murasoli thalayangam

“காவிரி விவகாரம்: இதைவிட பழனிசாமியின் பச்சைத் துரோகம் வேறு என்ன இருக்க முடியும்?” - முரசொலி கடும் சாடல்!

பழனிசாமியின் காவிரி துரோகங்கள் - 2

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு 5.2.2007 அன்று வந்தது. அப்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியே இருந்தது. இந்த இறுதித் தீர்ப்பில் தமிழகத்தின் பாசனப் பரப்பு 4,56,130 ஏக்கர் விடுபட்டு இருந்தது. இதனைக் கழக அரசு கடுமையாக எதிர்த்தது. உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார் முதல்வர் கலைஞர். அ.தி.மு.க.வும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது. காவிரி பாசன விவசாயிகளின் பாரம்பர்ய உரிமையைக் காக்க காவிரி மன்ற இறுதித் தீர்ப்பில் கூடுதலாக 60 டி.எம்.சி. நீர் கோரி 2007 ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ஒரு சிறப்பு முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறோம் என்றால் என்ன பொருள்? காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நாம் ஏற்கவில்லை என்று பொருள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா, அந்த வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வழக்குப் போட்டார். அதாவது இறுதித் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதே இதன் பொருள். முதல் சறுக்கல் இது.

இதன்படி அரசிதழில் 19.2.2013 அன்று வெளியானது. இதனையே தனது பெரிய சாதனையாகச் சொல்லிக் கொண்டார். ஜெயலலிதா மரணம் அடையும் வரை அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவில்லை. பழனிசாமி முதலமைச்சராக இருக்கும் போதுதான் இறுதி விசாரணைக்கு வந்தது.

2017 ஆம் ஆண்டு ஜூலை 10, செப்டம்பர் 20 ஆகிய இரண்டு நாட்களும் விசாரணை நடந்தது. இங்குதான் பழனிசாமி அரசின் கையாலாகாத்தனம் வெளிப்பட்டது. சரியான வாதங்களை வைத்து அரசு வாதாடவில்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் இரண்டு முக்கியமான கருத்துருக்கள் உள்ளன.

1. நிலத்தடி நீர் பயன்பாட்டை காவிரி நதியின் நீர் உபயோகமாகக் கருதக்கூடாது.

2. குடிநீர், தொழிற்சாலை, உள்ளாட்சி ஆகியவற்றுக்காக தண்ணீரைப் பயன்படுத்தினால் அந்தத் தண்ணீர் அந்தந்த மாநில கணக்கீட்டில்தான் சேர்க்கப்படும். –- என்று இறுதித்தீர்ப்பில் உள்ளது. அதை வைத்து பழனிசாமி அரசு வாதங்களை வைக்கவில்லை.

தனக்கு நிலத்தடி நீர் குறைந்துவிட்டதாக கர்நாடக அரசு வாதங்களை வைத்ததை பழனிசாமி அரசு மறுக்கவில்லை. தமிழகத்துக்கு நிலத்தடி நீர் வளம் உள்ளதாகச் சொல்லி 10 டி.எம்.சி. குறைக்கப்பட்டதை பழனிசாமி அரசு கேள்வி எழுப்பவில்லை. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் கருத்துருவைச் சொல்லி வாதிடவில்லை பழனிசாமியின் அரசு.

பெங்களூரு மாநகர குடிநீர்த் தேவை குறித்து கர்நாடக அரசு வாதம் வைத்ததுபோல சென்னை, சேலம், ஈரோடு, தஞ்சை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளின் தண்ணீர்த் தேவையை பழனிசாமி அரசு சொல்லி வாதங்களை வைத்திருக்க வேண்டும். மேலும் இராமநாதபுரம், தருமபுரி கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் தேவையையும் சொல்லி இருக்க வேண்டும். எதையும் செய்யவில்லை.

