murasoli thalayangam

”திராவிட மாடல் அரசின் நல்லாட்சியின் இலக்கணம்” : பொருளாதார அறிக்கைக்கு முரசொலி புகழாரம்!

முரசொலி தலையங்கம் - (17-03-2025)

பொருளாதார ஆய்வறிக்கையும் நிதிநிலை அறிக்கையும் - 1

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டை எத்தகைய உன்னதமான நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார் என்பதை விளக்கும் அறிக்கையாக தமிழ்நாடு அரசின் பொருளாதார அறிக்கை அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற அடிப்படையில் எத்தகைய ஆட்சியை நடத்தி வருகிறார் என்பதை உணர்த்தும் அறிக்கையாக தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

இந்த இரண்டு அறிக்கைகளும் ஒரு நல்லாட்சியின் இலக்கணமாக - மக்களாட்சியின் வடிவமாக - கொள்கை ஆட்சியை உணர்த்துவதாக அமைந்துள்ளன.

பொதுவாகவே பொருளாதார அறிக்கை வெளியிடுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த மாணவன், சத்தம் போட்டு தனது மதிப்பெண்ணைச் சொல்வதைப் போன்ற செயல் இது. தோல்வி அடைந்த மாணவர், அப்படிச் சொல்வது இல்லை. அது போல, வளர்ந்த மாநிலம், வளர்ச்சியை அடைந்த மாநிலம், வளர்ச்சியை உருவாக்கிய மாநிலம்தான் இத்தகைய அறிக்கையை வெளியிட்டு வெளிச்சப்படுத்திக் கொள்ள முடியும்.

தமிழ்நாடு அரசின் மாநிலத் திட்டக் குழுவின் சார்பில், ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024—25’ வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இப்படி ஒரு ஆய்வறிக்கை வெளியானது இல்லை. இப்படி ஒரு அறிக்கையை இந்தியாவின் வேறு எந்த மாநிலமும் வெளியிட இயலாது என்று சொல்லும் அளவுக்கு இந்த அறிக்கை அமைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சிப் போக்கை பாதிக்கும் உலக அளவிலான சவால்களை தமிழ்நாட்டுப் பொருளாதாரம் சமாளித்து எதிர்கொண்ட விதத்தை பொருளாதார ஆய்வறிக்கை விவரிக்கிறது.

2023 ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரமானது 3.33 விழுக்காடு தான் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியப் பொருளாதாரமானது 6.48 விழுக்காடு என்ற அளவைத் தான் எட்டி உள்ளது. ஆனால் தமிழ்நாடு, கழக அரசு அமைந்த 2021 ஆம் ஆண்டு முதல் 8 விழுக்காடு - அதற்கும் கூடுதலான வளர்ச்சியைப் பெற்றுள்ளதை இந்த அறிக்கை உறுதி செய்துள்ளது. வரும் ஆண்டிலும் இது தக்க வைக்கப்படும் என்பதைவிட, இன்னும் கூடுதல் ஆகும் என்பதையும் இந்த அறிக்கை நம்பிக்கையாகச் சொல்லி இருக்கிறது.

இதற்குக் காரணம், இந்திய நாட்டின் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( ஜி.டி.பி.) தமிழ்நாடு 9.21 விழுக்காடு அளவுக்கு பங்களித்துள்ளது. அதாவது இந்திய நாட்டின் வளர்ச்சியில் நூறில் பத்து விழுக்காடு பங்கை தமிழ்நாடு செலுத்தி வருகிறது. மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜி.எஸ்.டி.பி.) ரூ.27.22 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது. இதன் காரணமாக பெயரளவு வளர்ச்சி விகிதம் 13.71 விழுக்காடு ஆகவும், உண்மையான வளர்ச்சி விகிதம் 8.33 விழுக்காடு ஆகவும் இருக்கிறது.

சமூக முன்னேற்றக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. உயர்கல்விச் சேர்க்கை விகிதத்தில் முதலிடத்தில் உள்ளது. குறைந்த வறுமை நிலைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நீடித்த வளர்ச்சிக் குறியீட்டிலும் மருத்துவக் குறியீட்டிலும் மூன்றாவது இடத்தில் உள்ளது. சமூகத் துறைக்கான செலவினங்களை தமிழ்நாடு அரசு அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம்.

