murasoli thalayangam
“ஒன்றிய அரசை நம்பினால் மக்களை காப்பாற்ற முடியாது...” - நிதி ஒதுக்காத பா.ஜ.க. அரசை விமர்சித்த முரசொலி!
முரசொலி தலையங்கம்
07.12.2024
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு – என்கிறார் வள்ளுவர்.
அத்தகைய அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. புயல் பாதிப்புகளுக்கு உடனடியாக உதவிப் பணிகளைச் செய்து இது துரிதமான அரசு என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மெய்ப்பித்துக் காட்டி இருக்கிறார்.
ஃபெஞ்சல் புயல் கோரத் தாண்டவம் ஆடிவிட்டுச் சென்றுள்ளது. மயிலத்தில் 51 செ.மீ, ஊத்தங்கரையில் 50 செ.மீ, புதுச்சேரியில் 49 செ.மீ, திண்டிவனத்தில் 37 செ.மீ, விழுப்புரத்தில் 27 செ.மீ, கடலூரில் 23 செ.மீ, திருவண்ணாமலையில் 22 செ.மீ, வேலூரில் 11 செ.மீ – மழை கொட்டித் தீர்த்துள்ளது. இத்தகைய இயற்கைப் பேரிடர் மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட நிலையில் மக்களைக் காக்கும் பணியில் முதலமைச்சர் அவர்களும், அமைச்சர்களும், அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அதிவேகமாகச் செயல்பட்டு மக்களைக் காக்கும் பணியில் இறங்கினார்கள். இரண்டே நாட்களில் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்து விட்டார்கள்.
வங்கக் கடலில் நவம்பர் 24–ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 27–ஆம் தேதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது 29–ம் தேதி வெள்ளிக்கிழமை ஃபெஞ்சல் புயலாக மாறியது. சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தபடி புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னையை நோக்கி சனிக்கிழமை வரத் தொடங்கியது. வெள்ளிக் கிழமை இரவு சென்னைக்குத் தென்கிழக்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் இருந்த புயல், சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சென்னைக்கு 90 கி.மீ. தொலைவுக்கு நெருங்கியது. ஆனால், மாலை 5 மணிவரை நகராமல் போக்கு காட்டி புயல் மிரட்டிக் கொண்டிருந்தது.
இந்நிலையில், எதிர்பாராத வகையில் மாலை 5 மணிக்கு மேல் புயல், வந்த திசையில் வடக்கு நோக்கிச் செல்லாமல் மீண்டும் தெற்கு நோக்கித் திரும்பியது. மீண்டும் மாமல்லபுரம் கரையை நோக்கி நகர்ந்து, கரைக்கு நெருக்கமானது. இரவு 7 மணியளவில் புயல் மரக்காணம் அருகே கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியது. மழையும் மிகப் பலமாகக் கொட்டியது.
புயல், நள்ளிரவு 11.30 மணியிலிருந்து 12.30 மணிக்குள் மரக்காணம் அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால்தான் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் மழை பெய்தது. இதனால்தான் சுற்று வட்டாரப் பகுதியிலும் நீர்பிடிப்பு இடங்களிலும் பெய்த மழை நீர், சாத்தனூர் அணைக்கு எதிர்பார்க்க முடியாத வகையில் மிக அதிக அளவில் வந்து சேர்ந்தது.
ஃபெஞ்சல் புயலால் நீர்பிடிப்பு பகுதியில் பெரும் மழை பொழிவால் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளளவான 119 அடியை நெருங்கியது. தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீர், தென் பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
சாத்தனூர் அணை நிரம்பிவந்த நிலையில் கரையோர மக்களுக்கு தொடர் எச்சரிக்கை விடுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் ‘செம்பரம்பாக்கம் அ.தி.மு.க.’ புகழ் பழனிசாமி தனது பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டு இருக்கிறார்.
உடனடியாக முதலமைச்சர் அவர்கள் அனைத்து இடங்களுக்கும் சென்று பார்வையிட்டார்கள். மழைநீரை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கைகள் செய்யப்பட்டன. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டார்கள். அவர்களது முழுத் தேவைகள் செய்து தரப்பட்டன. உணவுப் பொருள்கள், அன்றாட அவசியப் பொருள்கள் அனைத்தும் தரப்பட்டன. சமுதாயக் கூடங்கள் மூலமாக உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. புதிய சமையல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், வீடுகளில் இருக்கும் மக்களுக்கும் தருவதற்கு உணவுப் பொருட்கள் தயாரித்து வழங்கப்படுகிறது.
தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
உயிரிழந்தவர் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி உதவியை வழங்க உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் அவர்கள். சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கியது மட்டுமல்ல; முழுமையாகச் சேதமடைந்த குடிசைகளை கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் முன்னுரிமை கொடுத்து வீடுகள் கட்டவும் உத்தரவிட்டுள்ளார். பாசனப் பயிர்கள் பாதிப்புக்கு ஹெக்டேருக்கு 17 ஆயிரம் ரூபாயும், மரங்களாக இருந்தால் ஹெக்டேருக்கு 22,500 ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். எருது, பசு உயிரிழப்புக்கு 37,500 ரூபாய் அறிவித்துள்ளார்கள்.
இவை அனைத்துக்கும் மேலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் வழங்கிடவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட மக்கள் இதனைப் பெறுவார்கள்.
SDRF நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு வழங்காத நிலையில் இவை அறிவிக்கப்பட்டுள்ளன என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும்.
நடப்பு 2024–25 நிதியாண்டில் தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதிக்கு சுமார் ரூ.1,260 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை. ஆந்திரா, அசாம், பீகார், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கிய முழு நிதியையும் ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களுக்கு முதல் தவணை நிதியையும் ஒன்றிய அரசு வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை.
பா.ஜ.க. அரசை நம்பிக் காத்திருந்தால் மக்களைக் காப்பாற்ற முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான்!
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !