிப்பும் இல்லாமல் மக்கள் காக்கப்பட்டார்கள்.

புதிய புயல் உருவாகிறது என்று தெரிய வந்ததுமே சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்துக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வருகை தந்து, முன் எச்சரிக்கைப் பணிகளை ஆய்வு செய்தார்கள். கனமழை பெய்யும் மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியருடன் காணொளி காட்சி மூலமாக ஆலோசனை செய்து உரிய உத்தரவுகளை பிறப்பித்தார் முதலமைச்சர் அவர்கள். ஒரு கோடி பேருக்குப் புயல் முன்னெச்சரிக்கை குறித்த குறுஞ்- செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.

‘டிட்வா’ புயலுக்கும், வடதமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைக்குமான தூரம்குறைவாக இருப்பதால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உடனடியாகச்செய்ய உத்தரவிட்டார் முதலமைச்சர் அவர்கள். தாழ்வானப் பகுதியில்இருக்கும் மக்கள், மாற்று இடங்களில் உடனடியாக தங்க வைக்கப்பட்டார்கள்.

புயல் பாதிப்பு, அதனால் அதிக மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் முகாம்கள் அமைக்க அரசு உத்தரவிட்டது. தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரத்து 33 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் 1,449 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டது. இதில் 55 ஆயிரத்து 165 பேர் பயனடைந்தார்கள். தமிழ்நாடு முழுவதும் வழங்க 5 கிலோ அரிசி பைகள் 5 இலட்சம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அரசின் முன்னெச்சரிக்கை ஏற்பாடு காரணமாக பெரிய உயிர்ச்சேதங்கள் இல்லை.

பொதுமக்கள் புயல் மழை நேரத்தில் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவித்தது. கட்டுமான இடங்களில் பேரிகேட் போட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மாநகராட்சி சார்பில் முன்னெச் சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. சென்னை முழுவதும் 215 இடங்களில் மழைக்கால நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் இருக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மழை நீர் தேங்கி இருந்தால் அவற்றை அகற்றுவதற்கு அதி திறன் கொண்ட 1,496 மோட்டார்கள், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நவீன வசதிகள் கொண்ட 478 இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள், தாழ்வானப் பகுதிகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களை மீட்பதற்கு 103 படகுகள், 60 நபர்கள் கொண்ட தேசியப் பேரிடர் மேலாண்மை படையினர், 30 நபர்கள் கொண்ட மாநிலப் பேரிடர் மேலாண்மை படையினர் போன்றவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தார்கள்.

புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதி களில் மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 22 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரமும் செயல்ப- டும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 22 சுரங்கப்பாதைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழையினால் சுரங்கப் பாதைகளில் நீர் சூழ்ந்தால் உடனடியாக நீரை அகற்று வதற்கு அதிநவீன மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. இவற்றுடன் கூடுதலாக சுரங்கப்பாதைகள் நீர் சூழ்ந்து பொதுமக்கள் பயன்படாத சூழல் உருவாகினால், பொதுமக்கள் பயன்- பாட்டை தவிர்ப்பதற்கு தானியங்கி தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மக்களை மட்டுமல்ல; இலங்கை சென்று அங்கு சிக்கித் தவித்த தமிழர்களையும் தமிழ்நாடு அரசு காத்துள்ளது. கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவித்த தமிழர்கள் தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சியால் விமானம் மூலம் தாயகம் திரும்பி உள்ளனர். துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா புறப்பட்ட விமானத்தில் 150 தமிழர்கள் உட்பட 300 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள கொழும்பு விமான நிலையம் வந்தடைந்த நிலையில் 'டிட்வா' புயல் எதிரொலியால் இந்தியா திரும்ப முடியாமல் கொழும்பு விமான நிலையத்திலேயே சிக்கித் தவித்தனர்.

150 தமிழர்களும் உண்ண உணவு இல்லாமல், தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. உடனடியாக தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசை தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்தித் தந்தது. பின்னர், தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சியின் காரணமாக இலங்கையில் சிக்கித் தவித்த மக்கள் பத்திரமாக தமிழ்நாடு திரும்பி உள்ளனர்.

‘“மூன்று நாட்களாக இலங்கையில் சிக்கித் தவித்தோம், தொடக்கத்தில் எந்த ஒரு உதவியும் கிடைக்காமல் இருந்த நேரத்தில் ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக உதவிகள் கிடைத்தது. அதற்கு முன்பாக அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டோம். மேலும் வானிலை மோசமாக இருப்பதன் காரணமாக இலங்கையில் இருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாகவே சுமார் மூன்று நாட்களுக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல விமானம் கிடைக்கவில்லை. தூக்கமின்றி உணவின்றி இருந்தோம்.

இலங்கையில் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து, தமிழ்நாடு அரசு சார்பில் வெளிநாடு தமிழர் வாழ் நலத்துறை அமைச்சர் நாசர் எங்களைத் தொடர்பு கொண்டு பேசினார். தூதரகம் சார்பில் அடிப்படை வசதிகளை வழங்க வலியுறுத்திய பிறகு எங்களுக்கான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைத்தது” என்று பேட்டி அளித்துள்ளார்கள்.

கனமழையில் இருந்தும், கடல் சீற்றத்தில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்துள்ளது தமிழ்நாடு அரசு.

Also Read: “இவை தீர்மானங்கள் மட்டுமல்ல! ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதான குற்றப்பத்திரிக்கை!” : முரசொலி தலையங்கம்!