murasoli thalayangam
“ஆளுநருக்கு பழனிசாமி சேவகம் செய்வதற்கு இதுதான்முக்கியமான காரணம்...” - வெளுத்து வாங்கிய முரசொலி !
ஆளுநரின் தொங்கு சதை அ.தி.மு.க.
எந்தக் காரணமும் சொல்லாமல் இரண்டாண்டு காலம் தமிழ்நாட்டுச் சட்ட முன்வடிவுகளை கிண்டி மாளிகைக்குள் வைத்து பூட்டி வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உச்சநீதிமன்றம் உச்சம் தலையில் கொட்டத் தொடங்கியதும் - எந்தக் காரணமும் இல்லாமல் திருப்பி அனுப்பி இருந்தார். அது கிடைத்த மூன்றாவது நாளே தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி - அதே சட்ட முன்வடிவுகளை திருத்தம் ஏதுவும் செய்யாமல் நிறைவேற்றி அனுப்பிவிட்டார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
“கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் நம்மை - இந்திய அரசியல் சட்டம் வழங்கிய அதிகாரத்தின் மையமாக இருந்து சட்டமியற்றும் இந்த சட்டமன்றத்தை - தடுக்கும் சக்தி ஒன்று முளைக்குமானால் - இந்தச் சூழ்நிலை என்பது இந்திய ஜனநாயகத்தை மிக மோசமான வகையில் கொண்டு செலுத்திவிடும் என்ற அச்சத்துடன்தான் உங்கள் முன்னால் நிற்கிறேன்” என்று தொடங்கிய முதலமைச்சர் அவர்கள், “நாம் எப்போதும் சட்டத்தின் வழி நடப்பவர்கள். எனவே, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-ன்படி அவர் எந்தக் காரணமும் குறிப்பிடாமல் திருப்பி அனுப்பி வைத்துள்ள 10 சட்டமுன் வடிவுகளையும் நிறைவேற்றித் தருமாறு நூற்றாண்டு கண்ட இச்சிறப்புமிக்க சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர்களை தங்கள் வாயிலாகக்கேட்டுக் கொள்கிறேன்” என்று முடித்தார் முதலமைச்சர் அவர்கள்.
வாக்கெடுப்பின் போது இருந்த அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சரின் தனித்தீர்மானமும், அமைச்சர்கள் முன்மொழிந்த சட்டமுன்வடிவுகளும் பேரவையில் அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் நவம்பர் 18 - 2023 என்பது மிகமிக முக்கியமான நாளாகும். அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கவும் - மக்களாட்சி மாண்பைக் காக்கவும் - மாநில சுயாட்சித் தத்துவத்தை மீட்டெடுக்கவும் - ஆளுநர்களின் வாலை நறுக்கவும் அந்த நாள் முக்கியமான நாளாக அமைந்துவிட்டது.
வழக்கம் போல் பா.ஜ.க. - வெளிநடப்பு செய்தது. இது எதிர்பார்த்ததுதான். ஏனென்றால் ஆட்டுவிப்பவர்கள் அவர்களே. பா.ஜ.க. தலைமை சொல்லாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி இவ்வளவு ஆடமாட்டார். பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வும் வெளிநடப்பு செய்துவிட்டது. இதுவும் ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஆட்டுவிப்பது பா.ஜ.க. என்றால், ஆட்டம் போடுவது ஆளுநர் மட்டுமல்ல, அ.தி.மு.க.வும்தான் என்பதை பழனிசாமி நிரூபித்துவிட்டார்.
முதலமைச்சர் கொண்டு வந்த சிறப்பு தனித்தீர்மானத்தின் மீது அ.தி.மு.க. சார்பில் பேசியவர் பழனிசாமி. அப்போது ஆளுநரை விமர்சித்தே பேசவில்லை. தீர்மானம் கொண்டு வந்த தி.மு.க. அரசைக் கண்டித்துதான் பேசிக் கொண்டு இருந்தார். இதுவே அவரது உண்மையான உள்நோக்கம் என்ன என்பதைக் காட்டி விடும்.
“சென்னாரெட்டி காலத்தில் இருந்து ஆளுநர்கள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்” என்று பழனிசாமி பேசி இருந்தால் அவரை ஜெயலலிதா வழியில் நடப்பவராக ஏற்றுக் கொள்ளலாம். ‘மாநில அரசுகளை ஆளுநர்கள் இப்படித்தான் மறைமுகமாக ஆட்சி செலுத்தப் பார்க்கிறார்கள்’ என்று சொல்லி இருந்தால் அவரது கட்சிக்கு ‘அண்ணா’ என்ற பெயர் இருப்பதற்கு பொருத்தமாகப் பேசுகிறார் என்று மகிழ்ச்சி அடையலாம். இவை அனைத்தையும் விட்டுவிட்டு அதே கிண்டி மண்டப ஸ்கிரிப்டை எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. இதை விட மோசடித்தனமான நிலைப்பாடு இருக்க முடியாது.
