murasoli thalayangam

“இஸ்ரேல் அடங்க வேண்டும்; உலக நாடுகள் அடக்க வேண்டும்” : முரசொலி தலையங்கம்!

முரசொலி தலையங்கம் (21-06-2026)

இஸ்ரேல் அடங்க வேண்டும்!

உலகின் கவனத்தை அச்சமாக மாற்றி இருக்கிறது ஈரான் – இஸ்ரேல் தாக்குதல்கள்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று 20 இசுலாமிய நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. இஸ்ரேலும் ஈரானும் தங்களுக்கு இடையிலான மோதலை நிறுத்த வேண்டும் என்று ஜி7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. “ஈரான் சரணடைய வேண்டும்” என்று அமெரிக்காவும், “அந்த இரு நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சு நடத்தி வைக்கத் தயார்” என்று ரஷியாவும் அறிவித்துள்ளன. எனவே அனைத்துலக நாடுகளின் பிரச்சினையாக ஆகி இருக்கிறது ஈரான் – இஸ்ரேல் மோதல்கள்.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்த் தாக்குதல்கள் தொடர்ந்து வலுத்து வருகிறது. கடந்த 16 ஆம் தேதி முதல் இது நடைபெற்று வருகிறது. இந்தத் தாக்குதலின் போது ஈரானில் இதுவரை 585 பேர் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் 239 பேர். பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் 126 பேர்.

அணு அபாயம் ஏற்பட்டுள்ளதையும் இந்தத் தாக்குதல் உறுதி செய்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று சொல்லித்தான் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்துகிறது. மின்சாரம் தயாரிப்பு போன்ற பயன்பாட்டுக்குத்தான் அணுசக்தித் திட்டங்களைப் பயன்படுத்துவதாக ஈரான் சொல்லி வருகிறது. ஆனால் இதனை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளவில்லை. ஈரானின் அணு சக்தித் திட்டங்களை முடக்கும் நோக்கத்தில்தான் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற தாக்குதலை இஸ்ரேல் கடந்த ஜூன் 13 அன்று தொடங்கியது. இதில் ஈரான் நாட்டின் முக்கியமான அணு சக்தி நிலையங்கள் சேதம் அடைந்தன. ஈரான் ராணுவத்தின் முக்கியத் தளபதிகள் சிலர் கொல்லப்பட்டனர்.

இதற்கு எதிரான பதில் தாக்குதலை ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் – 3’ என்ற பெயரில் ஈரான் தொடங்கியது. இஸ்ரேலின் முக்கியமான நகரங்களில் ஏவுகணைத் தாக்குதலை ஈரான் நடத்தியது. இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான மொசாத் செயல்பாட்டு மையத்தின் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ரஷியாவைச் சேர்ந்த வெளியுறவுச் செய்தியாளர், “இதுவரை கற்பனையாகச் சொல்லப்பட்டு வந்த அணு அபாய எச்சரிக்கை தற்போது உண்மையாகி வருகிறது. ஈரான் அணு சக்தி மையங்கள் மீது இப்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டு அணுக்கதிர் வீச்சு பரவினால் அது மேற்கு ஆசிய மண்டலத்துக்கு மட்டுமின்றி உலகத்துக்கே ஆபத்தாக முடியும்” என்று எச்சரித்துள்ளார். இதுதான் மிக மோசமானது ஆகும். உலக நாடுகள் கவலைப்படவும் இதுதான் காரணம் ஆகும்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று 20 இசுலாமிய நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. “சர்வதேசச் சட்டங்களுக்கும் ஐ.நா.வின் வழிகாட்டுதல்களுக்கும் எதிராக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது. இரு நாடுகளும் போரைக் கைவிட வேண்டும். ஈரானில் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவதால் அணுக்கதிர் வீச்சு அபாயம் உள்ளது. அந்த மையங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான தடைபட்ட பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வேண்டும். மத்திய கிழக்குப் பகுதியானது அணு ஆயுதமற்ற பகுதியாக இருக்க வேண்டும் என்பதே அரபு நாடுகளின் நீண்டகால நிலைப்பாடு. அந்த நிலை தொடர்வதற்கான அனைத்து ஆதரவையும் வழங்குவோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ‘ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்’ என்று அவர் சொல்லி இருக்கிறார். இதனை ஈரான் அதிபர் கமேனி நிராகரித்து இருக்கிறார். “ஈரானின் வரலாற்றை அறிந்தவர்கள் ஈரானை மிரட்டும் மொழியில் பேச மாட்டார்கள். ஈரான் ஒருபோதும் சரண் அடையாது. இஸ்ரேலுடனான மோதலில் அமெரிக்கா ராணுவ வழியில் தலையிட்டால் அது அந்த நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத தீங்கை விளைவிக்கும். இஸ்ரேலுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்க நாங்கள் தயாராகி வருகிறோம்” என்று ஈரான் அதிபர் கமேனி சொல்லி இருக்கிறார். எனவே இது இப்போதைக்கு முடிவடைவதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலும் கடந்த ஓராண்டு காலமாகத் தொடர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டு காலமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளார்கள். கொல்லப் பட்டவர்களில் 17 ஆயிரம் பேர் குழந்தைகள். 11 ஆயிரம் பேர் பெண்கள். 26 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளார்கள். 175 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 125 ஐ.நா. ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். காசாவின் பெரும்பகுதி ஓராண்டு காலத்துக்குள் அழிக்கப்பட்டு விட்டது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வாதத்துக்கு எதிராக பாலஸ்தீனம் போராடி வருகிறது.

காசாவின் கான்யூனிஸ் நகரத்தில் உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக நின்று கொண்டிருந்த 45 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்ற செய்தி இரண்டு நாட்களுக்கு முன் வந்துள்ளது. பட்டினியால் வாடும் பாலஸ்தீனர்கள் உணவுப் பொருள் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்துக் காத்திருந்த போது அவர்கள் மீது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதைவிடக் கொடூரம் இருக்க முடியாது.

இஸ்ரேல் அடங்க வேண்டும். உலக நாடுகள் இஸ்ரேலை அடக்க வேண்டும்.

Also Read: ”ஒன்றிய அரசை கண்டு அஞ்சாத அமர்நாத் இராமகிருஷ்ணன்” : முரசொலி தலையங்கம் பாராட்டு!