murasoli thalayangam

“தமிழர்கள் தாய்மொழியை விட்டுத் தர மாட்டார்கள்!” : தமிழ்நாடு பெற்ற பாராட்டை விளக்கிய முரசொலி!

இருபது ஆண்டுகளாகப் பிரிந்து இருந்த தாக்கரே சகோதரர்களை ஒன்றாக்கி விட்டது பா.ஜ.க.வின் இந்தித் திணிப்பு. இருபது ஆண்டுகளுக்கு முன்பு பால்தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேவும், அவரது சகோதரர் மகன் ராஜ் தாக்கரேவும் பிரிந்தார்கள்.

சிவசேனா கட்சியில் இருந்து கருத்து வேறுபாட்டால் 2005ஆம் ஆண்டு பிரிந்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனை என்ற அமைப்பை நடத்தி வந்தார் ராஜ் தாக்கரே. இவர்கள் இருவரது தனித்தனிக் கட்சியானது பா.ஜ.க. என்ற கட்சியின் வளர்ச்சிக்கு எளிதானது.

இப்போது உத்தவ் தாக்கரே கட்சியையும் இரண்டாகப் பிரித்தது பா.ஜ.க. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு சிவசேனாவை உருவாக்கி வைத்துள்ளார்கள். இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சிதான் பா.ஜ.க.வின் பாணியாகும். சொந்த பலத்தில் இல்லாமல் அடுத்தவர் பலவீனத்தில் வாழ்வதுதான் பா.ஜ.க.வின் பழக்கம்.

இருபது ஆண்டுகளுக்கு முன் பிரிந்த சகோதரர்களை, பா.ஜ.க.வின் இந்தி மொழித் திணிப்பு ஏகாதிபத்தியம் ஒன்றிணைத்து விட்டது. தமிழ்நாட்டைப் போலவே இந்தித் திணிப்புக்கு எதிராக கடுமையாகப் போராடத் தொடங்கி விட்டது மராட்டியம்.

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனை ஆகிய கட்சிகள் கடுமையாக இறங்கியது. காங்கிரஸ் கட்சியும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸும் இப்போராட்டத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து பங்கெடுத்தது.

மராட்டிய மாநிலத்தில் நான்கு பெரிய அரசியல் கட்சிகளும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் இறங்கியதை ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு எதிர்பார்க்கவில்லை. எனவே இந்தியை பள்ளிக் கூடங்களில் கட்டாயம் ஆக்கும் இரண்டு அரசாணைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது பா.ஜ.க. அரசு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்பை தமிழ்நாடு கடுமையாக எதிர்ப்பதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து வருகிறார்கள் பா.ஜ.க. ஆதரவாளர்கள். ஆனால் மராட்டியத்தில் என்ன நடந்தது? பா.ஜ.க. ஆளும் கூட்டணி அரசே, இந்தித் திணிப்பு அரசாணைகளை திரும்பப் பெற்றுள்ளது. மும்மொழிக் கொள்கை அல்ல, இருமொழிக் கொள்கைதான் என்பதை மகாராஷ்டிரா மாநில அரசே ஏற்றுக் கொண்டு விட்டது.

இந்தித் திணிப்புக்கு எதிரான மாபெரும் பேரணியை கடந்த 5 ஆம் தேதியன்று மும்பையில் ஏற்பாடு செய்திருந்தார்கள் உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும். இந்தித் திணிப்பு அரசாணைகளை பா.ஜ.க. அரசு திரும்பப் பெற்றதால் அக்கூட்டமானது வெற்றி விழாக் கூட்டமாக மாற்றப்பட்டது.

இருபது ஆண்டுகள் கழித்து தாக்கரே சகோதரர்கள் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்று, ஒன்றாகக் காட்சி அளித்தது அம்மாநில மக்களுக்கு மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது. அவர்களது தாய்மொழியான மராத்தி மொழியைக் காக்க இருவரும் ஒன்று சேர்ந்துள்ளார்கள் என்பது அரசியல் வரலாற்றில் முக்கியமானது ஆகும்.

