murasoli thalayangam

“நம் அரசமைப்பு, அனைவரையும் விட உயர்ந்தது!” : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்தை வழிமொழிந்த முரசொலி!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ணா கவாய் பொறுப்பேற்றுள்ளார். குடியரசுக் கட்சியின் தலைவராக இருந்த ஆர்.எஸ்.கவாய் அவர்களின் மகன் இவர். புதிய தலைமை நீதிபதியான பூஷன் கவாய் ஆற்றி இருக்கும் உரை, மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக அமைந்திருக்கிறது.

"நீதித்துறையா, நிர்வாகத்துறையா, நாடாளுமன்றமா? யார் உயர்ந்தவர்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம்மட்டுமே உயர்ந்தது. மற்றவை அனைத்தும் அரசமைப்புச் சட்டத்துக்காகப் பணியாற்ற வேண்டும். ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவை அரசமைப்புச் சட்டக் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுகிறது. நம் அரசமைப்பு, அனைவரையும் விட உயர்ந்தது.

இந்த அரசமைப்புச் சட்டம் தான் இந்த மூன்று தூண்களுக்கும் அதிகார வரம்புகளையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது. மறு ஆய்வு அதிகாரம் அரசமைப்புச் சட்டத்தால்தான் நீதித்துறைக்கு வழங்கப் பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நீதித்துறையும் மறு ஆய்வுக்கு உட்பட்டதுதான். இதுதான் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரம்” என்று கூறி இருக்கிறார் தலைமை நீதிபதி பூஷன் கவாய் அவர்கள்.

அரசமைப்புச் சட்டத்தை விட இந்த நாட்டில் ஆளுநரும், குடியரசுத் தலைவரும், ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசும் தங்களை மிகப்பெரிய அதிகாரம் படைத்த சக்திகளாகக் காட்டிக் கொள்ளும் இந்தக் காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் இந்த உரை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர் இழுத்தடிக்கிறார்.

நான் ஒப்புதல் வழங்காவிட்டாலே நிராகரித்ததாகத் தான் அர்த்தம்' என்று கொக்கரிக்கிறார். அவரை ஒப்புதல் அளிக்கச் சொல்லுங்கள் என்று ஒன்றிய அரசிடம் சொன்னாலும் அவர்களும் அதனைத் தட்டிக் கேட்கவில்லை. உச்சநீதிமன்றம் போனது தமிழ்நாடு அரசு. ஆளுநரை உச்சந்தலையில் கொட்டியது உச்சநீதிமன்றம். அரசமைப்புச் சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கியது உச்சநீதிமன்றம். அரசமைப்புச் சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு விதித்தது உச்சநீதிமன்றம்.

உடனே கொந்தளிக்கிறார் துணை குடியரசுத் தலைவர் தன்கர். 'உங்களுக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?' என்று உச்சநீதிமன்றத்தையே கேட்கிறார் தன்கர். அரசமைப்புச் சட்ட அதிகாரத்தைத்தான் உச்சநீதிமன்றம் பயன்படுத்தியது. இதுகூட துணை குடியரசுத் தலைவருக்குத் தெரியவில்லை.'இப்படி காலக்கெடு வைப்பதற்கு உரிமை இருக்கிறதா?' என்று ஏதும் தெரியாதவரைப் போல உச்சநீதி மன்றத்தையே விளக்கம் கேட்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு. எந்த அடிப்படையில் தீர்ப்பளித்தோம் என்று அந்த தீர்ப்பிலேயே இருக்கிறது. அதைக்கூட முழுமையாகப் படிக்கவில்லை.

இந்த அடிப்படையில் பார்த்தால் அரசமைப்புச் சட்ட அதிகாரத்தைத்தான் தமிழ்நாடு அரசும் பயன்படுத்துகிறது. அதனை ஆளுநர் அவமதித்துக் கொண்டு இருக்கிறார். அரசமைப்புச் சட்டப்படி தீர்ப்பு தரும் உச்சநீதிமன்றத்தை குடியரசுத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவரும் அவமதித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மிகச் சரியான விளக்கத்தைத் தந்துள்ளார். 'அரசமைப்புச் சட்டமே உயர்ந்தது' என்று!

இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காக்க வேண்டிய முதல் கடமை உச்ச நீதிமன்றத்துக்குத்தான் இருக்கிறது. இந்தியா என்பது இறையாண்மையுள்ள, சமதர்ம, சமயச்சார்பற்ற மக்களாட்சி குடியரசு ஆகும். இவைதான் இந்தியாவைக் காப்பாற்றி வருகிறது. உலகின் மிகப்பெரிய அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டது இந்தியா. 395 உறுப்புகளைக் கொண்டது.

22 பகுதிகள், 12 அட்டவணைகளைக் கொண்டது.”இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை ஓர் இறையாண்மையுள்ள (sovereign), சமதர்ம (Socialist), சமயச்சார்பற்ற (secular), மக்களாட்சி குடியரசாக (Democratic Republic) உருவாக்க உறுதி ஏற்கிறோம். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமுதாய, பொருளாதார, அரசியல் நீதியும், எண்ணம், கருத்து வெளியீடு, நம்பிக்கை, மதப்பற்று, மதவழிபாடு ஆகியவற்றில் சுதந்திரமும், தகுதி மற்றும் வாய்ப்பில் சமத்துவம் கிடைக்கவும் மக்களிடையே தனிமனித மாண்பையும் நாட்டின் ஒற்றுமையை வளர்க்கவும் நமது அரசியல் நிர்ணயச்சபையில் உறுதி கொண்டு 1949 நவம்பர் 26 ஆம் நாளான இன்று நமக்கு நாமே இந்த அரசியலமைப்பை நிறைவேற்றி அளித்து நடைமுறைப்படுத்துகிறோம்" என்று சொல்கிறது இந்திய அரசமைப்பின் முகவுரை.

கேசவ பாரதி (1973) வழக்கில், ' முகவுரை அரசமைப்பின் ஒரு பகுதி' எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதே இந்த அரசமைப்புச் சட்டம் தான். இந்தச் சட்டத்துக்கு பல்வேறு வகைகளில் ஆபத்து சூழ்ந்துள்ள காலம் இது. 'அரசமைப்புச் சட்டம்தான் எனக்கு வேதம்' என்று சொன்னவர் பிரதமர் மோடி. ஆனால் அவர் நடைமுறையில் அப்படி நடந்து கொள்ளவில்லை. இம்முறை 300 இடங்களை பா.ஜ.க. மட்டும் பிடித்து தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்திருந்தால், இன்று நாம் பார்க்கும் காட்சிகளே வேறாக இருந்திருக்கும்.

400 இடங்களைப் பிடித்திருந்தால் நாசம் செய்திருப்பார்கள். 240 என்பதால்தான் முழிபிதுங்கிக் கிடக்கிறார்கள். ஆனாலும் தன்கர்கள் மூலமாக தங்களது விஷமங்களை விதைத்து வருகிறார்கள். இத்தகைய சூழலில் உச்சநீதிமன்றத்துக்கு மாபெரும் பொறுப்பு இருக்கிறது. அத்தகைய பொறுப்பை மிகச் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார் தலைமை நீதிபதி பூஷன் கவாய்.

Also Read: ரூ.6,876 கோடி.. 238 திட்டங்கள்: வளமிகு சென்னையாக மாறும் வட சென்னை - பணிகளை துரிதப்படுத்திய துணை முதல்வர்!