murasoli thalayangam
‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ - எப்படியும் நிறைவேற்ற முடியாது என பதுங்கிவிட்டது பா.ஜ.க! : முரசொலி தலையங்கம்!
சந்திரபாபு நாயுடு – நிதிஷ்குமார் ஆகியோரின் இரவல் உதவி காரணமாகத் தான் பிரதமர் பதவியில் நரேந்திர மோடி இருக்கிறார், அவரால் நினைத்ததைச் செய்ய முடியாது என்று தொடர்ந்து நாம் சொல்லி வந்தோம். ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவில் அது தெரிந்து விட்டதா?
நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்து அதனை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை பலம் இருந்தால் போதுமானது. அதேநேரத்தில் அரசியல் சாசனம் தொடர்பான மசோதாவாக இருந்தால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தனிப்பட்ட முறையில் பா.ஜ.க.வுக்கு இல்லை. கூட்டணியாகச் சேர்ந்தாலும் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபைக்கும், யூனியன் பிரதேச சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் அரசமைப்புச் சட்ட (129–ஆவது திருத்தம்) மசோதா 2024 மற்றும் யூனியன் பிரதேசம் சட்ட (திருத்தம்) மசோதா 2024 ஆகியவை மக்களவையில் நேற்றைய தினம் (டிசம்பர் 17) தாக்கல் செய்யப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்காக அரசியல் சாசனத்தில் 82, 83, 172 மற்றும் 327 ஆகிய 4 பிரிவுகளில் மொத்தம் 17 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்வது தொடர்பான வாக்கெடுப்பின் முடிவுகளை மக்களவை சபாநாயகர் அறிவித்தார். இந்த மசோதாவிற்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 196 வாக்குகளும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா “அரசியலமைப்பை மாற்றக் கோரும் இந்த மசோதா மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டபோது, இந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிற்கு (Joint Parliamentary Committee– ஜே.பி.சி.) அனுப்ப வேண்டும் என பிரதமர் மோடி தனது கருத்தை வெளிப்படுத்தினார்.” என்று சொன்னார். பிரதமர் மோடி ஏன் அப்படிச் சொன்னார் என்றால், தனது பலவீனத்தை மறைக்கவே அப்படிச் சொன்னார்.
மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை நிறைவேற்ற மொத்தம் 362 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆனால் மக்களவையில் பா.ஜ.க. கூட்டணிக்கு 293 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். இந்தியா கூட்டணிக்கு 249 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் , சிரோன்மணி அகாலி தளம் மற்றும் சுயேட்சைகள் என 11 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை எதிர்ப்பதால், எந்தக் கூட்டணியிலும் இல்லாத 11 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தாலும் கூட, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மக்களவையில் ஒன்றிய பா.ஜ.க. அரசால் நிறைவேற்ற முடியாது.
அதேபோல், மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. இதில், 8 இடங்கள் காலியாக உள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மொத்தம் 158 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆனால், மாநிலங்களவையில் பா.ஜ.க. கூட்டணிக்கான ஆதரவு 125 எம்.பி.க்கள் மட்டுமே. மாநிலங்களவையில் இந்தியா கூட்டணிக்கு 112 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்கள், பிஜு ஜனதா தளம் கட்சிக்கு 7 உறுப்பினர்கள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 4 உறுப்பினர்கள், அ.தி.மு.க.வுக்கு 3 உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ், மிசோ தேசிய முன்னணி கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு உறுப்பினர் என மற்றவைகளாக 24 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தாலும் கூட மசோதாவை நிறைவேற்றுவது என்பது சாத்தியமில்லை.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா வாக்கெடுப்பின்போது மக்களவையில் 20க்கும் மேற்பட்ட பா.ஜ.க. எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. வாக்கெடுப்புக்கு முன்னதாக அனைத்து எம்.பி.க்களிடமும் கட்டாயம் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
அந்த உத்தரவின்படி அனைத்து எம்.பி.க்களும் கட்டாயம் அவையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் 20க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவையில் இல்லாதது பா.ஜ.க. தலைமையை அதிருப்தி அடைய செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘எப்படியும் நிறைவேற்ற முடியாது’ என்று அவர்களுக்கே தெரிந்து அலட்சியமாக இருந்துவிட்டார்கள் போலும்.
இதனை உணர்ந்தே, மசோதாவை தாக்கல் செய்த உடனேயே நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஆய்வுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு அனுப்பி இருக்கிறது. தனது பலவீனத்தை மறைக்கும் வகையில் கூட்டுக்குழு ஆய்வை பயன்படுத்திக் கொண்டது பா.ஜ.க. பலம் இல்லாததால் பதுங்கி விட்டது பா.ஜ.க.!
Also Read
-
திருவாரூரில் உள்ள ‘சமூகநீதி விடுதி’க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு!
-
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இந்தி திணிப்பு முயற்சி : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
“கொடுத்த காசுக்கு மேல என்னாமா கூவுறான்!” எனும் அளவிற்கு பேசுகிறார் பழனிசாமி! : முதலமைச்சர் உரை!
-
”எடப்பாடி பழனிசாமி Oru Soft Sangi” : கனிமொழி என்விஎன் சோமு MP கடும் தாக்கு!
-
பா.ஜ.க ஆட்சியில் மதுபானத் தொழிலுக்கு தனி மாநாடு! : திடுக்கிடும் மது புழக்கம்!