murasoli thalayangam
பேரறிஞர் அண்ணாவின் ‘இறுதி உயிலை’ நிறைவேற்றும் செயல்! : முதலமைச்சரின் முன்னெடுப்பிற்கு முரசொலி பாராட்டு!
இந்திய மாநிலங்கள் அனைத்துக்குமான உரிமையை வாங்கித் தரும் முன்னெடுப்பில் இறங்கி இருக்கிறார் 'திராவிட நாயகன்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். "மாநில சுயாட்சியை வென்றெடுக்க சட்ட முன்னெடுப்புகளை கழகம் மேற்கொள்ளும்" என்று திராவிட முன்னேற்றக் கழக பவள விழா - முப்பெரும் விழாப் பொதுக்கூட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரக்கச் சொன்னார்கள்.
“நமது எல்லாக் கனவுகளும் நிறைவேறிவிட்டதா” எனக் கேட்டால்... இல்லை! மாநில உரிமைகளை வழங்கும் ஓர் ஒன்றிய அரசு அமையவில்லை. நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் நாம் போராட வேண்டிய நிலை தான் இருக்கிறது. பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் வலியுறுத்திய மாநில சுயாட்சிக் கொள்கை என்பது நமது உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்று.
எல்லா அதிகாரமும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் சட்டமுன்னெடுப்புகளைத் திராவிட முன்னேற்றக் கழகம்நிச்சயமாக, உறுதியாகச் செய்யும்" என்று சொன்னார் முதலமைச்சர். இப்போது அதற்கான முதல் முயற்சியாக மாநில சுயாட்சிக் குழுவை அமைத்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முன்னால் அன்றைய முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு காட்சியை விவரித்தார்கள்.
அது...“சிறையிலிருந்த நாடு, விடுதலை பெற்று விட்டது. கதவு திறந்தது. பூட்டிய இருப்புக் கூட்டிலிருந்து கைதி, புன்னகை மலர வெளியே வருகிறான். தந்தையைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த தளிர் நடைச் செல்வம், இளங்கரம் தூக்கி, தாவியோடுகிறது, அவனைத் தழுவிக்கொள்ள! அவனும் அடக்க முடியாத மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரளமகனைத் தூக்கி முத்தமிடக் கரங்களை நீட்டுகிறான். கைகள் இயங்க முடியாமல் தவிக்கின்றன.
சிறையில் இருந்து தான் விடுபட்டுவிட்டானே; இன்னும் என்ன தடை? தன்னை யார் தடுப்பது? சுற்றும் முற்றும் பார்க்கிறான். அவன்சிறையில் இல்லை, சுதந்திர பூமியில்தான் இருக்கிறான். பிறகு யார், தன் குழந்தையைக் கூடத் தழுவிட முடியாமல் அவனைக் கட்டுப்படுத்துவது? யாருமல்ல. அவன் சிறையிலிருக்கும்போது அவன் கைகள் இரண்டையும் காலையும் சேர்த்து ஒரு விலங்கு மாட்டி இருந்தார்கள்.
விடுதலை அடைந்த பூரிப்பில், விலங்குகளைக் கழற்ற வேண்டுமென்ற நினைப்புகூட இல்லாமல் அவன் வெளியே வந்துவிட்டான். அவன் சுதந்திர மண்ணில்தான் இருக்கிறான்; கை, கால் விலங்கு மட்டும் கழற்றப்படவில்லை. மனிதன் விடுதலையாகிவிட்டான். கை, கால்கள் மட்டும் கட்டுண்டு கிடக்கத்தேவையில்லையே! இந்தியா, விடுதலை பெற்றுவிட்டது. அதன்அவயவங்களைப் போன்ற மாநிலங்கள் மட்டும் மத்திய அரசுக்குத் தேவையில்லாத அதிகாரக் குவியல்கள் என்னும் விலங்குகளால் கட்டுண்டு கிடப்பானேன்?” என்று கேட்டார் தலைவர் கலைஞர் அவர்கள்.
இதோ இன்றைய முதல்வரும் ஒரு காட்சியை விவரிக்கிறார்...
“இந்திய திருநாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மிகப்பெரும் பொறுப்பை மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு என அனைத்தையும் மாநிலங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன.
ஆனால் அவற்றையெல்லாம் நிறைவேற்றிடத் தேவையான அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டு வருகின்றன. பசியால் வாடித் தவிக்கும் தன்னுடைய குழந்தைக்கு என்ன உணவு கொடுத்திட வேண்டும் என்பது அந்த குழந்தையின் தாய்க்குத் தான் தெரியும். ஆனால், அந்த குழந்தை உண்ணும் உணவை, கற்கும் கல்வியை, கடந்து செல்லும் பாதையினை, டெல்லியில் இருந்து யாரோ ஒருவர் தீர்மானித்தால் கருணையே உருவான தாய்மையும் பொங்கி எழத்தானே செய்யும்?" என்று உணர்ச்சியாய் கேட்ட முதலமைச்சர் அவர்கள், அதற்கான வழிமுறையையும் வகுக்கத் தொடங்கிவிட்டார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடை- யேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களைத் தலைவராகக் கொண்ட குழுவை முதலமைச்சர் அவர்கள் அமைத்துள்ளார்கள்.
இதன் உறுப்பினர்களாக, இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் மேனாள் துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இக்குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனவரி மாத இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.1974 ஆம் ஆண்டு நீதிபதி இராஜமன்னார் தலைமையில் குழு அமைத்தார் முதலமைச்சர் கலைஞர்.
அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது இணைப்பில், மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப்பட்டியல் என்ற தலைப்புகளில் நாடாளுமன்றம் மாநிலச் சட்டமன்றங்கள் ஆகியவற்றின் சட்டமியற்றும் அதிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. அப் பட்டியல்களில் பல்வகைத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென இராஜமன்னார் குழு கருத்துரை வழங்கியது. நாட்டின் பாது- காப்பு, வெளிநாட்டு உறவுகள், மாநிலங்களுக்கிடையே போக்குவரத்துத் தொடர்புகள், நாணயச் செலாவணி ஆகியவை தொடர்பான அதிகாரங்களை மட்டும் கொண்டுள்ள ஒன்றிய அரசும், எஞ்சிய அதிகாரங்கள் உட்பட ஏனைய அதிகாரங்கள் அனைத்தையும் கொண்டுள்ள மாநில அரசுகளும் உள்ள உண்மையான கூட்டாட்சியை நிறுவும் இலட்சியத்துடன், தமிழ்நாடு அரசு, இராஜமன்னார் குழுவின் பரிவுரைகளை ஆய்ந்தபின் ஏற்றுக் கொண்டது.
அந்த வழித்தடத்தில் தான் இன்றைய முதலமைச்சர் அவர்கள், நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை அமைத்துள்ளார்கள். இது பேரறிஞர் அண்ணாவின் 'இறுதி உயிலை' நிறைவேற்றும் செயல் ஆகும். - தொடரும்
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!