murasoli thalayangam

கச்சதீவைத் திருப்பித் தாருங்கள் என 10 ஆண்டில் மோடி கேட்டதுண்டா? பாஜகவின் நாடகத்தை வெளிக்காட்டிய முரசொலி !

முரசொலி தலையங்கம் (5.4.2024)

பத்து ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?

கச்சத்தீவுக்கு கண்ணீர் வடிக்கும் கனவான்களே, அதை மீட்பதற்காக பத்தாண்டுகள் என்ன செய்தீர்கள்? ஒருமுறையாவது இலங்கைக்கு கோரிக்கை வைத்ததுண்டா பிரதமர் நரேந்திர மோடி? எத்தனை முறை இலங்கைக்குப் போனார்! ஒரு முறையாவது, “கச்சத்தீவைத் திருப்பித் தாருங்கள்!” என்று கேட்டதுண்டா? 18.1.2015 அன்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, டெல்லி வந்தார். பிரதமர் மோடியைச் சந்தித்தார். நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில் ஒன்று, அணு சக்தி தொடர்பானது. கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் அப்போதே போட்டிருக்கலாமே? போட்டிருந்தால் கச்சத்தீவு நம் கைக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகியிருக்குமே?

13.3.2015 அன்று இலங்கைக்குச் சென்றார் பிரதமர் மோடி. 1987 ஆம் ஆண்டு இந்திய -–- இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவதற்காக பிரதமர் ராஜீவ் சென்றதற்குப் பிறகு இந்தியப் பிரதமர்கள் யாரும் இலங்கைச் சென்றது இல்லை. “28 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை செல்லும் இந்தியப் பிரதமர் மோடி” என்று அப்போது பெரிய விளம்பரம் கொடுத்தார்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவைச் சந்தித்தார். இலங்கை நாடாளுமன்றத்திலேயே பிரதமர் மோடி பேசினார். “இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியத் தலைவர்” என்று அவர் அழைக்கப்பட்டார்.

அப்போது, “கச்சத்தீவைக் கொடுத்துவிடுங்கள்” என்று கேட்டாரா? இந்திய அமைதிப்படையில் சென்று பலியான இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஸ்ரீலங்கா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அதிபர்கள் மத்தியில் பேசினார். அப்போது கச்சத்தீவை கேட்கப் போவதாகச் சொன்னாரா?அப்போது இரு நாடுகளுக்கு இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. கல்வி, விசா, சுங்கத்துறை, கலையரங்கம் கட்டுதல் -– ஆகியவைதான் அந்த நான்கு ஒப்பந்தங்கள். ஏன் கச்சத்தீவு தொடர்பாக ஒப்பந்தம் போடவில்லை?

10.5.2017 அன்று இலங்கைச் சென்றார் பிரதமர் மோடி. புத்தரின் பிறந்தநாளில் கலந்து கொண்டார். இந்திய அரசின் நிதியால் கட்டப்பட்ட டிக்கோயா மருத்துவமனையைத் திறந்து வைத்தார் பிரதமர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நிதி இல்லை என்று சொல்லும் இவர்தான், இலங்கையில் மருத்துவமனை கட்ட நிதி கொடுக்கிறார்!

9.6.2019 அன்று இலங்கை சென்றார் பிரதமர் மோடி. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேதான் இவரை வரவேற்றார். அதிபர் ரத்தினபாலா சீறிசேனா, மோடிக்கு விருந்து வைத்தார். எதிர்க்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்ஷேவையும் சந்தித்தார் மோடி. ‘இலங்கை மீண்டும் உயிர்த்தெழும்’ என்றார். அப்போது, கச்சத்தீவைக் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டாரா?

30.3.2022 அன்று இலங்கைச் சென்றார் பிரதமர் மோடி. மீனவர் பிரச்சினை குறித்து பேசப் போவதாகச் செய்தி பரப்பினார்கள். யாழ்ப்பாணமும் சென்றார். யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்றார்கள். அப்போதாவது கச்சத்தீவைப் பற்றி மூச்சு விட்டாரா?

