murasoli thalayangam
“இவை தீர்மானங்கள் மட்டுமல்ல! ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதான குற்றப்பத்திரிக்கை!” : முரசொலி தலையங்கம்!
தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மீதான குற்றப்பத்திரிக்கையைப் போல அமைந்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்றைய தினம் தொடங்க இருக்கிறது. இதில் எழுப்ப வேண்டிய முக்கியப் பிரச்சினைகளை வரிசைப்படுத்தியே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
‘எதற்கெடுத்தாலும் குறை சொல்கிறோம்’, ‘எதையும் எதிர்க்கிறார்கள்’, ‘அனைத்தையும் விமர்சிக்கிறார்கள்’ என்று தி.மு.க. மீது ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்கள் புகார் சொல்லித் திரிகிறார்கள். ஆனால்தி.மு.க. வைக்கும் குற்றச் சாட்டுகளுக்கு பதில் சொல்வது இல்லை. எழுப்பும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது இல்லை. தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் ஏதுமில்லை. தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் நிதியை முறையாக வழங்குவது இல்லை. இவை எதற்கும் நேரடியாக பதில் சொல்லாமல், அவதூறு பதில்களையே பா.ஜ.க. தரப்பு இதுவரை வைத்து வருகிறது.
இந்த நிலையில்தான் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய கோரிக்கை முழக்கங்களை தி.மு.க. தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானங்களாக வடிவமைத்து வழங்கி இருக்கிறார்.
“நம் மாநிலத்தின் வளர்ச்சியைப் பார்த்து ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறாமைப்படுகிறது. நிதி ஆணையத்தின் வாயிலாக நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. நிதி ஆணையம் அளித்துள்ள அதிகாரப் பகிர்வுகளை அளிக்க மறுக்கிறது. மாநிலங்களில் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் நிதிட்டங்களின் நிதிச்சுமையை மாநிலங்களின் தலையில் கட்டுகிறார்கள்.
பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சி ஆளும் மாநிலத்துக்கு மட்டுமே நன்மையைச் செய்கிறது. மற்ற மாநிலங்களை புறக்கணிக்கிறது. ஆளுநர்கள் மூலமாக கூட்டாட்சித் தன்மையை சீர்குலைக்கிறது”என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தின் மூலமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
1. புதிய ரயில்வே திட்டங்கள் இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் நிறைவேற்றுவது இல்லை. புதிய வழித்தடத்துக்காக அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு ரூ.31 ஆயிரம் கோடி என்றால் தெற்கு ரயில்வேக்கு ரூ.301 கோடி மட்டும்தான்.
2.பொய்யான காரணத்தைச் சொல்லி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கி விட்டார்கள்.
3. கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு ஒப்புதல் தரவில்லை. மதுரை பன்னாட்டு விமான நிலையத்துக்கும் ஒப்புதல் தரவில்லை.
4. கும்பகோணத்தில் அமைய உள்ள கலைஞர் பல்கலைக் கழக சட்டமுன் வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல் வைத்துள்ளார்.
5. பொது விநியோகத் திட்டம் மற்றும் ஒன்றிய அரசின்பிற நலத்திட்டங்களுக்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கிவரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதிமுறைகளை ஒன்றிய அரசு வகுத்துள்ளது. இதனை நீக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர், பிரதமர் அவர்களுக்கு கடிதம் மூலமாக எழுதி கோரிக்கை வைத்துள்ளார்.
6. நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும்.
7. தமிழ்நாட்டிற்கு சமக்ரசிக்ஷா திட்டத்தின்கீழ் விடுவிக்கப்பட வேண்டிய 3548.22 கோடி ரூபாயை இதுவரை ஒன்றிய அரசு விடுவிக்காமல்நிறுத்தி வைத்துள்ளது.
8. தொழிலாளர் சட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசால் எடுத்து வைக்கப்பட்ட கருத்துகளை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. தொழிலாளர் நலச்சட்டத் தொகுப்புகள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளை, நலன்களைப் பாதிக்கக்கூடாது.
9. இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.
10. ஆசிரியர்களுக்காக கட்டாயத் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வை ஒன்றிய அரசு பாதுகாக்க வேண்டும். உரிய சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.
11. கிராமப்புற ஏழைகளுக்கு மிக முக்கியமான திட்டமாக இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கிறது பா.ஜ.க. அரசு. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.1,290 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். இதற்கான நாட்களையும் குறைத்துள்ளார்கள். அதனையும் அதிகரிக்க வேண்டும்.
- இவைதான் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள் ஆகும்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யும் சட்டப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இதனை நாடாளுமன்றத்தில் எழுப்ப தி.மு.க. உறுப்பினர்கள் முடிவு எடுத்துள்ளார்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில்,‘‘மசோதா மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும், மசோதாவை நிறுத்தி வைப்பதாக இருந்தால் மூன்று மாதத்துக்குள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் மூன்று மாதங்களுக்குள் அதனைச் செய்ய வேண்டும், மறுபரிசீலனை செய்வதற்காக மசோதாவை மாநில அரசுக்கு அனுப்பி, அதே மசோதாவை இரண்டாவது முறையாக ஆளுநருக்கு வந்தால் அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்”என்று குறிப்பிட்டு இருந்தது. இதனை நாடாளுமன்றத்தில் ஒலிக்க இருக்கிறது தி.மு.க.
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஏதோ பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்குமான அரசியல் மோதல்கள் அல்ல. தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகள், தேவைகள் ஆகியவை தான் தீர்மானமாக வடித்துத் தரப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக நிறைவேற்றித் தந்தாக வேண்டும். மேலும் மேலும் பசப்புப் பதில்களை பா.ஜ.க. சொல்லி வந்தால் அரசியல் நெருக்கடிக்கு மேலும் மேலும் உள்ளாகும்.
Also Read
-
“SIR பணிக்கு ஒரு வார கால நீட்டிப்பு என்பது திமுக-வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!” : என்.ஆர்.இளங்கோ!
-
சிவகங்கை பேருந்து விபத்து! : ஆறுதல் மற்றும் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“திண்டுக்கல்லில் சுமார் 22,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன!” : அமைச்சர் இ.பெரியசாமி குற்றச்சாட்டு!
-
“டிட்வா புயலையொட்டி சென்னையில் 22 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்!” : சென்னை மாநகராட்சி தகவல்!