murasoli thalayangam

“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!

முரசொலி தலையங்கம்

16.09.2025

ஒரு தமிழன் என்பதால்...!

இளையராஜாவுக்கு 'இசைஞானி' என்று பட்டம் சூட்டினார் முத்தமிழறிஞர் கலைஞர். 'அது எனக்கு பட்டமாக அல்ல, பெயராகவே ஆகிவிட்டது' என்றார் இளையராஜா.

1994 ஜனவரி 21-ம் தேதி சென்னையில் ஆர்.ஆர்.சபாவில் முத்தமிழ் பேரவையின் சார்பில் நடந்த விழாவில் நாதஸ்வர வித்வான் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நினைவாக இளையராஜாவுக்கு ‘ராஜரத்தினா’ விருதை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். அந்த விழாவில் பேசிய கலைஞர் அவர்கள்,“இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டத்தை முன்பு, காரைக்குடியில் நடந்த விழாவில் நான்தான் வழங்கினேன். அதன் பிறகு அவர் எவ்வளவோ பட்டங்களைப்பெற்று விட்டார்.

பெண்கள் எவ்வளவோ ஆபரணங்கள் அணிந்தாலும் மங்கலத்தாலிக்கு அவை ஈடாகாது. அதுபோல காரைக்குடியில் நான் முதலில் கட்டிய தாலியான 'இசைஞானி' என்ற பட்டத்துக்கு அடுத்தப்படிதான் மற்ற பட்டம் எல்லாம். முன் கூட்டியே திட்டமிடாமல் இதயத்தில் இருந்த விருப்பத்தினால் அந்தப் பட்டத்தை நான் அவருக்கு வழங்கினேன்” என்றார். இளையராஜா எத்தனையோ பட்டங்களைப் பெற்றாலும் கலைஞர் அவர்கள், தன் இதயத்தில் இருந்து வழங்கிய இசைஞானி பட்டம்தான் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. திரைப்பட விளம்பரங்களிலும் திரைப்படங்களிலும் ‘இசைஞானி இளையராஜா' என டைட்டில் கார்டு இடம்பெறுகிறது. இதோ இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், இசை ராஜா' என்ற பட்டத்தைச் சூட்டி இருக்கிறார். அது இன்னொரு பெயராகவே ஆகப் போகிறது.

இசையுலகத்தின் மாபெரும் மேதையான இளையராஜாவுக்கு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்திய பாராட்டு விழா என்பது பத்தோடு பதினொன்று என்பது மாதிரியான விழா அல்ல. ‘உலகில் எங்கும் ஒரு கலைஞனுக்கு, அதுவும் இசைக் கலைஞனுக்கு அரசாங்கம் இப்படி ஒரு விழா நடத்தியதாகக் கேள்விப்படவே இல்லை' என்று இளையராஜாஅவர்கள் சொன்னது போன்ற விழா. ஒரே ஒரு ஊரில், ஒரே ஒரு ராஜா என்பதுபோல, ஒரே ஒரு இசை ராஜாவுக்கு இத்தகைய விழா நடத்தப்பட்டுள்ளது.

இந்த விழா குறித்து சமூக ஊடகங்களில் வந்த பாராட்டுகள்தான் மிகமிக முக்கியமானது. எழுத்தாளர் சபிதா எழுதி இருக்கிறார்..."முதலில் தமிழக முதலமைச்சருக்கு இதயபூர்வமான நன்றி. கட்சி சார்பாகவோ, அரசுக்கு ஆதரவாகவோ இல்லை. ஒரு இசையின் ரசிகையாக இருந்து இதை உளமாரச்சொல்கிறேன். கலைஞரின் மகன் என்பதை கலைஞருமே உணர்ந்திருக்கக் கூடிய தருணம் நேற்று. சாதாரணமாக நடைபெறும் சிறு அளவிலான மாவட்ட பொது நிகழ்ச்சிகளிலேயே அரசியல் தலையீடு எப்படி இருக்கும் என்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் நேற்று முழுமையானஇசைஞானி விழாவாக மட்டுமே இருந்தது. எங்கெங்கு காணினும் இளையராஜாவின் படங்கள், அமைச்சர்கள், கட்சி உறுப்பினர்கள் என அனைவருமே பின்னாலிருந்து ராஜாவை மட்டுமே பெருமைப்படுத்திய நிகழ்ச்சி.

