murasoli thalayangam

மருத்துவ திட்டங்களால் மக்களை பாதுகாத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : முரசொலி புகழாரம்!

முரசொலி தலையங்கம் (28-10-2026)

நலம் காக்கும் முதலமைச்சர்!

ஒவ்வொரு தனிமனிதரையும் காக்கும் அரசாக தனது அரசு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி வருகிறார்கள். அதற்காகவே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தந்து வருகிறார்கள்.

அரசுக்கு வரும் கோரிக்கைகளுக்கு மட்டுமல்ல; நேரடியாக மக்களிடம் சென்று கோரிக்கை மனுக்களையும் பெற்று அதனையும் நிறைவேற்றித் தந்து வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.

இந்த வரிசையில் மிக முக்கியமான திட்ட முன்னெடுப்பாக இருப்பது ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் ஆகும். இந்த முகாம்களை ஆகஸ்ட் 2 ஆம் நாளன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் இந்த முகாம்கள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் நடத்த முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதுவரை 446 முகாம்கள் நடந்துள்ளன. இதுவரை 6 லட்சத்து 97 ஆயிரத்து 941 பேர் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசைப் பகுதிகள்,பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டது.

40 வயதுக்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர்இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மன நலபாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக- – பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிட்டார் முதலமைச்சர் அவர்கள். அந்த வகையில் தான் 7 லட்சம் பேரின் நலன் காக்கப்பட்டுள்ளது.

“ஜனநாயகத்தில் மக்கள் நல்வாழ்வு என்பதும் மிகமிக முக்கியமானது ஆகும். நகர்ப்புறத்தில் – படித்த – வசதியானவர்களுக்கு கிடைக்கும் மருத்துவ சேவையானது, கிராமப்புறத்தில் – ஏழை எளிய பாமர மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனைச் செய்து தர வேண்டும் என்று உறுதி ஏற்கிறேன்”என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். அதனைச் செய்து காட்டியும் வருகிறார்கள்.

இந்த முகாமுக்கு வரும் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை கட்டணம் இல்லாமல் செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.20 ஆயிரம் செலவிலும், அரசு மருத்துவமனைகளில் ரூ.4 ஆயிரம் செலவிலும்தான் முழு உடல் பரிசோதனை செய்ய முடியும். ஆனால் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் முழு உடல் பரிசோதனைக்கும் கட்டணம் இல்லை.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டத்தில் 1.46 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ததும் உடனடியாக அட்டை வழங்க முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார். முகாம்களில் பங்கெடுத்த 21 ஆயிரத்து 191 பேருக்கு உடனடியாக மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வைக் காக்கும் ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, பாதம் பாதுகாப்போம், மக்களைத் தேடி ஆய்வக சேவைகள், இதயம் காப்போம் திட்டம், சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம், வணிகர்களை தேடி மருத்துவ திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவம், முதல்வர் மருந்தகம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து மக்களைக் காத்து வருகிறார் முதலமைச்சர்.

கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்றி வைத்து விட்டு உரையாற்றிய முதலமைச்சர் அவர்கள்,“ஜெனரிக் மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல் கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும்”என்று அறிவித்தார். மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

முதல்வர் மருந்தகங்களில் பொது மக்களுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் தனியார் மருத்துவமனை களுக்குச் செல்லும் பொதுமக்களும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கான மருந்துகளை குறைந்த விலையில் முதல்வர் மருந்தகங்களிலிருந்து வாங்கி பயன் பெற முடியும்.

வறுமையின்மை - பட்டினி ஒழிப்பு - தரமான கல்வி- பாலின சமத்துவம் - தூய்மையான குடிநீர் - குறைந்த விலை – வேலைவாய்ப்பு – பொருளாதார குறியீடு – தொழில் – உள்கட்டமைப்பு – சம வாய்ப்புகள் - அமைதி - மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு - நுகர்வு – உற்பத்தி ஆகிய அனைத்து குறியீட்டிலும் தமிழ்நாடு மிகச் சிறந்து விளங்குவதாக ஒன்றிய அரசின் ‘நிதி ஆயோக்’ அறிக்கை சொல்கிறது. அதற்கு இது போன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள்தான் அடிப்படைக் காரணம் ஆகும்.

உயர்தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டமானது ஐக்கிய நாடுகள் சபை அமைப்பின் விருதையும் பாராட்டையும் பெற்றுள்ளது. மற்ற திட்டங்கள் அனைத்தும் மக்களின் விருதைப் பெற்றுள்ளன.