murasoli thalayangam
பீகார் தேர்தல் - பா.ஜ.க ஆசையில் மண்ணைப் போட்டது 'இந்தியா' கூட்டணி : முரசொலி!
முரசொலி தலையங்கம் (27-10-2025)
பழுதடைந்த இரட்டை இயந்திரம்!
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலானது, இந்தியாவுக்கே முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் நாற்காலியை கவிழ விடாமல் காப்பாற்றி வருகிறார் பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார். அவரது தோளில் தான் பீகாரில் பா.ஜ.க. பயணம் செய்கிறது. இரண்டு கட்சிகளும் சமஅளவில் தொகுதியைப் பிரித்து போட்டி இடுகின்றன. தங்களைப் பற்றி பேசுவதை விட லாலு பிரசாத் கட்சியைப் பற்றி அவதூறு பேசுவதையே பா.ஜ.க.வும் நிதிஷ் கட்சியும் செய்து வருகின்றன.
‘இந்தியா’ கூட்டணியின் வலிமையான கட்சிகளாக காங்கிரஸ் கட்சியும், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியும் உள்ளன. ராகுல் காந்தியும் தேஜஸ்வீயும் ‘இரு சகோதரர்கள்' போல சில மாதங்களாக பீகாரில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சிகளுக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை பா.ஜ.க. வால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இந்தியா கூட்டணி நிலைக்காது, ராகுலுக்கும் தேஜஸ்வீக்கும் பிரச்சினை, தேஜஸ்வீயை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க மறுக்கிறார் ராகுல்... என்றெல்லாம் சில வாரங்களாக அவதூறுகளையும் வதந்திகளையும் விதைத்து ‘இந்தியா' கூட்டணியை பலவீனப்படுத்தி வந்தது பா.ஜ.க.
இவர்களது ஆசையில் மண்ணைப் போட்டது 'இந்தியா' கூட்டணி. தேஜஸ்வீயை முதலமைச்சர் வேட்பாளராக ‘இந்தியா' கூட்டணி அறிவித்தது. ஆர்.ஜே.டி., காங்கிரஸ், ஜே.டி.யு., இடதுசாரி கட்சிகள் சேர்ந்த வலிமையான அணியாக உருவாகி உள்ளது. “நாங்கள் அரசாங்கத்தை அமைக்க மட்டுமல்ல, பீகாரின் வளர்ச்சிக்காகப் பணியாற்றவும் கைகோர்த்துள்ளோம்.” என்று சொல்லி இருக்கிறார் தேஜஸ்வீ.
“அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? நிதீஷ் குமார் தலைமையில் தேர்தலை சந்திக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில்கூட ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தேர்தலை எதிர்கொண்டார்கள். பின்பு வேறு ஒருவர் முதல்வர் ஆனதைப் பார்த்தோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. நிதிஷ் குமாரை பா.ஜ.க.வினர் முதல்வராக்கப் போவதில்லை. அவர்கள் தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய ஜனதா தளத்தையும் அழித்து விடுவார்கள்" என்று தேஜஸ்வீ பரப்புரை செய்து வருவது பீகார் மக்களிடம் நன்கு எடுபட்டு வருகிறது.
பீகாரில் வேலை வாய்ப்பு தான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதனையே தனது வாக்குறுதியாக தேஜஸ்வீ கொடுத்துள்ளார்.
“பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கச் செய்வதற்கான சட்டத்தை 20 நாட்களுக்குள் நிறைவேற்றுவோம். அந்த சட்டத்தின் அடிப்படையில் 20 மாதங்களுக்குள் அனைத்து ஆட்சேர்ப்பு பணிகளையும் முடிப்போம்” என்று அறிவித்துள்ளார். ‘“அரசு வேலை என்றால் அலுவலகம் ஒன்றில் மட்டும் வேலை இல்லை. சுகாதாரம், கல்வி, விவசாயம், கட்டுமானம், சமூக நலன் போன்ற துறைகளில் பெரும் பணியிடங்கள் உருவாக்கப்படும். மாநிலத்தின் நிதியையும் மாற்றியமைத்து இதைச் செய்ய முடியும்” என அவர் சொல்லி இருக்கிறார்.
