murasoli thalayangam

இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!

“கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்காக இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்றனர். அவர்கள் மீன் வளங்களைக் கொள்ளையடிப்பதோடு கடல் தாவரங்களையும் கடுமையாக சேதப்படுத்துகின்றனர். இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக மீன் பிடிப்பதற்கு இந்திய அரசும் ஆதரவளிக்கவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம்.

இந்தப் பிரச்சினைக்கு தூதகர ரீதியில் தீர்வு காண இலங்கை தயாராக உள்ளது. சர்வதேச சட்டங்களின் படி நிறுவப்பட்ட கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். இந்தியாவில் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அரசியல் காரணங்களுக்காகவே கச்சத்தீவு விவகாரத்தை எழுப்புகின்றன” என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி இருக்கிறார் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜிதா ஹெராத்.

கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பதை அரசியல் காரணங்களுக்காக எழுப்பவில்லை. இந்திய மீனவர்களின் வாழ்வுரிமையின் அடிப்படையில்தான் எழுப்புகிறோம். கடல் தாண்டி வந்ததாகச் சொல்லி இந்திய மீனவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதையும், படகுகளை பறிமுதல் செய்வதையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு லட்சக்கணக்கில் அபராதம் போடுவதையும் இலங்கை அரசு தொடர்ச்சியாகச் செய்து வருகிறது.

கைது செய்வதும், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசானது இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும், இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுப்பதும் தொடர்ந்து நடக்கிறது. ஆனாலும் கைது நடவடிக்கையை இலங்கை நிறுத்தவில்லை.

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழையவில்லை. இலங்கையின் மீன்வளங்களை கொள்ளையடிப்பது இல்லை. இந்திய மீனவர்கள் வைத்திருக்கும் மீன்கள்தான் சிங்கள கடற்படையால் பறிக்கப்படுகிறது.

மீனவர்களின் வலைகள் அறுக்கப்படுகிறது. நமது மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதன் உச்சமாகச் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். பலர் கைதாகி கொண்டு செல்லப்படுகிறார்கள். இவை அனைத்தும் ரகசியமாக நடப்பவை அல்ல. வெளிப்படையாகத் தான் நடக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு கண்டிப்பதைப் போல, இந்திய அரசு முதலில் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.

“இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் தொடர்ந்து சட்ட விரோதமாக மீன் பிடிப்பதற்கு இந்திய அரசும் ஆதரவளிக்கவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம்” என்கிறார் இலங்கை அமைச்சர். தங்களின் கொடூரத்துக்கு இந்திய அரசையும் பங்குதாரர் ஆக்கும் முயற்சி இது. இலங்கை அமைச்சரின் இந்தக் கூற்றை பா.ஜ.க. அரசு உடனடியாக மறுக்க வேண்டும்.

‘இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கவில்லை’ என்பதை பா.ஜ.க. அரசு உறுதி செய்து இலங்கை அரசுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். இன்னொரு நாட்டின் அமைச்சர், இந்திய மீனவர்கள் மீது அவதூறான, வஞ்சம் தீர்க்கும், பழி சொல்லும் குற்றச்சாட்டுகளை வைக்கும்போது அதனை மறுக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது.

அதேபோல், கச்சத்தீவில் இந்தியாவின் உரிமையை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிலைநாட்டும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும். ‘கச்சத்தீவை தாரை வார்த்து விட்டார்கள்’ என்று பொங்கிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அரசு. அது உண்மையாக இருந்தால் இலங்கை அரசுடன் கச்சத்தீவு தொடர்பான பேச்சுவார்த்தையை பிரதமர் மோடி தொடங்க வேண்டும்.

“கச்சத்தீவை தாரை வார்த்துக்கொடுத்தது குறித்த புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன. இது ஒவ்வொரு இந்தியனையும் கோபப்படுத்தி இருக்கிறது” என்று பிரதமர் மோடி 31.3.2024 அன்று சொன்னார். அது அவரது உண்மையான கோபமாக இருந்தால், இப்போது இலங்கை அமைச்சர் சொன்னதும் அவரைக் கோபம் கொள்ள வைத்திருக்க வேண்டும்.

“அன்றைய ஆளும் கட்சியின் அலட்சியத்தால் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. இதனால் ஏழை மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்தக் கட்சிகள் மீனவர்களை வஞ்சிக்கிறது. மீனவர்களுக்காக அவர்கள் எதையும் செய்யவில்லை. மீனவர்களுக்கு அவர்கள் துரோகம் செய்துள்ளனர்” என்று கண்ணீர் வடித்தார் பிரதமர் மோடி. இதோ, அவருக்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. மீனவர்களுக்கு நன்மை செய்ய ஒரு வாய்ப்பு வந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்.

“தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களுக்கும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும். இதனை கருத்தில் கொண்டு, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று இந்த சட்டமன்றப் பேரவை வலியுறுத்துகிறது என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து நிறைவேற்றிய தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முயற்சியை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடங்க வேண்டும்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சுக்கு இந்திய அரசு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்றும், இந்திய மீனவர்கள் மீது குற்றம்சாட்டும் இலங்கை அமைச்சரை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள முரசொலி நாளேடு, கச்சத்தீவின் இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். செய்யுமா ஒன்றிய பா.ஜ.க. அரசு?

Also Read: “ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!