murasoli thalayangam

தென்னிந்தியாவுக்கே முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - முரசொலி புகழாரம் !

முரசொலி தலையங்கம் (07-03-2025)

தென்னிந்தியாவுக்கே முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் – மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தென்னிந்தியாவுக்கே ஒட்டுமொத்த முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு – மும்மொழித் திட்டம் ஆகியவை குறித்து முதலமைச்சர் முன்னெடுக்கும் முழக்கங்கள் தமிழ்நாட்டைத் தாண்டி பல்வேறு மாநில மக்களிடமும் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொகுதி மறுவரையறையால் தென் இந்தியாவிற்கு முன்கூட்டியே ஏற்படும் அபாயத்தை சுட்டிக்காட்டும் வகையில் அதனை எதிர்த்து 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைக்க நினைக்கும் அநீதிக்கு எதிராக முதல் குரலை மாண்புமிகு முதலமைச்சர் எழுப்பினார்கள். இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் அவர்கள் நடத்தினார்கள். 63 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 58 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இதில் ஒருமித்த உணர்வோடு இருக்கிறது என்பதை உணர்த்திக் காட்டிவிட்டார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

“தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது. எனவே, இந்தச் சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில், மக்களவை – மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளின் இடங்கள் குறையும் என்று சொல்வது, “மக்கள் தொகை கட்டுப்பாடு” எனும் கொள்கையை, முனைப்பாக செயல்படுத்தி, நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென் மாநிலங்களுக்கு தரப்படும் தண்டனையாகதான் அமையும். இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும் தென் மாநிலங்களின் அரசியல் உரிமைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது, இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைமீதான நேரடி தாக்குதல். இப்படியொரு சம நீதியற்ற அநீதியான தொகுதி மறுசீரமைப்பு செயல்படுத்தப்பட்டால், இந்திய அரசியலில் தமிழ்நாட்டின் குரல் நெரிக்கப்படும்”என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேசியிருக்கிறார்கள். இது தமிழ்நாட்டுக்கான குரல் மட்டுமல்ல, தென் மாநிலங்கள் அனைத்துக்குமான குரல் ஆகும்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் தமிழ்நாட்டுக்கான தீர்மானமாக மட்டுமல்லாமல்; தென் மாநிலங்கள் அனைத்துக்குமான தீர்மானமாக அமைந்துள்ளது.

•இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய – மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது.

•நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது.

•மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971–ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளு மன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000–ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் அவர்கள் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026–இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்கள் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

•நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971–ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

•தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது – என்று இக்கூட்டம் வலியுறுத்தி இருக்கிறது. இத்தோடு முடிந்திருந்தால் இது ஒரு பொதுவான ஆலோசனைக் கூட்டமாக முடிவு பெற்றிருக்கும். இதனைத் தொடர்ந்து செய்ய வேண்டிய செயலானது, தமிழ்நாட்டைத் தாண்டி தென்னிந்தியாவுக்கானதாக மாற்றி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

இக்கோரிக்கைகளையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானித்துள்ளது.

தென்னிந்திய மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் உரிமை பறிப்பிற்கு எதிரான போராட்டத்தை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இதன் மூலமாக தென்னிந்தியாவுக்கே முன்னோடி முதலமைச்சராக அடையாளம் காணப்பட்டுள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

இந்தி பேசும் நான்கைந்து மாநிலங்களில் அரசியல் செய்தால் போதும், பிற மாநிலங்களை திரும்பி பார்க்கக் கூடத் தேவையில்லை, ஒட்டுமொத்த இந்தியாவை தொடர்ந்து ஆண்டு கொண்டே இருக்கலாம் என்கிற பா.ஜ.க.வின் சதி எண்ணத்தைத் தான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள 888 இருக்கை வசதிகள் சுட்டிக்காட்டுகின்றன. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்தி பேசும் 10 மாநிலங்களில் உள்ள 225 இடங்களில் 80 சதவீத இடங்களை அதாவது 178 தொகுதிகளை பா.ஜ.க. பெற்றது. தொகுதி மறுவரையறை செய்த பின் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த 10 மாநிலங்களில் 80 சதவீத வெற்றியை பா.ஜ.க. வெற்றி பெற்றாலே ஒன்றியத்தில் தனித்து ஆட்சி அமைத்துவிடும். மற்ற 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்கள் 100 சதவீத தோல்வியை பா.ஜ.க.விற்கு அளித்தால்கூட இந்திய ஒன்றியத்தை ஆள்வது பா.ஜ.க.வாகத்தான் இருக்கும். எனவே தான் இந்த தொகுதி மறுவரையறைச் செய்யத் துடிக்கிறார்கள்.

இந்த அரசியல் ஆபத்தை தென்னிந்தியாவுக்கு உணர்த்தி விட்டார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இவை எல்லாம் அரசியல் களத்தில் – பொதுவெளியில் அம்பலம் ஆகி வருகிறதே என்பதால்தான் மாண்புமிகு முதலமைச்சர் மீது பாய்கிறது பா.ஜ.க.

Also Read: ”2026 தேர்தலில் பா.ஜ.கவுக்கு மரண அடி கிடைக்கும்” : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!