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்றார். எதற்காக? கச்சத்தீவை மீட்கவா? இல்லை. சுற்றுலா, எரிபொருள், உள்கட்டமைப்பை ஊக்குவிப்போம் என்று அப்போது சொன்னார் ஜெய்சங்கர். பிப்ரவரி மாதம் அமைச்சர் எல்.முருகனும் இலங்கை போனார். கச்சத்தீவை மீட்கவா? இல்லை.

21.7.2023 அன்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே இந்தியா வந்தார். அவருக்கு பலத்த வரவேற்பைக் கொடுத்தார் பிரதமர் மோடி. வரவேற்று ஆற்றிய உரையில் வர்த்தகம் பற்றிப் பேசினாரே தவிர, கச்சத்தீவு பற்றிப் பேசவே இல்லையே?

கடல்சார், வான், எரிசக்தி, சுற்றுலா, மின்சாரம், வர்த்தகம், உயர்கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதே இதன் நோக்கமாகும் –- என்று சொன்னாரே தவிர, கச்சத்தீவு கோரிக்கை இதில் இல்லை. இவரது கவலை எல்லாம் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் பற்றியே இருந்தது. வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்தே அதிகம் பேசினார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை மேம்படுத்தவும், வர்த்தகம் மற்றும் மக்கள் நடமாட்டத்தை அதிகரிக்கவும், தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன் துறைக்கும் இடையே பயணிகள் படகு சேவைகளைத் தொடங்கவுமே இதில் பேசப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான மின் கட்டமைப்பை இணைக்கும் பணிகளைப் பற்றிப் பேசினார்கள். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பெட்ரோலியக் குழாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறு பற்றிப் பேசினார்கள். தரைப்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றிப் பேசினார்கள். ‘மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இன்று விவாதித்தோம். இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்’ என்று பிரதமர் மோடி அப்போது பேசினாரே தவிர, கச்சத்தீவு தொடர்பான கோரிக்கையை வைத்தாரா? இல்லையே!

“மேதகு அதிபர் அவர்களே! ஒரு நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான இலங்கை இந்தியாவின் நலனுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் நலனுக்காகவும் உள்ளது. இந்தப் போராட்ட நேரத்தில் இந்திய மக்கள் இலங்கை மக்களுடன் இருக்கிறார்கள் என்பதை நான் மீண்டும் உறுதியளிக்கிறேன்.” என்று பிரதமர் மோடி அப்போது சொன்னார். ‘மேதகு அதிபர் அவர்களே! கச்சத்தீவைத் தாருங்கள்’ என்று கேட்கவில்லையே பிரதமர் மோடி?!3.11.2023 அன்று இலங்கைச் சென்றார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். எண்ணெய் கிடங்குகளைப் பார்வையிடவும், சூரிய சக்தி மின்சாரம் அமைக்கவும்தான் போனார். அவரும் கேட்கவில்லை, கச்சத்தீவை!‘கச்சத்தீவு பற்றிப் பேச நேரம், காலம் பார்க்கத் தேவையில்லை’ என்று இப்போது சொல்கிறார் நிர்மலா! யாரிடம் சொல்ல வேண்டுமோ அவர்களிடம் சொல்லாமல், யாரிடம் கேட்க வேண்டுமோ அவர்களிடம் கேட்காமல், யாரிடம் கோரிக்கை வைக்க வேண்டுமோ அவர்களிடம் கோரிக்கை வைக்காமல் மீடியாக்களிடம் வாய்வீரம் காட்டுவது ஏன்?

Also Read: ராஜபுத்திரர்கள் குறித்த பேச்சு: மன்னிப்பு கேட்டும் சிக்கலில் ஒன்றிய அமைச்சர் -குழப்பத்தில் பாஜக -பின்னணி?