முதலமைச்சர் அவர்கள் விழா ஆரம்பித்தது முதல் கடைசிவரை இருந்துரசித்தது, ஒவ்வொரு முறையும் ராஜா எழுந்து நிற்கும்போதும் வரும்போதும் கூடவே மரியாதை செய்தது, இசைஞானி இளையராஜா பேரில் இனி வருடத்திற்கொருமுறை விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தது, பாரத ரத்னா விருதுக்காக கோரிக்கை வைத்தது எல்லாவற்றிற்கும் மேலாக சங்க பாடல்களுக்கு இசையமைக்கும்படி ராஜாவைக் கேட்டுக்கொண்டது எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

துணை முதலமைச்சர் உதயநிதியின் வரவேற்புரை கூட நிகழ்ச்சியின் தன்மைக்கேற்ப பாந்தமாக இருந்தது. எங்கும் தங்களை முன்வைத்துக் கொள்ளாமல் இசை நிகழ்வை அற்புதமாக நடத்திய தமிழக அரசுக்கும், எந்த நெருக்கடியோ குழப்பங்களோ ஏற்படாமல் தெளிவான திட்டங்களை வகுத்து அதை செவ்வனே செயல்படுத்திய அதிகாரிகளுக்கும் மிக்க நன்றி” என்று எழுதி இருக்கிறார்.

ஸ்ருதி டி.வி. உரிமையாளர் கபிலன் எழுதி இருக்கிறார்.. “அரை நூற்றாண்டாக உலகமெங்கும் வாழும் தமிழர்களை தனது இசையால் தாலாட்டி வரும் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்திய தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், நிகழ்வுக்கு உடன் உழைத்த மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

சிம்பொனி கலைஞர்களுக்கு முந்தைய நாளே துணை முதல்வர் உதயநிதி நேரில் சென்று சிறப்பு விருந்து மற்றும் பரிசுகளை அளித்தார். யோசித்துப் பாருங்கள் — ஒரு மாநிலத்தின் துணை முதல்வர் நேரடியாக வந்துஉரையாடி சென்றது அந்த கலைஞர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி தந்திருக்கும்!

முன்பெல்லாம் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்தால் அனைவருக்கும் கிடைக்காது. ஆனால் நேற்றைய நிகழ்ச்சி – அனைத்து சேனல்களும் ஒளிபரப்ப media out தலைமைச் செயலகத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Digital mediaக்காக DIPR- ன் YouTube சேனலில் logo இல்லாமல், pure raw out கொடுக்கப்பட்டது.(raw out என்பது — முதல்வரின் படமோ, நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு பேனரையோ வீடியோ மீது overlay செய்யப் படாமல், சுத்தமான காட்சி அளிப்பது.) இது எதிர்பாராதது.

நேற்று இரவு இளையராஜா நிம்மதியாக தூங்கி இருப்பார். கலைஞரின் மகன் நடத்தும் அரசு, ஒரு இசை கலைஞருக்கு விழா எடுக்கவில்லை என்றால் தான் ஆச்சர்யம்” என்று எழுதி இருக்கிறார் ஸ்ருதி டி.வி.கபிலன்.

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால், முதலமைச்சரிடம் இளையராஜா அவர்கள் கேட்டார்கள்... “எதுக்காக என் மீது அவர் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை இப்போது வரைக்கும் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை” என்றார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மெல்லச் சிரித்தார்கள்.

ஒரே காரணம் தான், இளையராஜா தமிழன் என்பதால்! உலகை வென்ற தமிழன் என்பதால்! உலகுக்கு தமிழர்தம் கலையைக் கொண்டு சேர்த்த தமிழன் என்பதால்!

Also Read: “விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!