murasoli thalayangam

“தமிழ்நாடு முழங்கிய மொழிப்பற்றை இன்று இந்தியா முழங்குகிறது” : சூளுரைத்த முரசொலி !

“ஜனசங்கம் இங்கே (தென்னாட்டில்) தழைக்கவே முடியாது” என்று 'சிகாகோ டெல்லி டைம்ஸ்' நாளிதழுக்கு (9.10.1958) அளித்த பேட்டியில்பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள். பா.ஜ.க.வின் தாய் அமைப்பு ஜனசங்கம். இவர்களது லட்சணம் இப்படித்தான் இருக்கும் என்று 1958 ஆம் ஆண்டே கணித்தார் அண்ணா. அதனால்தான் அவர் பேரறிஞர்.

நமக்கு வாக்களிக்காதவர் வாழும் மாநிலத்துக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கப் போவதும் இல்லை. பா.ஜ.க. தமிழ்நாட்டுக்கு உதவப் போவதும் இல்லை என்பதுதான் நிலைமை. தமிழ்நாட்டைப் போராடும் நிலைமையில்தான் இன்னமும் ஒன்றிய பா.ஜ.க. அரசு வைத்திருக்கிறது. அது திருந்துவதாகத் தெரியவில்லை.எத்தனை அரசியல் அடிகளை வாங்கினாலும், அரசியல் பின்னடைவுகளை அடைந்தாலும் அதில் இருந்து பா.ஜ.க. தலைமை பாடம் கற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.

ஆர்.என்.ரவியை எல்லாம் வைத்து ஆட்டம் காட்டும் பா.ஜ.க.வினருக்கு முன்புத்தியும் இல்லை. பின் புத்தியும் இல்லை என்பது நாளும் தெரிந்து கொண்டுதான் இருக்கிறது.“தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" - என்ற முழக்கத்தை முழங்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அனைவரையும் முழங்க வைத்திருக்கிறார் முதலமைச்சர்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசானது, மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனைகளை விதித்து, அத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிரமங்களை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல், அத்திட்டங்கள் முடங்கும் சூழ்நிலையையும் உருவாக்கி யுள்ளது. ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ், ஒன்றிய அர- சிடமிருந்து வரப்பெற வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிலுவையிலேயே உள்ளது.

மும்மொழித் திட்டத்தை ஏற்றுக் கொண்டால்தான் இந்த நிதியைத் தருவோம் என நிபந்தனை போடுகிறார்கள். தேசிய உயர்கல்வி இயக்கத்தின் (RUSA) கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மீதும் புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு திணிப்பதால், இத்திட்டங்களும் தற்போது முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலானது ஏற்படுத்தியுள்ள பேரழிவுகளைக் குறிப்பிட்டு, தற்காலிக மற்றும் நிரந்தர நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு 6,675 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பீடுகள் செய்யப்பட்டு, நிதி விடுவிப்புக் கோரிக்கை ஒன்றிய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை எந்தவொரு நிதியையும் ஒன்றிய அரசானது விடுவிக்கவில்லை.மூன்று இயற்கைப் பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது. மாநில அரசு கோரிய 37,906 கோடி ரூபாயில் ஒருசதவீதம் கூட இதுவரை தரப்படவில்லை.

ஒன்றிய அரசு வீடுதோறும் குடிநீர் (Jal Jeevan Mission) என்ற திட்டத்தை வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய 4,142 கோடி ரூபாயில், 732 கோடி ரூபாயை மட்டுமே வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் திட்டமான பிரதமர் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் (PMAY-U), கீழ் வழங்கப்படும் மானியத் தொகையானது, 2016 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, 1.5 இலட்சம் ரூபாயாகவே இருக்கிறது.