இந்தியாவின் வறுமை நிலை என்பது 11.28 விழுக்காடாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் வறுமை நிலை என்பது 1.43 ஆகக் குறைந்துவிட்டது. அதாவது குறைக்கப்பட்டு விட்டது.

பணவீக்கம் குறைந்து வரும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. 20 முக்கிய இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 8 இடத்தில் - – குறைந்த சில்லறை வர்த்தகப் பணவீக்கத்தைக் கொண்டுள்ள மாநிலமாக இருக்கிறது. மானிய விலையில் பொருள்கள் வழங்குவதும், சமூக நலத் திட்டங்களும், மகளிர் உரிமைத் தொகையும் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் தனிநபர் வருமான வளர்ச்சியானது தொடர்ந்து பல ஆண்டுகளாக தேசிய சராசரியையும் விட அதிகமாக இருக்கிறது. இதற்குக் காரணம், தமிழ்நாடு என்பது ‘சென்னையைச் சுற்றி’ என்று இல்லாமல் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதியைச் சுற்றிலும் தொழில் வளர்ச்சி அமைவதால்தான். அனைத்து நகரங்களும் வளர்கின்றன. கிராமப்புறப் பகுதிகள், நகரப் பகுதிகளைப் போல வளர்கின்றன. இதனால் நகரம் - கிராமம் இடைவெளியானது பல ஊர்களில் குறைந்தும் காணப்படுகிறது.

அதிகம் தொழில்மயமாக்கப்பட்ட – நகர்மயமாக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. சேவைத் துறையானது மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்புக் கூட்டலில் ( ஜி.எஸ்.வி.ஏ.) 53.64 விழுக்காடு பங்களித்துள்ளது.

வேளாண்மைத் துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. கரும்பு, எண்ணெய் உற்பத்தியில் முதலிடமும், மக்காச் சோள உற்பத்தியில் இரண்டாம் இடமும், நெல் உற்பத்தியில் மூன்றாவது இடமும் பெற்றுள்ளது. பாசனப் பரப்பு அதிகமாகி உள்ளது. உற்பத்தி அதிகமாகி உள்ளது.

தொழில் நிறுவனங்கள் அதிகமாகி வருகிறது. தொழிலாளர் அதிகரித்து வருகிறார்கள். பொருளாதார வளர்ச்சிக்கும் சமூகநிலைத் தன்மைக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மிக முக்கியக் காரணியாகும் என்பதை உறுதி செய்கிறது இந்த அறிக்கை.

இத்தகைய வளர்ச்சிக்கு என்ன காரணம் என்பதையும் இந்த ஆய்வறிக்கை மிகச் சரியாகச் சொல்கிறது. “தமிழ்நாட்டின் முற்போக்கான சமூக நலக் கொள்கைகளும், வலுவான உள்கட்டமைப்பு வசதிகளும், பெரும் எண்ணிக்கையிலான திறன்மிகு தொழிலாளர்களும் இம்மாநிலத்தை மேம்பட்ட பொருளாதார வளர்ச்சிப் பாதையில் இடம்பெறச் செய்துள்ளனர்” என்கிறது இந்த அறிக்கை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ஆட்சிக்கு ‘திராவிட மாடல்’ என்றும், ‘அதன் பொருள் என்பது எல்லார்க்கும் எல்லாம்’ என்றும் சொல்வதும் இதனைத்தான். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். அதனைத்தான் இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையும் உறுதி செய்துள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இலக்கு வைத்துள்ளார்கள். இதனை எட்ட முடியும் என்பதை உணர்த்துவதாக பொருளாதார ஆய்வறிக்கை அமைந்துள்ளது.

-தொடரும்

Also Read: பழனிசாமியின் துரோக வரலாற்றை விவாதம் நடத்தித்தான் வெளிச்சம் போட வேண்டுமா? : முரசொலி!