murasoli thalayangam

“உயர்ந்த உள்ளம் இருப்போரால் தான் உயர்ந்தவர்களைப் போற்ற முடியும்!” : முரசொலி புகழாரம்!

தலைநகர் சென்னையில் மாபெரும் நூலகத்தை அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அதற்கு, 'பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம்' என்று பெயர் சூட்டினார்கள். கலைநகராம் மதுரையில் மாபெரும் நூலகத்தை அமைத்த திராவிட நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அதற்கு, 'கலைஞர் நூற்றாண்டு நூலகம்' என்று பெயர் சூட்டினார்கள்.

தொழில் நகராம் கோவையில் அமைய இருக்கும் நூலகத்துக்கு 'தந்தை பெரியார் நூலகம்' என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். இதைத் தொடர்ந்து மலைக்கோட்டை நகராம் திருச்சியில் அமைய இருக்கும் நூலகத்துக்கு 'பெருந்தலைவர் காமராசர்' பெயர் சூட்டப்படும் என்று நேற்றைய தினம் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

"இது ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு" என்று சொல்வதற்குஏற்பவே இதனை முதலமைச்சர் அவர்கள் அறிவித்துக் காட்டி இருக்கிறார்கள்.கலைஞர் அவர்கள் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தபோது, “தமிழர்களுக்கு கண் கொடுத்தார் காமராசர். கலைஞர் கருணாநிதி அவர்கள்தமிழர்களை எழுந்து நடக்க வைக்க வேண்டும்" என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

அத்தகைய ஆட்சியை நடத்தியவர் காமராசர். இராஜாஜி காலத்தில் மூடப்பட்ட பள்ளிகளைத் திறந்தும், புதிய பள்ளிகளை உருவாக்கியும் 'கல்விக் கண் திறந்த காமராசர்' என்று போற்றப்பட்டார் அவர். பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்குப் பச்சைத் தமிழர் என்று முதன் முதலில் பட்டம் சூட்டியவர் தந்தை பெரியார் அவர்கள். இதைவிட பலமடங்கு மேலே போய், 'இரட்சகர்' என்று காமராசரைச் சொன்னவரும் தந்தை பெரியார் அவர்கள்தான்.

இரட்சகர் என்பது ஒருவிதத்தில் ஆன்மீக அர்த்தம் தருகின்ற ஒரு சொல். அய்யா அவர்கள் அப்படிச் சொல்லலாமா? என்று கூட அந்தக் காலத்தில் விமர்சனம் எழுந்தது உண்டு. 'ஆமாம்! காமராசர் தமிழர்களுக்கு இரட்சகர்தான்' என்று பெரியார் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். 'தமிழ்ப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்,தமிழர்களுக்கு வேலை கொடுக்கிறார்.

இப்படிப்பட்டவர் இரட்சகர் தானே'என்று சொன்னார் பெரியார்.காமராசர் காலத்து கல்விப் புரட்சி குறித்து 'ஆனந்த விகடன்' எழுதிய தலையங்கத்தில், 'காரணம் பெரியார் - காரியம் காமராசர்' என்று எழுதப்பட்டது. குடியாத்தம் தொகுதியில் காமராசர் அவர்கள் போட்டியிட்ட போது அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தாதவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

அன்றைக்கு தி.மு.க.வும் காங்கிரசும் எதிரெதிராக அரசியல் களத்தில் இருந்தன. ஆனாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் முடிவெடுத்தார் பெருந்தகை அண்ணா.பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கும் தலைவர் கலைஞருக்குமான நட்பு என்பது தந்தை - மகன் உறவைப் போல நெருக்கமானதாக இருந்தது.

நெருக்கடி நிலையை எதிர்த்து நான் பதவி விலகத் தயாராக இருக்கிறேன்' என்று முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் சொன்னபோது, “பதவி விலகக் கூடாது, இந்தியாவில் தமிழகத்தில்தான் சுதந்திரக் காற்று வீசுகிறது" என்று சொன்னவர் காமராசர் அவர்கள். 'நாங்கள் பதவி விலகி விட்டு வருகிறோம், நெருக்கடி நிலைக்கு எதிரான உங்கள் போராட்டத்துக்கு உங்கள் தலைமையின் கீழ் அணிவகுத்து வருவோம்' என்று சொன்னவர் தலைவர் கலைஞர்.

புகுமுக வகுப்புவரை இலவசக் கல்வி என்று முதலமைச்சர் கலைஞர் அறிவித்த பிறகுதான் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் பள்ளிகளை நோக்கி வந்தார்கள். இதை அறிந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களே, 'எனக்கு இது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கலைஞர் கருணாநிதியிடம் சொல்லுங்கள்' என்று சொல்லி அனுப்பினார்கள். இன்றைய முதலமைச்சர் அவர்களுக்கு 1975 ஆம் ஆண்டு திருமணம் நடந்த போது வந்து வாழ்த்தியவர் பெருந்தலைவர் காமராசர்.

அவர் உடல் நலிவுற்றிருந்த காலம் அது. அவரது கார் மேடைக்கு வரும் வகையில் மேடையை மாற்றி அமைத்திருந்தார் தலைவர் கலைஞர் அவர்கள். பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மறைந்த போது அவருக்கு ஒரு மகனைப் போல இறுதி நிகழ்ச்சிகளை நடத்தியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது மட்டுமல்ல; அரசு இடத்தில் அவரை அடக்கம் செய்து நினைவு மண்டபம் கட்டியவர் முதலமைச்சர் கலைஞர்.

பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மறைந்தபோது, கடற்கரைச் சாலைக்கு அவரது பெயரை வைத்தார் முதலமைச்சர் கலைஞர். சென்னை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றிய போதுதான் பெருந்தலை- வர் காமராசருக்கு முதன்முதலாக சென்னையில் சிலை வைக்கப்பட்டது. அதற்கான அனுமதியை வழங்கியது தி.மு.க. மேயர்.

கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர். நெல்லையில் பெருந்தலைவர் காமராசருக்கு சிலை காமராசரின் செயலாளராக இருந்த வைரவனுக்கு வேலை வழங்கி அரசு வீடு வழங்கியது காமராசரின் சகோதரி நாகம்மாளுக்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து நிதி உதவி - பிரதமர் வி.பி.சிங் அவர்களிடம் வலியுறுத்தி சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராசர் பெயர்.

காமராசர் பிறந்த ஜூலை 15-ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட சட்டம் ஆகியவற்றைச் செய்து காட்டியவர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். இதே வழித்தடத்தில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பெருந்தலைவரைப் போற்றி வருகிறார்.

1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட கல்லூரிக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்துக்கு காமராசர் பெயரைச் சூட்டினார் முதலமைச்சர் அவர்கள். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு மூன்று படகுகள் விடப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர். ஐரோப்பிய தமிழறிஞர் ஜி.யு.போப், தென் தமிழகப் போராட்ட வீரர் மார்ஷல் நேசமணி, பெருந்தலைவர் காமராசர் ஆகிய மூவர் பெயரைச் சூட்டினார். இந்த வரிசையில்தான் திருச்சியில் அமைய இருக்கும் மாபெரும் நூலகத்துக்குப் பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

உயர்ந்த உள்ளம் இருப்போரால் தான் உயர்ந்தவர்களைப் போற்ற முடியும் என்ற அடிப்படையில் உயர்ந்து நிற்கிறார் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

Also Read: “வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக வழக்குத் தொடரும்...” - பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு!