murasoli thalayangam

இப்படி ஒரு விதி இருப்பதே ஜனநாயக விரோதம் அல்லவா? : வெளுத்து வாங்கிய முரசொலி!

முரசொலி தலையங்கம் (23-01-2025)

பல்கலைக்கழகங்களைக் காப்போம்!

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதி உள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக மாநில முதலமைச்சர்களுக்கும் எழுதியிருக்கிறார்.

“பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என 9.1.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைப் போன்று உங்கள் மாநில சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றுங்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதில் மிகமிக முக்கியமானது பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிப்பது ஆகும். பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகபட்ச அதிகாரத்தை ஆளுநர்களிடம் இருந்து பறித்தாலே, பல்கலைக் கழகங்கள் உருப்பட்டு விடும்.

இத்தகைய கெடுதல் போதாது என்று கல்வியாளர்கள் அல்லாதவர்களை துணைவேந்தர்களாக நியமிக்கலாம் என்று இப்போது விதியைக் கொண்டு வந்து நுழைக்கிறார்கள். மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து மூடப்பட்ட ஒரு தொழிற்சாலையின் மேனேஜரை இனி துணைவேந்தர் ஆக்கலாம். கார்ப்பரேட் கம்பெனியாக பல்கலைக் கழகங்களை மாற்றப்போகிறார்கள். இதுதான் யு.ஜி.சி.யின் புதியவிதி ஆகும். இதற்கு என்னகாரணம்? இது ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. ஆட்களை துணை வேந்தர் களாக நுழைக்கும் தந்திரம் ஆகும். யாரை வேண்டுமானாலும் ஆளுநர் ஆக்கி ஒரு மாநிலத்தின் கழுத்தை அறுக்கலாம் என்பதைப் போல யாரை வேண்டுமானாலும் துணைவேந்தர் ஆக்கி பல்கலைக் கழகங்களை ஒழிக்கலாம் என்று நினைக்கிறார்கள். தமிழிசையோ- கே.டி. ராகவனோ ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஆனால் என்ன ஆகும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

அகில இந்திய அளவில் துணைவேந்தர் தேர்வை நடத்தப் போகிறார்களாம். இது தமிழ்நாட்டில் இருக்கும் திறமையான கல்வியாளர்களைப் பாதிக்கும். ஒரு சூரப்பா வந்த பிறகுதான் அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரே குட்டிச்சுவரானது. இப்படி பல சூரப்பாக்கள் வருவார்கள்.

பூனா திரைப்படக் கல்லூரிக்கு எந்தத் தகுதியும் இல்லாதவர் நியமிக்கப்பட்டார் என்று அங்குள்ள மாணவர்களே போராட்டம் நடத்தினார்கள். ICSSR ஆராய்வு நிறுவனத்துக்கு அதில் தொடர்பு இல்லாத ஒருவரை தலைவராகப் போட்டார்- கள். ICCR என்ற இந்திய கலாச்சார ஆய்வு நிறுவனத்துக்கு பா.ஜ.க. எம்.பி.யான வினய் சகஸ்ரபுத்தேவை நியமித்தார்கள். வாழ்நாளில் ஒரு ஆய்வுக் கட்டுரையைக் கூட எழுதாத சுதர்சன ராவ் என்ற ஒருவரை ICHR என்ற வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக நியமித்தார்கள். புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் 22 பேர் கொண்ட குழுவை அவர் வந்ததும் கலைத்து சாதனை செய்தார். (அகில இந்திய பல்கலைக் கழக ஆசிரியர் மன்றங்களின் தலைவரான பேராசிரியர் ஜேம்ஸ் வில்லியம்ஸ் இது குறித்து விரிவாக எழுதி இருக்கிறார்)

பல்கலைக் கழகங்கள் மாநில அரசின் முழுமையான நிதி உதவியால் தான் நடக்கின்றன. எனவே, மாநில அரசுகளின் எண்ணப்படி தான் பல்கலைக் கழகங்கள் நடத்தப்பட வேண்டும். மாறாக ஆளுநர்கள் தங்கள் விருப்பத்துக்கு நடத்த- லாம் என விட முடியாது. ரவி இப்போது இருப்பார். நாளை, ‘மணிப்பூர்' ஆளுநராக பந்தாடப்பட்டு விடுவார். அவரால் நியமிக்கப்படும் துணைவேந்தர்களுக்கு அவரால் உத்தரவாதம் தர முடியுமா?

மாணவர் சேர்க்கை விதிமுறைகள் இன்னும் கேவலமாக இருக்கின்றன. இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்துதல் மிக மோசமானது ஆகும். இறுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றுத் தான் அவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மீண்டும் நுழைவுத் தேர்வு வைப்பது அபத்தம் ஆகும். நுழைவுத் தேர்வுகள் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்விக்கான சேர்க்கையைக் குறைத்துவிடும். மாறுபட்ட கல்வி முறைகள் கொண்டநாட்டில் ஒரே விதமான நுழைவுத் தேர்வு என்பது நடைமுறைக்கு ஒவ்வாது.

மாணவர்கள் தங்கள் மேல்நிலைப்பள்ளி பாடப்பிரிவைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு பட்டப்படிப்பையும் தொடர அனுமதிக்கும் முறை என்பது போதுமான அடிப்படை பாட அறிவு இல்லாமல் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்- குத் தேவையற்ற கல்வி அழுத்தத்தை உருவாக்கும். கலைப் பாடங்களைப் படித்தவர்களை, அடுத்து உயர் பொறியியல் பாடம் படிக்க அனுமதிப்பதும் மிக மோசமான பின் விளைவுகளை உருவாக்கும். என்ன மனநிலையில் இது போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டது எனத் தெரியவில்லை.

யாரும் படிக்கக் கூடாது, படித்தாலும் உருப்படக் கூடாது என்று நினைப்பவர்களால் தான் இது போன்ற விதிமுறைகளை வகுக்க முடியும்.

பல்கலைக் கழகங்களை உருவாக்கும் அதிகாரம் மாநிலப் பட்டியலில் (பிரிவு 32) தான் இருக்கிறது. அப்படியானால் பல்கலைக் கழகங்களை நிர்வகிக்கும் வழிநடத்தும் தலைமை வகிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வேண்டாமா?

பல்கலைக் கழகங்களைக் காக்க கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் முன் வர வேண்டும்.

Also Read: ”தமிழை உலகமெல்லாம் கொண்டு சேர்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம்!