murasoli thalayangam

அமெரிக்காவின் வரி விதிப்பிற்குள்ளான இந்தியா - கண்டுகொள்ளாத பிரதமர் மோடி! : முரசொலி தலையங்கம் கண்டனம்!

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீதான வர்த்தக வரிகளை அதிகமாக ஆக்கி உள்ளது அமெரிக்கா. இதனை உலகின் பல நாடுகள் கண்டித்துள்ளன, எதிர்த்துள்ளன, விமர்சித்துள்ளன. பதில் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.

ஆனால் இதில் எதையும் செய்யவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு. அமெரிக்கா மீது வரிகளையும் பிற தடைகளையும் விதித்துள்ள 'மோசமான நாடுகளில்' ஒன்றாக இந்தியாவை பட்டியலிட்டுள்ளது அமெரிக்கா. இதன் காரணமாக இந்தியா மீது 27 விழுக்காடு வரி விதித்துள்ளது அமெரிக்கா. இதுவரை 2 விழுக்காடு வரி மட்டுமே விதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்தியா மீது தற்போது 27 விழுக்காடு வரி விதிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க சரக்குகளுக்கு இந்தியா 52 விழுக்காடு வரி விதிப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். இந்தியா மிகவும் கடினமான அணுகுமுறையை கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். வர்த்தகக் கொள்கைகளைப் பொறுத்தவரை, 'இந்தியா மிகவும் கடினமாக நடந்து கொள்வதாகவும்' டிரம்ப் தெரிவித்தார்.

இந்தியச்சந்தையில் அமெரிக்க இறக்குமதிகள் போட்டியிடுவதை இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் மிகவும் கடினமாக்குகிறது என குறிப்பிட்ட அவர், "இந்தியா மிக மிக கடுமையாக நடந்து கொள்கிறது. பிரதமர் மோடி சமீபத்தில் இங்கு வந்து சென்றிருந்தார். அவர் எனக்கு சிறந்தநண்பர். நான் அவரிடம், 'நீங்கள் என் நண்பர்தான். ஆனால், நீங்கள் எங்களை சரியாக நடத்தவில்லை' என்று சொன்னேன். அவர்கள் 52 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கிறார்கள். நாம் பல ஆண்டுகளாக அவர்களுக்கு இறக்குமதி வரி விதிக்கவில்லை” என்றார்.‘இன்று தான் அமெரிக்காவுக்கு உண்மையான விடுதலை நாள்’ என்றும் டிரம்ப் அறிவித்தார்.

இந்த அனைத்து வரியும் வரும் ஏப்ரல்9 ஆம் தேதி 12.01 மணி முதல் அமலுக்கு வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. இந்த வரி விதிப்புக்கு உலக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீனாவுக்கு 125 விழுக்காடு வரை இறக்குமதி வரியை அதிகப்படுத்தி இருப்பதால் அந்த நாடு கடும் எதிர்ப்பை காட்டி வருகிறது. சீனாவுக்கு இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தி இருக்கிறது சீனா.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானி, “இந்த நியாயமற்ற வரிகளுக்கு மிக பெரிய விலையை அமெரிக்க மக்கள்தான் செலுத்த போகிறார்கள். அப்படி நாங்களும் வரியை அறிவித்தால் எங்கள் நாட்டிலும் விலை அதிகரிக்கும். வளர்ச்சி குறையும்.. எனவே அதை செய்ய போவதில்லை" என்று சொல்லி இருக்கிறார்.

கனடா பிரதமர் மார்க் கார்னி, “ஸ்டீல், அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல்கள் மீதான அமெரிக்க வரிகள் பல லட்சம் கனடா மக்களை கடுமையாக பாதிக்கும். இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம். அதுவும் வெகு சீக்கிரமாக நடவடிக்கை இருக்கும்." என்று சொல்லி இருக்கிறார்.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “இந்த வர்த்தக போர் யாருக்கும் நன்மையை தராது. நாங்கள் அனைத்திற்கும் தயாராகவே இருக்கிறோம்." என்று சொல்லி இருக்கிறார். "அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு இரு தரப்பையும் பாதிக்கும்" என ஜெர்மனி கவலை தெரிவித்துள்ளது. ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன், "நாங்கள் ஒரு வர்த்தக போரை விரும்பவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

இத்தகைய எதிர்ப்பை அறிந்ததும், 90 நாட்களுக்கு இந்த வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனாலும் சீனாவுக்கான வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்படவில்லை. இப்பிரச்சினை 90 நாட்களுக்கு பிறகு மீண்டும் எழும் என்றே கணிக்க வேண்டி உள்ளது.இத்தகைய சூழலில், இந்தியாவை ஆளும் பா.ஜ.க. அரசு, இந்தப் பிரச்சினையில் அமைதியாகவே இருக்கிறது. 'அமெரிக்காவின் நடவடிக்கை கவலை தரக் கூடியது' என்று சொல்லி முடித்துக் கொண்டார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "இந்த சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது, இதனால் பாதிக்கப்படும் அனைத்துத் தரப்பினரிடமும் ஆலோசனை நடைபெற்று வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அறிவிப்பு நமது ஏற்றுமதி - இறக்குமதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் மொத்தப் பொருட்கள் ஏற்றுமதியில் 18 விழுக்காடும், இறக்குமதியில் 6.22 விழுக்காடும் அமெரிக்கா கொண்டுள்ளது.

இப்போதைய அந்த அரசின் வரி விதிப்பானது இதனைப் பாதிக்கும்.நடப்பு நிதி ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.7 விழுக்காட்டில் இருந்து 6.5 விழுக்காடாக குறைந்துள்ளது. இதனை, அமெரிக்காவின் நடவடிக்கையானது இன்னும் குறைக்கும். டிரம்ப் அறிவிப்பால் இந்திய பங்குச் சந்தை பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. வாகனம், ஆபரணம், தகவல் தொழில் ஆகியவற்றின் பங்குகள் சரியத் தொடங்கியது.

ஜவுளி, ஆடைகள், மின்னணுப் பொருட்கள், நகைகள், வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், இயந்திரங்கள், ரசாயன உரங்கள், மருந்துகள், ஐ.டி. மற்றும் சேவைகள் மிகப் பெரிய அளவுக்கு இந்தியாவில் பாதிக்கப்படும். ஆனால் அதைப் பற்றி எல்லாம் பா.ஜ.க. தலைமை கவலைப்படுவது இல்லை. வரி விதிப்புக்கு உள்ளாகாத ரஷ்யாவும், சிங்கப்பூரும் இதனைக்கண்டித்துள்ளது. ஆனால், பாதிப்புக்கு உள்ளாக இருக்கும் இந்தியா கண்டிக்கவில்லை. பிரதமர் மோடி, யாருக்கான பிரதமர்?!

Also Read: ”திராவிட Ideology-ஐ ஏற்றுக்கொண்டவர் அம்பேத்கர்” : ஆ.ராசா MP பேச்சு!