murasoli thalayangam
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!
இதில் என்ன பெருமை இருக்கிறது?
முரசொலி தலையங்கம் (05/07/2025)
மக்களுக்கு அநியாய வரி போடுவதையும், அந்த வரியை மக்கள் ஒழுங்காகச் செலுத்துகிறார்கள் என்பதையும் பெரிய சாதனையாகச் சொல்வது பா.ஜ.க. அரசாகத்தான் இருக்க முடியும். இதில் என்ன பெருமை இருக்கிறது? ‘அநியாய, அக்கிரம வரியையும் சத்தமில்லாமல் மகிழ்ச்சியாகச் செலுத்துகிறார்களே?’ என்ற மகிழ்ச்சியை இவர்கள் கொண்டாடுகிறார்களா?
ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கத்தின் பகல் கொள்ளையாக இருப்பது ஜி.எஸ்.டி. என்று சொல்லப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகும். ஜி.எஸ்.டி. வரி வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2025 மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் 2.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டு மே மாதத்தை விட 16.4 விழுக்காடு அதிகம் ஆகும்.
2017 ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்தது. 2020 ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி. வரி வசூல் 11 லட்சம் கோடி ஆகும். கடந்த ஆண்டு 20 லட்சம் கோடி ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வரி வசூல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி.யின் கீழ் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டு 65 லட்சமாக இருந்தது. இப்போது 1.51 கோடி ஆகி இருக்கிறது. வரி என்பது அனைவரும் செலுத்த வேண்டியதுதான். அதில் விடுபடுதல், தப்பித்தல் கூடாது என்பதும் உண்மைதான். ஆனால் அந்த வரிகள் நியாயமானவையாக இருக்க வேண்டாமா?
பெரு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரிச் சலுகைத் தள்ளுபடிகளை அறிவிக்கும் பா.ஜ.க. அரசு, ஜி.எஸ்.டி. வரி வசூலில் பெருமைப்பட என்ன இருக்கிறது?
“பிரதமர் மோடி அரசால் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. என்பது வரிச் சீர்திருத்தம் அல்ல. பொருளாதார அநீதி. பெரு நிறுவனங்களுக்கு ஆதாயம் அளிக்கும் கொடூரமான கருவி. ஏழைகளைத் தண்டிக்கவும், சிறுகுறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களை நசுக்கவும், மாநிலங்களை குறைமதிப்புக்கு உள்படுத்தவும், பிரதமரின் சில பெரும் பணக்கார நண்பர்களுக்கு பலனளிக்கவும் வடிவமைக்கப்பட்டதாகும். 900 முறை திருத்தங்களைக் கண்ட இந்த ஜி.எஸ்.டி.யின் குழப்ப வலையில் கேமரல் பாப்கார்ன், க்ரீம் பன்களும் கூட சிக்கியுள்ளன” என்று சொல்லி இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகம் ஆனதும், வரித் தொகை அதிகம் ஆனதும் பொருளாதார உயர்வு எனக் கொண்டால், இப்படிச் செலுத்தப்படும் வரி மூலமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்களுக்கு என்ன நன்மையைச் செய்துள்ளது? இதுதான் அடிப்படையாக எழும் கேள்வி ஆகும். இந்தப் பணம், வரி கொடுக்கும் மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தப்பட்டதா? நேரடியாக மக்கள் பயன்பாட்டுக்குத் தரப்பட்டுள்ளதா?
மக்களுக்கு நேரடியாகச் சேவை செய்ய வேண்டிய கடமை மாநிலங்களுக்குத்தான் இருக்கிறது. மாநில அரசுகளிடம்தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியால் பயனுண்டா? ஜி.எஸ்.டி. வரிப்பணம், மாநிலங்களுக்கு உரிய அளவில் பகிர்ந்தளிக்கப்படுகிறதா? ஜி.எஸ்.டி. தரும் அளவுக்கு இல்லா விட்டாலும் குறைந்த அளவிலாவது தரப்படுகிறதா? ஏதுமில்லை.
சம்பாதிக்கிறார்கள். அவ்வளவுதான். அதனால் எந்தப் பயனுமில்லை. பயனற்ற சம்பாத்தியத்தால் என்ன பயன்? பலன்?
ஜி.எஸ்.டி.தான் திருப்புமுனையான சீர்திருத்தம் என்று பெருமைப்பட்டுள்ளார் பிரதமர் மோடி. அவருக்கு திருப்புமுனைக்கும் பொருள் தெரியவில்லை, சீர்திருத்தத்தின் பொருளும் தெரியவில்லை. எல்லா வரிகளையும் ஒன்றாக்கப் போகிறோம் என்று சொல்லி 5 விழுக்காடு, 12 விழுக்காடு, 18 விழுக்காடு, 28 விழுக்காடு வரி போட்டதுதான் சீர்திருத்தமா? ‘கம்ப்யூட்டரே குழம்பிப் போயிருது மேடம்’ என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை தொழில் அதிபர் புலம்பினார். இதனாலேயே அவர் மிரட்டப்பட்டார். இவர்கள் சீர்திருத்திய லட்சணம் இதுதான்.
வரி இணக்கச் சுமையைக் குறைத்துள்ளதாக பிரதமர் சொல்லி இருக்கிறார். சுமையைக் குறைத்திருந்தால் இத்தனை லட்சம் கோடி வரி திரட்டி இருக்க முடியுமா? என்ன லாஜிக்கில் சொல்கிறார் பிரதமர்?
இந்த வரி மூலமாக சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு அடைந்தன என்பதுதான் உண்மை. ஆனால் பலனடைந்துள்ளன என்கிறார் பிரதமர். சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை அழைத்து இது குறித்து நேரடியாகக் கேட்பதற்குத் தயாராக இருக்கிறாரா பிரதமர்? எத்தனை லட்சம் சிறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்பதை பிரதமர் முதலில் அறிய வேண்டும். தொழிலை மூடிவிட்டு, வேலைக்குப் போய்விட்டவர்களின் எண்ணிக்கையை அவர் அறிய வேண்டும்.
‘நாட்டின் சந்தையை ஒருங்கிணைக்கும் பயணத்தில் மாநிலங்களை சம பங்காளிகளாக ஆக்குவதால் உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியை ஜி.எஸ்.டி. வலியுறுத்தி இருக்கிறது’ என்று கூச்சமே இல்லாமல் வாய்ஜாலம் காட்டி இருக்கிறார் பிரதமர்.
மாநிலங்களின் நிதி உரிமையையும், நிதி பலத்தையும் சுரண்டியதுதான் ஜி.எஸ்.டி. ஆகும். மாநிலங்களை பங்காளிகளாக அல்ல, பகையாளிகளாக நடத்தி வருவதுதான் ஜி.எஸ்.டி. ஆகும். சில ஆண்டுகளுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு கொடுத்தார்கள். பின்னர் அதனையும் நிறுத்தி விட்டார்கள். இழப்பீடு கொடுத்தாலே என்ன பொருள்? ‘மாநிலங்களுக்கு இழப்பு’ என்பதுதானே? இதுகூடவா பிரதமருக்குப் புரியவில்லை?
இதை விட புத்திசாலி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் சொல்லி இருக்கிறார், “வரி செலுத்துவோரின் சுமை குறைந்துள்ளது” என்கிறார். வரிகளால் கிடைக்கும் பணம் அதிகரித்தால், வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? மக்கள் ஜி.எஸ்.டி. வரியை, நன்கொடையாக நிர்மலா சீதாராமனுக்கு வாரி வழங்குகிறார்களா?
Also Read
-
இந்தி தணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!