murasoli thalayangam

“நீட்-க்கு எதிரான போராட்டத்தின் முக்கிய மைல் கல்.. உணர்ச்சிமிகு நாயகராக காட்சியளித்த உதயநிதி” : முரசொலி!

உணர்ச்சிமிகு உண்ணாநிலைப் போர்!

ஆளும் கட்சியாக இருக்கும் போதும், போராட்டம் நடத்தும் கட்சியாக இருப்பது திராவிட முன்னேற்றக் கழகமாக மட்டும் தான் இருக்க முடியும். ஆட்சிக்கு வந்து விட்டோம், மற்ற பிரச்சினைகளைப் பற்றிக் கண்டுகொள்ள மாட்டோம் என இருப்பதில்லை கழகம். எதிர்க்கட்சியாக இருந்தபோது எதற்காகப் போராடினோமோ அதை அமல்படுத்த சட்டப் போராட்டம் மட்டுமல்ல, மக்கள் போராட்டங்களையும் நடத்தி செயல்படுத்திக் காட்டுவதில் தி.மு.க. முனைப்போடு செயல்பட்டு வந்துள்ளது.

‘நீட்’ தேர்வுக்கு எதிராக தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி ஆகிய மூன்று அமைப்புகள் நடத்திய போராட்டம் என்பது தமிழ்நாடு வரலாற்றில் பொறிக்கத்தக்க முக்கியமான போராட்டமாக அமைந்துவிட்டது. தமிழ்நாட்டில் 39 இடங்களில் ஆகஸ்ட் 20ஆம் நாள் நடத்தப்பட்ட உண்ணாநிலை அறப்போராட்டமானது, நீட் தேர்வுக்கு எதிரான மிகப்பெரிய விழிப்புணர்ச்சியை இந்திய நாடு முழுமைக்கும் உருவாக்கி இருக்கிறது.

இந்தப் போராட்டத்தின் உணர்ச்சிமிகு நாயகராக, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அவர்கள் காட்சியளித்தார்கள். ‘அமைச்சராக இருப்பவர் போராடலாமா? போராட்டம் நடத்தினால்...?’ என்றெல்லாம் சிலர் பயமுறுத்திப் பார்த்தார்கள். அவர்களுக்கு பயத்தைக் காட்டி விட்டார் உதயநிதி அவர்கள்.

‘அமைச்சர் பதவியைப் பற்றிக் கவலையில்லை’ என்று அவர் சொன்னதன் மூலமாக மண்புழு போல ஊர்ந்து பதவியைப் பெற்ற எடப்பாடி கூட்டம் மனப்புழுக்கம் அடைந்தது. பதவிகளுக்கான இயக்கம் அல்ல இது, கொள்கைக்கான இயக்கம்தான் இது என்பதை உதயநிதி அவர்களின் செயல் மெய்ப்பித்துக் காட்டி விட்டது.

“இந்தப் போராட்டம் ஆரம்பம்தான். முடிவல்ல. நீட் தேர்வு ரத்தாகும் வரை போராட்டம் தொடரும்” என்று உதயநிதி அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ‘நான் அமைச்சராக இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. சாதாரண மனிதனாக பங்கேற்றுள்ளேன்’ என்று அவர் சொல்லிய உணர்வை அனைவரும் பெறுவதற்கு இந்தப் போராட்டம் காரணமாகி விட்டது.

‘நீட்’ தேர்வின் கொடூரமானது இப்போதுதான் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்துள்ளது. உண்ணாநிலைப் போராட்டம் மாபெரும் வெற்றி என்பதை அறிவித்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்த அறிக்கையில் ஒரு கருத்தைக் குறிப்பிட்டு இருந்தார்கள்.