இத்திட்டத்தினைச் செயல்படுத்திவரும் தமிழ்நாடு அரசானது, வீடு ஒன்றிற்கு 12 முதல் 14 இலட்சம் ரூபாயை தன் சொந்த நிதியின் மூலம் மானியமாகக் கொடுத்து வருகிறது. இப்படி பல்வேறு உதாரணங்களைச் சொல்ல முடியும்.பொதுவாக ஒரு கட்சி, ஏதாவது சில நன்மைகளைச் செய்து காட்டுவதன் மூலமாக அந்த மக்களிடம் இருந்து வாக்குகளை வாங்க நினைக்கும். அந்தக் குறைந்தபட்ச அறிவு கூட பா.ஜ.க. தலைமைக்கு இல்லையே ஏன்?

அவர்களுக்கு வாக்குகளை வாங்குவதை விட, 'தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்துவிடக் கூடாது' என்பதுதான் உண்மையான நோக்கம். தமிழ்நாடு வளர்ந்து விடக் கூடாது, தமிழர்கள் வளர்ச்சியை அடைந்து விடக் கூடாது என்பதுதான் பா.ஜ.க. தலைமையின் கெட்ட எண்ணம் ஆகும். தி.மு.க. அரசின் கொள்கைகள் வேறு. பா.ஜ.க.வின் அரசியல் கொள்கை முற்றிலும் வேறு. அரசியல் ரீதியான கொள்கைகளில் மட்டும் முரண்பட்டால் பரவாயில்லை. அந்த அரசியல் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் வெள்ள நிவாரண நிதி தருவதில்லை, பள்ளிப் பிள்ளைகள் - ஆசிரியர்கள் நலனுக்கான நிதி தருவது இல்லை, மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்கு நிதி தருவது இல்லை, பத்தாண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவது இல்லை என்று சொன்னால் என்ன பொருள்?

தமிழ்நாட்டுக்கு எதுவும் கிடைத்து விடக் கூடாது, எதுவும் தந்துவிடக் கூடாது என்ற சதிச் செயலை பா.ஜ.க. செய்கிறது.அரசியலாக மட்டுமல்ல, அக்கறையால் கூட தமிழ்நாட்டுக்கு எதையும் செய்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். அதற்குக் காரணம் தமிழ்நாட்டை அவர்கள் 'தீண்டத்தகாத மாநிலமாக' பார்க்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு உதவினால் தமிழ்நாடு வளர்ந்துவிடும் என்பது ஒரு பக்கம். தமிழ்நாட்டைப் பார்த்து மற்ற மாநிலங்களும் வளர்ந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டை ஒதுக்க ஒதுக்கவே, தமிழ்நாடு அதிகமாக வளர்கிறது.

முதலமைச்சர் அவர்களின் வேகமும், விவேகமும் இன்னும் அதிகமாகிறது. தமிழ்நாட்டு மக்கள் முன்னிலும் அதிகமாக அரசியல் விழிப்பைப் பெறுகிறார்கள். இந்த உணர்வானது தமிழ்நாட்டு எல்லைகளைக் கடந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குப் பரவி வருகிறது என்ற வகையில் பார்த்தால் பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியல், ஒருவித நன்மையையும் செய்கிறது.

தமிழ்நாடு பேசிய சமூகநீதியை இன்று இந்தியா பேசுகிறது. தமிழ்நாடு பேசிய மாநில சுயாட்சியை இன்று இந்தியா பேசுகிறது. தமிழ்நாடு முழங்கி வரும் மொழிப்பற்றை இன்று இந்தியா முழங்கி வருகிறது. தமிழ்நாட்டின் போராட்டமானது இந்தியாவை விழிப்படையும் போராட்டமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சராகவும் அமர்ந்து தமிழ்நாட்டுக்காக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாட்டை அவர் வெல்ல வைப்பார். அது இந்தியா முழுமைக்குமான வெற்றிக்கும் பாதை அமைக்கும்.

Also Read: அ.தி.மு.கவை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை உதிரியாக பார்க்கிறோம் : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!