உச்சநீதிமன்றத்தில், 60 டி.எம்.சி. கூடுதலாகக் கேட்டு முதல்வர் கலைஞர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது வழக்கு. ஆனால் கிடைத்த 192 டி.எம்.சி.யில் 14.75 டி.எம்.சி.யை இழந்ததுதான் பழனிசாமியின் சாதனை ஆகும்.

“தமிழக அரசின் மனுவில் என்ன சொல்லப்பட்டு இருந்ததோ அதைக் கூட நீதிமன்றத்தில் சொல்லி வாதங்களை வைக்கவில்லை. தமிழக அரசின் வழக்கறிஞர் பேசுவதும், மனுவில் உள்ளதும் வேறு வேறாக இருக்கிறதே” என்று நீதிபதிகளே சொன்னார்கள். இப்படி அலட்சியமாக வழக்கை நடத்திய அரசு தான் அ.தி.மு.க. அரசு. வழக்கின் இறுதித் தீர்ப்பு 2018 ஆம் ஆண்டு வந்தது.

அதன்படி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு உடனடியாக நீர்ப் பிரச்சினை முறைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்யவில்லை. பா.ஜ.க.வை செய்ய வைக்க பழனிசாமியால் முடியவும் இல்லை. ஒன்றிய பா.ஜ.க. அரசு அதிகாரமற்ற ஒரு அமைப்பைத் தொடங்கியது. அதனை எடப்பாடி அரசு தட்டிக் கேட்கவில்லை. ஒன்றிய அரசின் ஜல்சக்தித் துறையோடு இதனைச் சேர்த்து விட்டார்கள். அதையும் எடப்பாடி அரசு தட்டிக் கேட்கவில்லை. இதை விட பழனிசாமியின் பச்சைத் துரோகம் என்ன இருக்க முடியும்?

இவ்வளவு துரோகங்களையும் செய்துவிட்டு, ‘காவிரி காப்பாளர்’ என்ற பட்டத்தை தனக்குத் தானே கொடுத்துக் கொண்டார் பழனிசாமி. ‘டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றியதால் காவிரி காப்பாளர் என்ற பட்டத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் பொருத்தமானவர்’ என்று அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சொல்ல வைத்துக் கொண்டார் பழனிசாமி.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மிகச் சரியாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதா என்றால் இல்லை. 2020 –- இந்த ஒரு ஆண்டு மட்டும்தான் ஜூன் 12 அன்று திறந்துள்ளார்கள்.

2012 முதல் அ.தி.மு.க. ஆட்சியில் மேட்டூர் அணை திறந்த நாட்கள் இவை- –

*செப்டம்பர் 17

* ஆகஸ்ட் 2

*ஆகஸ்ட் 10

*ஆகஸ்ட் 9

* செப்டம்பர் 20

*அக்டோபர் 2

* ஜூலை 19

*ஆகஸ்ட் 13 -– என 2012 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தங்கள் விருப்பப்படி விவசாயிகளைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல்தான் தண்ணீரைத் திறந்து விட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட பழனிசாமிதான் காவிரி காப்பாளராக தன்னைக் காட்டிக் கொண்டார். மயிலாடுதுறையில் நடந்த காவிரி புஷ்கரம் விழாவில் கலந்து கொண்டு புனித நீராடினார் பழனிசாமி. பச்சைத் துண்டு போட்டுக் கொண்டார். மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டார். ‘நானும் ஒரு விவசாயி’ என்றார். ‘விவசாயி நாடாள்வது சிலருக்குப் பிடிக்கவில்லை’ என்றார். இவை அனைத்தும் பம்மாத்து நாடகங்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். தெரிந்தேதான் மக்கள் அவரை ஆட்சியை விட்டு இறக்கினார்கள்.

எனவே, பழனிசாமி பழைய பொய்களை அவிழ்த்துவிடத் தேவையில்லை. அவை ஊர் சிரித்த பொய்கள்தான்!

Also Read: “காவிரி உரிமையை அடகுவைத்த அதிமுக அரசு - புளுகு மூட்டையை அவிழ்த்த பழனிசாமி” : வெளுத்து வாங்கிய முரசொலி!