தேஜஸ்வீயை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது பா.ஜ.க.வை திணறடித்துள்ளது. பா.ஜ.க. வின் இரட்டை எஞ்சின் பேச்சு எடுபடவில்லை. “எதிர்வரும் தேர்தலானது யாரை சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக அல்லது முதல் மந்திரியாக ஆக்க வேண்டும் என்பதைப் பற்றியது அல்ல. பீகாரில் காட்டாட்சி திரும்புமா அல்லது மாநிலம் வளர்ச்சிப் பாதையில் தொடருமா என்பதை இந்த தேர்தல் தீர்மானிக்கும். லாலு-ராப்ரி அரசாங்கம் அமைந்தால், காட்டாட்சி மட்டுமே வரும், அதே சமயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பீகார் மாநிலம் வளர்ச்சியடைந்து, நாடு முழுவதும் தனது அடையாளத்தை பதிக்கும்.” என்று அமித்ஷா சொல்லி இருக்கிறார்.
பா.ஜ.க.வின் முழக்கங்களில் ஒன்று இரட்டை எஞ்சின் ஆகும். இதனைக் கடுமையாக விமர்சித்துள்ளார் தேஜஸ்வீ. “ஒரு எஞ்சின் ஊழல், மற்றொரு எஞ்சின் குற்றம்” என்று சொல்லி இருக்கிறார் தேஜஸ்வீ.
இதுவரை நிதிஷ்குமார், பா.ஜ.க. ஆட்சி பீகாருக்கு என்ன செய்தது? பீகார் மாநில முதலமைச்சராக பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தும் அவர் மாநிலத்தை முன்னேற்றவில்லை. அவரது ஆட்சியில் பீகார் அனைத்துத் துறையிலும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது.
பீகார் இந்தியாவில் மிகக் குறைந்த நகர்மயமாக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாகவே எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறது ஒரு புள்ளிவிபரம். பீகாரின் வளர்ச்சித் துறை மிகமிகப் பின் தங்கி உள்ளது. பீகாரில் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பது தேசிய விழுக்காட்டை விட அதிகமாக உள்ளது. பீகாரில் வேலை வாய்ப்பு குறைவாக இருப்பதால் பலர் வேலை தேடுவதில் கூட ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்களாம். பீகாரில் இளைஞர்கள் அதிகம். அவர்களுக்கான எந்தத் திட்டத்தையும் ஒன்றிய பா.ஜ.க. அரசும் உருவாக்கவில்லை. நிதிஷ்குமார் அரசும் உருவாக்கவில்லை.
நடுநிலைப் பள்ளியை விட்டு பள்ளிப் பிள்ளைகள் விலகுவது தேசிய சராசரியை விட ஐந்து மடங்கு அதிகம் ஆகும். தேசிய விழுக்காடு என்பது 5.20 ஆகும். ஆனால் பீகார் 25.90 விழுக்காடு ஆகும். கல்வி, தொழில், நகர்மயமாக்கல், வருமானம் ஆகிய அனைத்திலும் பீகார் மாநிலம் மிகமிகப் பின் தங்கி இருப்பதாக 'டைம்ஸ் ஆப் இந்தியா' புள்ளிவிபரங்களுடன் பட்டியலிட்டுள்ளது.
இதன் பிறகும் இரட்டை எஞ்சின் அரசு என்று பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷாவும் சொல்வது கேலிக்குரியது மட்டுமல்ல, மக்களை ஏய்ப்பது ஆகும். பா.ஜ.க. ஆட்சி இயந்திரம் என்பது எப்போதும் பழுதடைந்த இயந்திரம்தான். வகுப்புவாத எண்ணமும் பிளவுவாதமும்தான் அவர்களிடன் செயல்படும். மற்ற அனைத்து பாகமும் என்றும் எப்போதும் வேலை செய்யாது.
Also Read
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மனிதாபிமானமற்று செயல்படும் பா.ஜ.க அரசு : பெண் மருத்துவர் மரணம் - ராகுல் காந்தி விமர்சனம்!