murasoli thalayangam
டெல்லி குண்டு வெடிப்பு : வாய் கிழியப் பேசினால் போதுமா? அமித்ஷா பொறுப்பேற்க வேண்டாமா? - முரசொலி
முரசொலி தலையங்கம் (13-11-2025)
அமித்ஷா பொறுப்பேற்க வேண்டாமா?
டெல்லியில் குண்டு வெடித்துள்ளது. ஆளும் பா.ஜ.க. முதலமைச்சர் தனது பதவியை விட்டு விலகியதாகப் பத்திரிகைகளில் செய்தி இல்லை.
யூனியன் பிரதேசம் என்பதால் டெல்லியின் அனைத்துப் பாதுகாப்பும், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பதவியை விட்டு விலகியதாகச் செய்திகள் இல்லை.
பா.ஜ.க. எங்கே சென்றாலும், ‘இரட்டை இஞ்சின் அரசு தேவை' என்று சொல்லும். ஒன்றியத்திலும், மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சி ஒன்றாக அமைந்தால் வளர்ச்சியைக் கொடுத்துவிடுவோம் என்று பசப்புவார்கள். இரட்டை இஞ்சின் ஆட்சி நடக்கும் டெல்லியில் குண்டு வெடித்து 13 பேர் இறந்துள்ளார்கள். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளார்கள்.
டெல்லி என்றால் ஏதோ மூலையில் அல்ல. தலையில், அதாவது செங்கோட்டைக்கு அருகில் குண்டு வெடித்துள்ளது. ஆளும் தலை சரியாக இல்லை என்பதைத்தானே இது காட்டுகிறது.
கடந்த 19 ஆம் தேதியன்று இரவு 7 மணிக்கு டெல்லி செங்கோட்டைக்கு அருகே சென்ற ஒரு காரில் இருந்து குண்டு வெடித்துள்ளது. செங்கோட்டையில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அரு- கில் இது நடந்துள்ளது. இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளார்கள். பலரும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட கார், அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவருடையது என்றும், தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது என்றும் தெரிய வந்துள்ளது. காஷ்மீர் புல்வாமா பகுதியைச் சேர்ந்த மருத்- துவர் உமர் முகமது ஓட்டி வந்துள்ளார். அவரும் உயிரிழந்து விட்டார். அரியானா மருத்துவமனையில் மருத்துவராக இருந்துள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு இதில் தொடர்பு இருப்பதாக டெல்லி போலீஸ் சொல்லி இருக்கிறது.
குண்டுவெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட், எரிபொருள் எண்ணெய், டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னாள் ஃபரிதாபாத்தில் ஏராளமான வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டது. அதற்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என புலனாய்வு அமைப்பினர் கருதுகிறார்கள்.
கார் குண்டு வெடிப்பு நேரத்து புதிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன. செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் 3 மணிநேரம் அந்தக் கார் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. HR 26 CE 7674 என்ற பதிவெண் கொண்ட ஹூண்டாய் ஐ20 கார், மாலை 3.19 மணிக்கு உள்ளே நுழைவதும், பின்னர் 6.30 மணிக்கு வெளியேறுவதும் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. பார்க்கிங் பகுதிக்குள் அந்தக் கார் நுழையும் போது, அதன் ஓட்டுநர் ஜன்னலில் கை வைத்திருப்பதும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. கார் ஓட்டுநர் நீலம் மற்றும் கருப்பு நிறத்தால் ஆன டீ-ஷர்ட் அணிந்திருப்பதும், காருக்கு வெளியே கையை தொங்கவிட்ட படி இருப்பதும் தெரியவந்துள்ளது. ஹரியானா மாநில பதிவெண் கொண்ட அந்தக் கார், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சேர்ந்தவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
"வெடிகுண்டு வெடித்தபோது பூமியே குலுங்கியது. நிலநடுக்கம் வந்ததைப் போல உணர்ந்தேன். என்னுடைய மகன், கார் குண்டுவெடிப்பில் சிதறிய உடல்களைப் பார்த்து பதறினான். உடலின் சில துண்டுகள் ஜெயின் மந்திர் சுவருக்குள் வந்து விழுந்தது” என்று ஒருவர் பேட்டி தந்துள்ளார். மொத்தம் மூன்று முறை வெடிச் சத்தம் கேட்டதாக பொதுமக்கள் சொல்கிறார்கள். அப்பகுதியில் மனித உடல்களின் பாகங்கள் சிதறிக் கிடந்துள்ளன. சில தலைகள் தனியாகக் கிடந்துள்ளன. நான்கு வாகனங்கள் கருகி இருக்கிறது. வெடிகுண்டு சப்தத்தின் அதிர்வலைகள் 700 மீட்டர் முதல் 990 மீட்டர் வரை உணரப்பட்டுள்ளன.
“இது ஒரு துரதிஷ்டமான சம்பவம்” என்று சொல்லி அமைதியாகி விட்டார் டெல்லி பா.ஜ.க. முதலமைச்சர் ரேகா குப்தா. அவரது கடமை அவ்வளவு தானா? அவருக்கு வேறு எந்தப் பொறுப்பும் இல்லையா? கடமையும் இல்லையா?
“டெல்லி குண்டு வெடிப்பில் சதி செய்த, ஈடுபட்ட ஒவ்வொருவரும் எங்கள் விசாரணை அமைப்புகளின் முழுமையான நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாசொல்லி இருக்கிறார். ‘அமித்ஷா ஆவேசம்’ என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்துக்கு முன்னால் உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டு இருந்தார்? சம்பவங்கள் நடக்காமல் என்ன செய்யப்பட்டது?
கார் குண்டு வெடிப்பு நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு தான் அரியானா மாநிலத்தில் ஃபரிதாபாத் என்ற இடத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்- ளது. அதில் பயங்கர வெடி பொருட்களைத் தயாரிக்கக் கூடிய 350 கிலோ எடை கொண்ட அம்மோனியம் நைட்ரேட் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து இது நடந்துள்ளது. அரியானாவில் இப்போது ஆட்சி செய்வதும் பா.ஜ.க. தான்.
பா.ஜ.க. அல்லாத மாநிலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், பா.ஜ.க.வினர் எத்தகைய வார்த்தை வெடிகுண்டுகளை வீசுவார்கள் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இப்போது சம்பவம் பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் நடந்ததால் அமைதியாகி விட்டார்கள்.
குண்டு வைத்தது யார் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். பாதுகாப்பில் கோட்டை விட்டது யார் என்பதும் அனைவர்க்கும் தெரியும். பொறுப்பான அவர்கள் பொறுப்பேற்க வேண்டாமா? வாய் கிழியப் பேசினால் போதுமா?
Also Read
-
மகளிர் நல்வாழ்விற்காக வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ ஊர்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
740 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் 12 புதிய தோழி விடுதிகள்! : முழு விவரம் உள்ளே!
-
ஒடும் ரயில் - இளைஞர் செய்த செயல் : அதிர்ச்சியடைந்த பயணிகள்!
-
மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக 3 பேருக்கு ஆயுள் தண்டனை! : குஜராத் நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு!
-
Chennai One App - ரூ.1க்கு டிக்கெட் : இந்த சிறப்பு சலுகை பெறுவது எப்படி?