‘நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது தனித்தீர்மானம் எதற்கு?’ என்று சட்டமேதை பழனிசாமி கேட்கிறார். ‘அவர் தான் மூச்சு விடுகிறாரே, பிறகு எதற்கு ஆபரேஷன்?’ என்று கேட்பதைப் போல இருக்கிறது பழனிசாமியின் வாதம்.
‘சட்டமுன்வடிவுகளை திருப்பி அனுப்பாமல் வைத்திருக்கிறார்’ என்று வழக்குப் போட்டதும், உடனே திருப்பி அனுப்புகிறார் ரவி. அதாவது திருப்பி அனுப்பிவிட்டு தப்பிக்கப் பார்க்கிறார் ரவி. இதனைத்தான் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம், நாட்டுக்கு அம்பலப்படுத்தி இருக்கிறது. ‘வழக்குப் போட்டதும் தான் திருப்பி அனுப்புவீர்களா?’ என்று ஆளுநரைக் கேட்பதற்கு பழனிசாமிக்கு துப்பு இல்லை. தீர்மானம் போட்டவர்களைப் பார்த்து பிராண்டுகிறார்.
வெளிநடப்புச் செய்வதற்கு பழனிசாமி கண்டுபிடித்த காரணம் தான் அதை விட மோசடியானது. பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயரை வைத்தோம், அதை நீக்கிவிட்டது தி.மு.க. அரசு என்கிறார் அவர். சட்டமன்றத்தில் பேசும் போதாவது தெரிந்து கொண்டு வர வேண்டாமா? ‘திராவிடம் என்றால் என்ன?’ என்று தெருவில் நிறுத்திக் கேட்டார்கள். ‘நான் புராணங்களை படித்தது இல்லை’ என்றார். அது தெரு. எதுவேண்டுமானாலும் சொல்லலாம். பேரவையில் பேசும் போது அறிந்து வர வேண்டாமா?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார் மாண்புமிகு ஆளுநர் அவர்கள். “I withhold assent” அதாவது, - தான் அனுமதியை நிறுத்திவைத்துள்ளதாகக் - குறிப்பிட்டு, கடந்த 13.11.2023 அன்று திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார். இதில் இரண்டு சட்டமுன்வடிவுகள் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டவை ஆகும்.
* 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்ட முன்வடிவு (ச.மு.எண்.02/2020) –
* 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவஅறிவியல் பல்கலைக் கழகம் (திருத்தச்) சட்டமுன்வடிவு (ச.மு.எண்.12/2020) - இவை இரண்டும் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டு ஆளுநர் மாளிகை ஒப்புதல் வழங்காதவை ஆகும்.
10 சட்டமுன்வடிவுகளில், 2 சட்ட முன்வடிவுகள் 2020ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் அவர்கள் தன்வசம் வைத்துக் கொண்டுவிட்டு, தற்போது ஒப்புதல் எதுவும் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். இதுவே பழனிசாமிக்குத் தெரியவில்லை. ஆளுநருக்கு எதிராகப் பேசினால், பா.ஜ.க. கோபித்துக் கொள்ளும் என்று பாதம் தாங்கி பழனிசாமி பயந்துவிட்டார். அதனால்தான் தீர்மானம் கொண்டு வந்த தி.மு.க.வையே விமர்சித்துப் பேசிக் கொண்டு இருந்தார்.
மீன்வளப் பல்கலைக் கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் வைக்கவும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநர் திருப்பி அனுப்பிய பத்து சட்டமுன்வடிவுகளில் அதுவும் ஒன்று. அதுவே பழனிசாமிக்குத் தெரியவில்லை. பழனிசாமி கண்ணை பா.ஜ.க. பயம் மறைப்பதால் தெரியவில்லை.
ஆளுநருக்கு பழனிசாமி சேவகம் செய்வதற்கு மிக முக்கியமான காரணம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கு அனுமதி தராமல் வைத்திருக்கிறார் ‘மகா யோக்கியர்’ ஆர்.என்.ரவி. அதனால்தான் ஆளுநரின் பாதத்தையும் சேர்த்துத் தாங்குகிறார் பழனிசாமி.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !