murasoli thalayangam

தேர்தல் : “பழனிசாமி எந்தக் கூட்டணி அமைத்தாலும் தோற்றுத்தான் போகப் போகிறார்” - முரசொலி கிண்டல்!

"வெல்வோம் இருநூறு ; படைப்போம் வரலாறு"

"வெல்வோம் இருநூறு ; படைப்போம் வரலாறு" - என்று முழங்கி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். சொல்வதற்கான துணிச்சலும், தகுதியும் அவருக்கு உண்டு. அவர் தலைமைப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நின்று, வென்று காட்டிய வெற்றி நாயகர் அவர் என்பதால்!

இலட்சோப லட்சம் தொண்டர்களுக்குத் தலைமை தாங்கும் தலைவர் என்ற தகுதியோடு இதனைச் சொன்னார் மாண்புமிகு தலைவர் அவர்கள். "நம்மை எதிர்த்து மற்ற கட்சிகள் தனித்தனியாக வந்தாலும், கூட்டணியாக வந்தாலும் தி.மு.க. கூட்டணிதான் வெல்லும்" என்பதையும் உறுதியாகச் சொன்னார். இவை அனைத்தும் வெறும் நம்பிக்கை வார்த்தைகள் மட்டுமல்ல; கள உண்மையும் அதுதான் என்பதையும் சொன்னார் தலைவர் அவர்கள்.

பழனிசாமி சொல்லி வரும் கப்சா கணக்கை முதலில் உடைத்து விட்டார் தலைவர் அவர்கள்.

"2019 நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 19.4 விழுக்காடு வாக்குகளை வாங்கியது. இதுவே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டும் வெறும் 20.4 விழுக்காடு வாக்குகள்தான் வாங்கியிருக்கிறது. 14தொகுதிகளில் அதிகமாகப் போட்டியிட்ட அ.தி.மு.க.நியாயமாகப் பார்த்தால் 32.98 விழுக்காடு வாக்கு களை 2024 தேர்தலில் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதைவிட 12.58 விழுக்காடு வாக்குகள் குறை வாகத்தான் வாங்கியிருக்கிறது.

எளிமையாகச் சொன்னால், 2019-இல் சராசரியாக ஒரு தொகுதிக்கு 4.16 லட்சம் வாக்குகள் வாங்கிய அ.தி.மு.க. 2024 - இல் வெறும் 2.61 லட்சம் வாக்குகள்தான் வாங்கியிருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் சராசரி யாக 1.5 லட்சம் வாக்குகளை இழந்திருக்கிறது பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இப்படி, மக்களால் நிராகரிக்கப்பட்டு ஓரங்கட்டப் பட்ட பழனிசாமி, அ.தி.மு.க. தொண்டர்களுக்குச் சாதாரண கூட்டல் - வகுத்தல் கணக்கே தெரியாது என்று நம்பிப் பொய்க் கணக்கை அவிழ்த்துவிட்டிருக்கிறார். அவர் சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அ.தி.மு.க. காரர்களே கேட்டு சிரிக்கிறார்கள்" என்று சொல்லி பழனிசாமியின் பொய்க் கணக்கை உடைத்தார் தலைவர் அவர்கள்.

தி.மு.க. எந்தளவுக்கு பலம் பெற்றுள்ளது என்பதை 23.12.2024 தேதியிட்ட 'தினமணி'யில் வெளியான கட்டுரை சொல்லி விட்டது. '200 இலக்கு; யாருக்குச் சாத்தியம்?' என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் பீ.ஜெபலீன் ஜான் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். அதில் தி.மு.க.வின் வெற்றிக் கணக்கை மிகத் துல்லியமாகக் கணித்துக் காட்டிவிட்டார்.

'தினமணி' கட்டுரையாளர் சொல்கிறார்...

* மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தி.மு.க. கூட்டணி 2019, 2021, 2024 ஆகிய மூன்று பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. கலைஞர் தலைமையிலான கூட்டணி கூட இது போல மூன்று பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெறவில்லை.

* மூன்று பொதுத் தேர்தல்களில் ஒரே கூட்டணியை உடையாமல் அரவணைத்துச் செல்லும் பெருமையை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றுள்ளார் என்பது தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய பலம்.

* தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை 2019 இல் 53.15 விழுக்காடு, 2021 இல் 45.38 விழுக்காடு, 2024-இல் 46.97 விழுக்காடு என மூன்று முறையும் 45 விழுக்காடுக்கு மேல் பெற்று தேர்தல் களத்தில் வாக்கு பலத்தை நிரூபித்துள்ளது.

* தி.மு.க. கூட்டணியின் வாக்கு வங்கி தமிழ்நாடு முழுவதும் சீராக உள்ளது.

* 2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 23.05 விழுக்காடும், பா.ஜ.க. கூட்டணி 18.28 விழுக்காடும், நாம் தமிழர் 8.2 விழுக்காடும் பெற்றுள்ளன. தி.மு.க., - அ.தி.மு.க. கூட்டணி இடையிலான வாக்கு வித்தியாசம் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாதபடி 24 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

* அ.தி.மு.க. 7 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. கன்னியா குமரி 4.02 விழுக்காடு), திருநெல்வேலி (8.39 விழுக்காடு), ராமநாதபுரம் (8.99 விழுக்காடு), மத்திய சென்னை (9.80 விழுக்காடு) என 4 தொகுதி களில் ஒற்றை இலக்கமாக வாக்கு வங்கி சுருங்கியது அ.தி.மு.க.வுக்கு மிகப் பெரிய பின்னடைவு.

* இப்போதைய நிலவரப்படி தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர்,த.வெ.க. என ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டால் கொங்குமண்டலம், வட தமிழகத்தில் 72 தொகுதிகளில் மட்டுமே தி.மு.க. - அ.தி.மு.க. இடையே கடும் போட்டி உருவாகும். ஐந்து முனைப் போட்டியில் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் சிதறி 200 தொகுதிகளை தி.மு.க. அணி எட்ட முடியும்.

- என்று சொல்கிறது 'தினமணி'.

அ.தி.மு.க.வுடன் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் சேர்க்கும் கணக்கை அந்தக் கட்டுரையாளர் சொல்லி இருக்கிறார். அப்படி ஒரு கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்பதை இரண்டு நாட்களுக்கு முன் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையே உறுதி செய்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 47 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 23 விழுக்காட்டையும், பா.ஜ.க. கூட்டணி 18 விழுக்காட்டையும் பெற்றுள்ளது. அ.தி.மு.க.வின் விழுக்காட்டையும் பா.ஜ.க. விழுக்காட்டையும் கூட்டினால் 41 விழுக்காடு தான் வருகிறது. 47 ஐ தாண்டவில்லை. எனவே, பழனிசாமி எந்தக் கூட்டணி அமைத்தாலும் தோற்றுத்தான் போகப் போகிறார்.

தி.மு.க.வின் தலைமைச் செயற்குழுவில் மாண்புமிகு முதலமைச்சர் ஆற்றிய உரை என்பது நம்பிக்கை உரை மட்டுமல்ல; உண்மையான உரைதான் அது என்பதை உறுதி செய்துள்ளது "தினமணி".

வெல்வோம் இருநூறு; படைப்போம் வரலாறு.

Also Read: “அம்பேத்கர் பெயரைச் சொன்னால் அமித்ஷா அலறுவது இதனால்தான்...” - முரசொலி தாக்கு !