murasoli thalayangam

அம்பேத்கரின் ‘சொர்க்கத்தில்’ அமித்ஷாக்களுக்கு இடமில்லை! : முரசொலி தலையங்கம்!

அண்ணல் அம்பேத்கரின் ‘சொர்க்கத்தில்’ அமித்ஷாக்களுக்கு இடமில்லை. பா.ஜ.க. இருக்காது. அதனால்தான் அமித்ஷா அலறுகிறார்!

“அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இன்றெல்லாம் பேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பேரை இவ்வளவு முறை சொல்லி இருந்தால் சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்” என்கிறார் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா. தனக்கு அமைச்சர் பதவி கொடுத்த நாட்டை விட, சொர்க்கத்தைப் பற்றித்தான் கவலையாக இருக்கிறது.

“ஜனநாயகம் என்பது அரசாங்கத்தின் ஒரு வடிவம் அன்று, மாறாகச் சமூக அமைப்பின் ஒரு வடிவம்” என்றார் அண்ணல். அரசியல் - சமூக - பொருளாதார சிந்தனைச் சுதந்திரம் வரை அனைத்தையும் பறித்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை முடக்கி, உயர் பண்பாட்டு விழுமியங்களை உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே சிதைக்க நினைப்பவர்களுக்கு அம்பேத்கர் என்றால் எரிச்சலாகத்தான் இருக்கும்.

ஓர் அரசு எப்படி ஆட்சி புரிய வேண்டும் என்ற கற்பனை அண்ணல் அம்பேத்கருக்கு இருந்தது. ஒவ்வொரு மக்களின் வாழ்க்கை, அவர்களின் சுதந்திரம், மகிழ்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாக அரசு இருக்க வேண்டும். அந்த மக்களுக்கு பேச்சுச் சுதந்திரம் இருக்க வேண்டும். தங்களுக்கான மத அறநெறியைத் தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இருக்க வேண்டும்.

அடித்தட்டில் அமுக்கி வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அதிக வாய்ப்புகளை அளிப்பதன் மூலமாக அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவமின்மையை நீக்குவதாக அந்த அரசு இருக்க வேண்டும். ஒவ்வொரு மக்களும் தங்கள் தேவையை அடைய வேண்டும். அச்சமற்று வாழவேண்டும். ஓர் இனம், மற்றோர் இனத்தின் மீது தாக்குதல் தொடுத்தால் அதை தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்பதே அரசு.

இவ்வாறு வரையறுத்தார் அம்பேத்கர் அவர்கள். அமித்ஷாக்களுக்கு புரியும் ‘பாஷையில்’ சொல்வதாக இருந்தால் இதுதான் ‘சொர்க்கம்’. இந்த சொர்க்கத்தில் அமித்ஷாக்கள் இருக்க முடியுமா?

“இந்தியாவில் பெரும்பான்மை என்றால் அது வகுப்புவாதப் பெரும்பான்மையாகும். அவர்களுடைய சமூக மற்றும் அரசியல் திட்டம் எதுவாக இருந்தாலும் சரி, பெரும்பான்மையினர் தங்கள் வகுப்புவாத பெரும்பான்மையின் குணத்தை அப்படியே நீடித்து நிலைபெறச் செய்வதில் உறுதியாக இருக்கிறார்கள்” என்றார் அண்ணல். இதைத்தான் இப்போது அமித்ஷாக்கள் உருவாக்கிக் காட்டி வருகிறார்கள்.

“இங்குள்ள மதம் சுதந்திரமான அறநெறி வாழ்க்கையைப் பறிக்கிறது. பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு இதில் இடமில்லை. சட்டங்களுக்கும், அனைத்துச் சமூகத்தினருக்கும் சமத்துவமற்ற முறையில் இருக்கிறது.” என்றார் அம்பேத்கர். அதன் முகமாகத்தான் அமித்ஷா இருக்கிறார். அமித்ஷாவின் பேச்சுகளும், அவர் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் இந்திய அரசியல் வரலாற்றில் கரும்புள்ளிகள் அல்லவா?

‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க இன்று பா.ஜ.க.வினர் நினைக்கிறார்கள். ‘மதச்சார்பற்ற’ என்பதற்கு அம்பேத்கர் இலக்கணம் சொல்லி இருக்கிறார்.

“மதச்சார்பற்ற அரசு என்பது, இந்த நாடாளுமன்றம் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் பிற மத மக்கள் மீதும் திணிப்பதற்கு அதிகாரம் பெற்றதில்லை என்று பொருளாகும்.

அந்த வரையறையை மட்டுமே அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது” என்று இந்து சட்டத் தொகுப்பு சட்டமுன்வடிவின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டார். “அரசு தனது மக்களுக்கு அவர்கள், தங்கள் மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளவும், தங்கள் மதக் கருத்துக்களை ஒளிவுமறைவின்றி தெரிவிப்பதற்கான, போதனை செய்வதற்கான மற்றும் பொது ஒழுங்கு, அறநெறிக்கு உட்பட்டு மாறுவதற்கான உரிமைகளை உத்தரவாதம் செய்திட வேண்டும்” என்றார் அவர்.

‘சோசலிசம்’ என்ற சொல்லைப் பார்த்தால் பா.ஜ.க.வினருக்கு பயமாக இருக்கிறது. ‘சோசலிசம்’ என்ற சொல்லை இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் சேர்க்கவேண்டும் என்று கே.டி.ஷா சொன்னபோது, அரசியலமைப்புச் சட்டத்தின் குணத்தில் சோசலிசம் பல்வேறு இடங்களில் இருக்கிறது என்று சொன்னவர் அம்பேத்கர்.

“வழிகாட்டும் கோட்பாடுகள் அதன் வழிகாட்டுதல்களில், அதன் சாராம்சத்தில் சோசலிசத்தைக் கொண்டிருக்கவில்லை என்றால் வேறு எது சோசலிசமாக இருக்க முடியும் என்று புரிந்து கொள்வதில் நான் தோல்வியடைந்து விடுகிறேன். இத்தகைய சோசலிசத் தத்துவங்கள் ஏற்கனவே நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தில் மிகவும் தெளிவாக உள்ளடக்கப்பட்டிருக்கின்றன” என்று விளக்கமளித்தார்.

மதச்சார்பற்ற, சோசலிச என்ற சொற்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு கூறுகளில் இடம்பெற்றுள்ளன என்று நினைத்தார் அண்ணல். அதனைத்தான் சிதைக்க நினைக்கிறார்கள்.

பா.ஜ.க. நினைத்ததைப்போல 400 இடங்களில் வென்றிருந்தால் இன்று இந்திய நாட்டின் நிலைமை என்னவாக ஆகி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின் 75 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டிருக்காது. ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும். அமித்ஷா கோபம் ஆவது ராகுல் காந்தியை, ‘இந்தியா’ கூட்டணியைப் பார்த்து மட்டுமல்ல, அம்பேத்கரைப் பார்த்துத்தான் கோபமாகிறார்.

‘அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் என்பது அம்பேத்கரின் மீதான தாக்குதலாக’ அடையாளப் படுத்தப்படுவதைத்தான் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தைத் தொட்டால் ‘ஷாக்’ அடிப்பது அதில் ‘அம்பேத்கர்’ வோல்டேஜ் இருப்பதால்தான்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதைப் போல, ‘அண்ணல் அம்பேத்கர் பெயரை சொல்லிக் கொண்டே இருப்போம்’!

Also Read: அதிநவீன ஒப்புயர்வு மையமாக உயர்த்தப்பட்ட அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்!