murasoli thalayangam

பா.ஜ.க.வுக்கு நேர்வழி தெரியாது : நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியை மிரட்டும் பா.ஜ.க!

முரசொலி தலையங்கம் (22-04-205)

நேர்வழி தெரியாது!

பா.ஜ.க.வுக்கு நேர்வழி எப்போதும் தெரியாது. சதிச் செயல்கள், குறுக்குவழிகள், பழிவாங்கும் எண்ணங்கள் ஆகியவையே பா.ஜ.க.வின்பாதைகள். மக்களுக்கு நன்மை செய்து, மக்களின் நம்பிக்கையைப் பெறுவது அவர்களால் முடியாது. தங்களை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளை தங்கள்கைவசம் இருக்கும் புலனாய்வு அமைப்புகளின் மூலமாக எதிர்கொள்வதே பா.ஜ.க.வின் பழக்க வழக்கம் ஆகும்.

புலனாய்வு அமைப்புகளின் இந்தச் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் பலமுறை கண்டனங்கள் தெரிவித்துள்ளது. ஆனாலும் பா.ஜ.க. திருந்தவில்லை. உச்ச நீதிமன்றத்துக்கே குடியரசுத் துணைத் தலைவர் முதல், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை சவால் விட்டுக் கொண்டிருக்கும் காட்சியை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

பா.ஜ.க. அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மீது அதிகமான விமர்சனம் வைத்து வந்த ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு நூறு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரான அபிஷேக் பானர்ஜி, "நாங்கள் கோவா மாநில அரசியலில் எப்போது தலையிடத் தொடங்கினோமோ அது முதல் பத்து முறை என்னிடம் விசாரணை நடத்திவிட்டார்கள்” என்றார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியதற்காக அசாம் மாநிலத்தில் அகில் கோகோய் கைது செய்யப்பட்டார். இறுதியாக அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். 2002 குஜராத் வன்முறைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்த தீஸ்தா செதல்வாட் கைது செய்யப்பட்டார். பீமா கோரேகான் வழக்கில் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டார்.

சிவசேனா எம்.பி. சஞ்சய் ரௌத் கைது செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி எத்தகைய நெருக்கடியைச் சந்தித்தது என்பது இந்தியா அறிந்தது ஆகும். தமிழ்நாட்டிலும் இவர்களது வேலைகளை அதிகம் காட்டி வருகிறார்கள். 'இது போன்ற அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாது தமிழ் மண்' என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

பா.ஜ.க.வின் பாய்ச்சல் இப்போது சோனியா, ராகுல் ஆகியோர் மீது அதிகமாக பாய்ந்து வருகிறது. 'நேஷனல் ஹெரால்டு' என்ற வழக்கில் சோனியா, ராகுல் ஆகியோர் மீது கடந்த 19 ஆம் தேதியன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 988 கோடி ரூபாய்முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்லி டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய இடங்களில்இருக்கும் ‘நேஷனல் ஹெரால்டு' சொத்துக்களை முடக்கி இருக்கின்றார்கள்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமி பேசினார். சோனியாவும், ராகுலும் சேர்ந்து ‘நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறார்கள்' என சுவாமி குற்றம் சாட்டினார். இதனை 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு பிடித்துக் கொண்டது.

இவ்வழக்கில் 2014- ஆம் ஆண்டு ராகுல், சோனியா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. 2015- ஆம் ஆண்டு இவ்வழக்கில் சோனியா, ராகுல் இருவருக்கும் முன் பிணை வழங்கப்பட்டது. 2019- ஆம் ஆண்டு 'நேஷனல் ஹெரால்டு' க்கு சொந்தமான 16 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை பறிமுதல் செய்ததாக அறிவிக்கப்பட்டது.

இது 2025 ஆம் ஆண்டு ஆகும். இந்த வழக்கில் தற்போது அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்கள். 2014 முதல் 2025 வரையிலான 11 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியை மிரட்டுவதற்காக மட்டுமே ‘நேஷனல் ஹெரால்டு' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1938 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் பிரிட்டிஷ் இந்தியாவில் தொடங்கப்பட்டது ‘நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை. அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏ.ஜே.எல்.) என்ற நிறுவனத்தின் சார்பில் இந்த பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. நேருவின் மிகக் கடுமையான அரசியல் தலையங்கங்கள் காரணமாக 1942 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியால் இப்பத்திரிகை தடை செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தது. சுதந்திர இந்தியாவில் பிரதமர் ஆன நேரு, அந்தப் பத்திரிகையின் இயக்குநர் குழுவில் இருந்து தனது பொறுப்பை விட்டு விலகினார். ஆனாலும் காங்கிரசு கட்சியின் நிதியின் மூலமாகத் தான் அது செயல்பட்டது. 2008 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 2016 முதல் இணையப் பதிப்பாக வெளிவந்தது.

2012 ஆம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமி, “சோனியா, ராகுல் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சி நிதியை பயன்படுத்தி, ஏ.ஜே.எல். நிறுவனத்தை கைப்பற்றி அதன் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை அடையும் நோக்கில் செயல்பட்டார்கள்” என்று குற்றம் சாட்டினார். ஆனால் இதன் சொத்துக்களில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. இத்தகைய பலவீனமான வழக்கை வைத்துக் கொண்டு- தான் காங்கிரஸ் கட்சியை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

"ஜவஹர்லால் நேரு எங்களுக்கு அரசியலை மட்டும் கற்றுத் தரவில்லை. அச்சத்தை எதிர்கொள்ளவும், உண்மையின் பக்கம் நிற்கவும் கற்றுத் தந்தார்” என்று ராகுல் சொல்லி இருக்கிறார். பா.ஜ.க.வின் பலவீனமான தாக்குதல்களை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டு முறியடிக்கும் என்பதே ராகுல் அளித்துள்ள பதில் மூலம் அறியும் உண்மையாகும்.

Also Read: ஜெகதீப் தன்கர் பேசுவது சட்டப்பூர்வமானது அல்ல : நீதித்துறைக்கு அதிகாரம் இருக்கிறது - முரசொலி!