murasoli thalayangam

“ஊழலை மறைக்கவே மதவாதத்தை கையில் எடுக்கிறது பாஜக.. ”- CAG அறிக்கையை சுட்டிக்காட்டி முரசொலி தாக்கு !

பா.ஜ.க. ஊழல் முகம்!

ஆயுஷ்மான் பாரத் - திட்டத்தில் நடந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததன் மூலம் பா.ஜ.க. எத்தகைய ஊழல் கட்சி என்பது அம்பலமாகி உள்ளது.

ஒரே போலி எண்ணில் 7.5 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு ஊழல் புரியப்பட்டுள்ளது. இறந்துபோன 88 ஆயிரம் பேரின் வங்கிக்கணக்கில் காப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பா.ஜ.க.வின் ஊழல் முகம் கிழிந்தது தெரிகிறது.

“கரையான்களைப் போல ஊழல் நாட்டின் அமைப்புகளை அரிக்கிறது” என்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றியிருந்தார் பிரதமர் மோடி. ஆனால், நரேந்திர மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்களில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம், துவாரகா விரைவு சாலைத் திட்டம் உள்ளிட்ட 7 திட்டங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டிருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது சி.ஏ.ஜி. அறிக்கை.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தத் திட்டத்தின்கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மொத்தம் 7 கோடியே 87 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர் என்று ஒன்றிய அரசு கூறியது.

ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய இந்தத் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக, தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகமான சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகளில் 88 ஆயிரத்து 760 பேர் இறந்துவிட்டனர். ஆனால், அவர்கள் இறந்த பின்னரும், சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறி 2 லட்சத்து 14 ஆயிரத்து 923 காப்பீட்டுக் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

* பா.ஜ.க. ஆளும் மத்தியப்பிரதேசத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், சிகிச்சை பெற்ற பின் இறந்ததாக அறிவிக்கப்பட்ட 403 நோயாளிகளுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் 8 ஆயிரம் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாக கணக்கில் கூறப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்த பிறகும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கணக்குக் காட்டி காப்பீடுத் தொகை பெறப்பட்டுள்ளது.

* தகுதியில்லாத குடும்பங்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக பதிவு செய்யப்பட்டு, சுமார் 22 கோடியே 44 லட்சம் ரூபாய் வரை பயன்பெற்றுள்ளதாகவும் சி.ஏ.ஜி. அறிக்கை கூறியுள்ளது.

* ஒரே நேரத்தில் ஒரு நோயாளி பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கணக்குக் காட்டி காப்பீட்டுத் தொகை பெறப்பட்டு மிகப்பெரிய முறைகேடு நடந்திருப் பதாகவும் சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், சுமார் ஏழரை லட்சம் பயனாளிகளின் ஆதார் எண், ஒரே செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதையும் சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப் படுத்தியுள்ளது.

* வெறும் ஏழு ஆதாருடன் 4 ஆயிரத்து 761 பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

* 9 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களது தொலைபேசி எண் 3 என பதிவு செய்துள்ளனர்.

* 7 லட்சத்து 49 ஆயிரத்து 820 பயனாளிகள் 9999999999 என்ற ஒரே தொடர்பு எண்ணை அளித்துள்ளனர்.

* இந்த ஏழரை லட்சம் பயனாளிகள் கொடுத்த ஒரே தொடர்பு எண்ணும் போலியானது.

* 8888888888 என்ற ஒரே தொடர்பு எண் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 300 பயனாளிகள் கொடுத்துள்ளனர்.

* 9000000000 என்ற ஒரே எண்ணை 96 ஆயிரத்து 46 பேர் தொடர்பு எண்ணாக அளித்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

* 9 லட்சம் பேர் தொடர்பு எண் எதுவும் கொடுக்காமலும் ஒன்றிய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

- இப்படி பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், நிதியை தவறாகப் பயன்படுத்துதல், போலிக் கணக்குகள், முறையான ஆதாரங்கள் இல்லாமல் நிதியை விடுவித்தல் என பல ஓட்டைகளும், முறைகேடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டம், மோடி அரசின் வரலாற்று பெருமைமிக்க திட்டம் என பா.ஜ.க.வினர் தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நிலையில், இந்த திட்டத்தில் மிகப்பெரிய ஊழலும் முறைகேடும் நடந்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது சி.ஏ.ஜி. அறிக்கை.

‘எங்களது ஆட்சியில் ஊழல் நடந்தது இல்லை’ என்று இதுவரை சொல்லி வந்த பி.ஜே.பி.யினர், இப்போது சி.ஏ.ஜி. அறிக்கையைப் பார்த்து வாயடைத்து நிற்கிறார்கள்.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பா.ஜ.க. அரசு ஒப்பந்தம் போட்டது. இதன் மொத்த மதிப்பு 59 ஆயிரம் கோடி ரூபாய் என்று சொல்லப்பட்டது. “எங்களது ஆட்சிக் காலத்தில் ஒரு விமானத்தை 526 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்குத்தான் ஒப்பந்தம் போட்டோம். ஆனால் பா.ஜ.க. ஆட்சி ஒரு விமானத்தை 1670 கோடி ரூபாய்க்கு வாங்கப் போவதாக ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனால் பலனடைந்தவர்கள் யார்?” என்று காங்கிரசு கட்சி கேள்வி எழுப்பியது. இதுதான் பா.ஜ.க.வின் ஊழல் முகம் ஆகும்.

“அமெரிக்காவிடம் இருந்து ரூ.25,000 கோடி மதிப்பில் இந்தியா வாங்கும் 31 பிரிடேட்டர் டிரோன்கள் பேரத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், மற்ற நாடுகளை விட இந்தியா 4 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும்” ஊடகங்கள் எழுதத் தொடங்கி இருக்கின்றன. ஸ்தம், கதக் ரக டிரோன்களை உருவாக்க டி.ஆர்.டி.ஓ.வுக்கு ரூ. 1786 கோடியை ஒதுக்கிவிட்டு, அமெரிக்காவிடம் ரூ.25,000 கோடி கொடுத்து டிரோன்களை வாங்குவது ஏன்? இதுதான் பா.ஜ.க.வின் ஊழல் முகம் ஆகும்.

கடந்த ஆண்டு மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பா.ஜ.க. பெற்ற நன்கொடை 614 கோடி ரூபாய் என்று சொல்கிறது இந்திய தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிபரம். 2016 -17 ஆம் ஆண்டில் இருந்துதான் இந்த நன்கொடைகள் அதிகம் ஆனது. அந்த ஆண்டு பா.ஜ.க. ரூ.532 கோடி நன்கொடை பெற்றது. அதற்கு முந்தைய ஆண்டு பா.ஜ.க. பெற்ற நன்கொடை என்பது ரூ.76.85 கோடிதான். அதாவது ஒரே ஆண்டில் ஏழு மடங்கு அதிகமாக ஆகிவிட்டது. ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டில் நன்கொடைகள் அதிகம் ஆனது. இதுதான் பா.ஜ.க.வின் நிஜ முகம் ஆகும். இதனை மறைக்கவே மதவாதத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இதுதான் பா.ஜ.க.வின் உண்மையான முகம் ஆகும்.

ஊழல் ஒழிப்பு என பிரதமர் சொல்லி வருவது தனது ஆட்சியில் ஊழல் அதிகமாகி வருவதைத் தான்!

Also Read: “தேர்தல் ஆணையத்தின் ரிமோர்ட் பிரதமர் கைக்கு போய்விட்டது..” - முரசொலி விமர்சனம் !