மொழிக் காப்பு என்பது மிகமிக முக்கியம் என்பதை தமிழ்நாட்டின் வழியில் மராட்டியமும் வழிமொழிந்திருக்கிறது. “இந்தித் திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஒற்றுமையே நமது பலம். மராத்தியர்களைப் பிரிக்க பா.ஜ.க. நினைக்கிறது. மராத்தியர்களான நாம் நமக்குள் சண்டையிடத் தொடங்கியதும், டெல்லியின் அடிமைகள் நம்மை ஆளத் தொடங்கினார்கள்” என்று சொல்லி இருக்கிறார் உத்தவ் தாக்கரே.

“எங்கள் இருவரையும் ஒன்றிணைத்ததன் மூலமாக பால் தாக்கரேவால் செய்ய முடியாததை இன்றைய பா.ஜ.க. முதலமைச்சர் செய்து காட்டிவிட்டார். இங்கு மும்மொழியைத் திணிக்கிறார்கள். ஆனால் உத்தரப்பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாவது மொழி என்ன என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. மூன்றாவது மொழிக்கான தேவை இந்தியாவில் என்ன இருக்கிறது?

வெறும் 200 ஆண்டு கால வரலாறு கொண்டதுதான் இந்தி. மற்றபகுதிகளையும் சேர்த்து மராட்டிய மன்னர்கள் ஆண்ட போதும் மராத்தியை மராட்டிய மன்னர்கள் திணிக்கவில்லை. இன்று பிரித்தாளும் சூழ்ச்சியாக இந்தியை பா.ஜ.க.வினர் திணிக்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் இருந்து மும்பையைப் பிரிப்பதற்காகத்தான் மும்மொழிக் கொள்கையை திணிக்கிறார்கள். மொழிப்பிரச்சினைக்கு பிறகு ஜாதிப் பிரச்சினையை வைத்து மக்களைப் பிரிப்பார்கள்” என்று ராஜ் தாக்கரே சொல்லி இருக்கிறார்.

தமிழ்நாட்டின் மொழிப்பற்றையும், போராட்டத்தையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் பாராட்டி இருக்கிறார் ராஜ் தாக்கரே. ‘இந்தி பேசும் மாநிலங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளன. ஆனால் இந்தி பேசாத மாநிலங்கள் முன்னோக்கிச் செல்கின்றன.

இருந்த போதிலும் எங்கள் மீது இந்தியை ஏன் திணிக்கிறீர்கள்’ என்று கேட்டு இருக்கிறார் ராஜ் தாக்கரே. ‘எந்தக் காலத்திலும் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை விட்டுத் தர மாட்டார்கள். தென்னிந்திய பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்தாலும் தமிழை எந்தச் சூழலிலும் விட்டுத் தர மாட்டார்கள்’ என்பதையும் ராஜ்தாக்கரே சொல்லி இருக்கிறார்.

மொழி என்பது அரசியல் முழக்கமல்ல. அது ஒரு பண்பாட்டின் அடையாளம். ‘இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது அரசியல் போராட்டமல்ல, பண்பாட்டுப் போராட்டம்’ என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். இந்தியால் மட்டுமல்ல; எந்த மொழியாலும் தமிழை அழிக்க முடியாது. ஆனால் தமிழர் பண்பாடு சிதைக்கப்படும்’ என்று அவர் சொன்னார்.

அதனால் தான், ‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற அடிப்படையில் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் போராடினார்கள். அதே போராட்டத்தீயை இன்று வரை அணையாமல் காத்து வருகிறார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இப்போராட்டங்களுக்கு இதுவரை அரசியல் உள்நோக்கம் கற்பிக்கப்பட்டது. இன்று மொழிப் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தை மராட்டியம், கர்நாடகம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் உணர்ந்து வருகின்றன.

மொழி எதேச்சதிகாரத்துக்கு எதிரான தேசிய இனங்களின் போராட்டமானது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகி வருகிறது என்பதும், அதனை இந்தித் திணிப்பு வாதிகளால் தடுக்க முடியாது என்பதும், இப்போராட்டமானது மாநில எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுமைக்குமான போராட்டமாக வடிவெடுக்கும் என்பதையும்தான் மராட்டிய நிகழ்வுகள் காட்டுகின்றன.

Also Read: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்... விடுபட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு என்ன ?