murasoli thalayangam

வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!

முரசொலி தலையங்கம்

18.09.2025

வக்பு வழக்கில் வந்துள்ள தீர்ப்பு!

வக்பு சட்டத்தையும், அதன் நோக்கத்தையும் சிதைக்க நினைத்தது பா.ஜ.க. அரசு. அதற்குத் தடை போட்டு விட்டது உச்சநீதிமன்றம்.

ஆட்சிக்கு வந்தது முதல் பா.ஜ.க. செய்யும் ஒரே செயல், இசுலாமியர்களைக் குறி வைப்பதுதான். CAA, NRC, மதரஸா சட்டம், ஒரே குடியியல் சட்டம் (UCC), காஷ்மீரைப் பிரித்தது, 370 நீக்கம், பாபர் மசூதி இடிப்பு ஆகிய அனைத்தும் இந்த வகைப்பட்டதுதான். இதன் தொடர்ச்சியாகத் தான் வக்பு சட்டத் திருத்தம் செய்தார்கள். நள்ளிரவில் நிறைவேற்றினார்கள் இந்தச் சட்டத்தை.

கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் நாள் நள்ளிரவில் “ஒற்றுமை வக்ஃப் மேலாண்மை, திறன் மற்றும் மேம்பாடு (UMEED)” என்ற புதிய மசோதாவை மக்களவையில் நிறைவேற்றினார்கள். 288 உறுப்பினர்கள் இந்த மசோதாவை ஆதரித்தார்கள். 232 பேர் எதிர்த்து வாக்களித்தார்கள். இரண்டுக்கும் வேறுபாடு 56 வாக்குகள் தான். இதேபோல் மாநிலங்களவையில் ஏப்ரல் 3 நள்ளிரவில் நிறைவேற்றினார்கள். மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகள் பதிவானது. மசோதாவுக்கு எதிராக 95 வாக்குகள் பதிவானது. வேறுபாடு 33 வாக்குகள் தான். மக்களவை உறுப்பினர்கள் 232 பேராலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 95 பேராலும் நிராகரிக்கப்பட்டது தான் இந்தச் சட்டம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கான மத, கல்வி, பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாக்கிறது. அதனைச் சிதைக்கும் வகையில் இந்த சட்டத் திருத்தத்தைச் செய்தார்கள். 2023 ஆம் ஆண்டு முதல் சிறுபான்மையின ஆணையக் கூட்டம் நான்கு முறை நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் இதுகுறித்து ஒருமுறை கூட விவாதிக்கவில்லை.

இசுலாமிய சிறுபான்மையினர் சொத்துகளைப் பாதுகாக்கத்தான் வக்பு சட்டம் இருக்கிறது. ஆனால் இசுலாமியர்களின் சொத்துக்களைக் குறிவைத்துப் பறிக்கவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 'முஸ்லிம் சமுதாயத்தின் சொத்துக்களைக் கைப்பற்றும் முயற்சிதான் இந்தச் சட்டம்' என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சொன்னது.

இந்த சட்டத்திருத்தத்தை திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்த்தது. “இந்தியத் திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

அனைத்து சிறுபான்மையினரின் நலத்தினையும் பேணிக் காக்கும் கடமை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது. ஆனால் இந்த நல்லிணக்கத்திற்கும் சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ஆம் ஆண்டின் வக்பு சட்டத்தினைத் திருத்துவதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த முன்வரைவினை (The Waqf (Amendment) Bill, 2024) முழுமையாக திரும்பப் பெற வேண்டும்” என்று தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தன. அப்போது இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வந்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்டத்தில் சில திருத்தங்களுக்கு மட்டும் தடை விதித்து மாண்பமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

வக்புக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். வக்பு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும் வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை விதித்துள்ளது. 'வக்பு பயனர்' என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய வக்பு வாரியத்தில் நான்கிற்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது. இந்த வாரியங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்– மையாக இருப்பதை உறுதி செய்துவிட்டது உச்சநீதிமன்றம்.

வக்பு வாரியங்களில் தலைமைச் செயல் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக கருத்துக் கூறிய உச்சநீதிமன்றம், “முடிந்த வரை இந்தப் பதவிக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நபரை, வக்பு வாரியத்தின் செயலாளராக ஏற்கனவேபணியாற்றிய ஒருவரை நியமிக்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என்றும் அறிவுரை சொல்லி இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக இந்த சட்டத் திருத்தங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை என்றாலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்நோக்கமான திருத்தங்களுக்குத் தடை விதித்து விட்டது உச்சநீதிமன்றம். பா.ஜ.க. அரசின் உள்நோக்கங்களை உச்சநீதிமன்றம் உணர்ந்து தடை விதித்துவிட்டது. முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது.

Also Read: ‘அன்புக்கரங்கள்' திட்டம் : கருணையின் முதல்வராகக் காட்சி தருகிறார் மு.க.ஸ்டாலின்... முரசொலி புகழாரம் !