“காலை தொடங்கி மாலை வரையிலான இப்போராட்டத்தில் தி.மு.க. தொண்டர்கள், உடன்பிறப்புகள், அணிகளின் செயல்வீரர்கள் மட்டுமல்லாமல், ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கெடுத்திருப்பதையும் ஊடகங்களின் வாயிலாகப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

‘நீட்’ தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் எதிர்த்தவர்கள் நாம் சிலர்தான். ஆனால் இன்று இத்தேர்வின் கொடூரத் தன்மையை அனைவரும் அறிந்து விட்டார்கள். அதனால்தான் கட்சி எல்லைகளைக் கடந்து இத்தேர்வுக்கு எதிரான முழக்கம் நாடு முழுவதும் கிளம்பி வருகிறது. இவர்களது ஆதரவையும் சேர்த்து இப்போராட்டம் வெளிப்படுத்திவிட்டது” –- என்று சொல்லி இருந்தார் முதலமைச்சர் அவர்கள். அத்தகைய உணர்ச்சியை இந்த உண்ணாநிலைப் போராட்டம் உருவாக்கிக் காட்டி விட்டது.

நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க.வின் போராட்டத்தின் முக்கிய மைல் கல் இந்தப் போராட்டம் ஆகும்.

மருத்துவத்துக்கு ஒரு நுழைவுத் தேர்வு என்று சொல்லப்பட்டதுமே எதிர்த்த இயக்கம் தி.மு.கழகம். 2013 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதியே தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். நீட் தேர்வு மசோதாவுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி உயிர் கொடுத்தது. அப்போதும் தலைவர் கலைஞர் அவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.

இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதற்கான சட்டரீதியான முயற்சிகளைத் தொடங்கியது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய நீதியரசர் ஏ.கே.இராஜன் தலைமையில் உயர்நிலைக்குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது.

இதனை மையமாக வைத்தே தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் அதற்கு உரிய அனுமதி தரவில்லை. பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் அதனைத் திருப்பி அனுப்பினார். அவர் கேட்ட கேள்விக்கு விளக்கமளித்து, மறுபடியும் மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அதன் பிறகும் மந்தமாக இருந்தார் ஆளுநர். பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார்.

‘அனைவர்க்கும் கல்வி’ என்ற தத்துவத்துக்கு எதிரானவர்கள் பா.ஜ.க.வினர். தமிழ்நாட்டின் ஆளுநர் ரவியோ ‘மனு’ ரவி ஆவார். இவர்களிடம் மாற்றத்தை உருவாக்க முடியாது. ஒன்றிய அளவில் ஆட்சி மாறினால்தான் காட்சிகள் மாறும். இதனை தமிழ்நாட்டு இளைய சமுதாயம் உணர்ந்துவிட்டது.

“மிக உறுதியாகக் கூறுகிறேன், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பங்கெடுக்கும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றால் ‘நீட்’ தேர்வு நிச்சயமாக விலக்கப்படும் என்ற உறுதியை நான் அளிக்கிறேன். எங்களது புதிய ஆட்சியில் நீட் தேர்வு நிச்சயம் இருக்காது என்பதை தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம். அந்த வலிமையும் உறுதியும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உண்டு” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள உறுதி நிறைவேறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இந்த உணர்ச்சியை உருவாக்கிய இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதிலும் குறிப்பாக ஆகஸ்ட் 20 என்பது, கழகத் தலைவரின் திருமண நாள் ஆகும். அந்த நாளில் மகன் உதயநிதி அவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றது என்பது, ‘கழகமே குடும்பம்’ என்ற கொள்கையின் செயல்வடிவம் ஆகும்.

மணமேடைக்குச் செல்ல வேண்டிய நேரத்திலும் இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்கெடுத்தார் தமிழினத் தலைவர் என்பதும், திருமணமான ஐந்தாவது மாதத்தில் மிசாவில் கைதாகி சிறை சென்றவர் இன்றைய திராவிட மாடல் முதலமைச்சர் என்பதும் அனைவரும் அறிந்ததே. அந்தத் தொடர்ச்சியைத்தான் இன்று வரை நாம் பார்த்து வருகிறோம்.

கழகம், குடும்பம், கொள்கை, ஆட்சி ஆகிய நான்கும் ஒன்றோடு ஒன்று பிணைந்தும் - ஒன்றை ஒன்று வளர்த்தும் வாழும், வாழ வைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டே, ஆகஸ்ட் 20 போராட்டம் ஆகும்!

- முரசொலி தலையங்கம் (25.08.2023)

Also Read: “ஊழலை மறைக்கவே மதவாதத்தை கையில் எடுக்கிறது பாஜக.. ”- CAG அறிக்கையை சுட்டிக்காட்டி முரசொலி தாக்கு !