murasoli thalayangam
”சனாதன பஜனை பாடுவதை விட்டு விட்டு உங்களது வேலையை ஒழுங்காக பாருங்கள் ஆளுநரே.. முரசொலி கடும் விமர்சனம் !
முரசொலி தலையங்கம் (08-07-2023)
இதைவிட வேறென்ன வேலை?
அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்படும் கோப்புகளுக்கு கையெழுத்துப் போடுவது மட்டும்தான் ஆளுநரின் வேலை ஆகும். அதைக் கூட ஒழுங்காகச் செய்யாமல் வேறென்ன வேலை அவருக்கு இருக்கிறது? சனாதன பஜனை பாடுவதை விட்டுவிட்டு தனது வேலையை மட்டும் ஒழுங்காக அவர் பார்க்க வேண்டும்.
திராவிடம் -திருக்குறள் - வள்ளலார் ஆகிய கருத்துருக்களுக்கு எல்லாம் தவறான பொருள் சொல்லிக் கொண்டு இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி இப்போது, கூசாமல் பொய் சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆரியத்தின் குணமே அதுதானே!
அ.தி.மு.க. ஊழல்வாதிகளைக் காப்பாற்ற அவர் நடத்திய சதிச்செயல்கள் பொதுவெளியில் அம்பலம் ஆனதும் பொய் சொல்லத் தொடங்கிவிட்டார் ஆர்.என்.ரவி. இந்தப் பொய்களுக்கு ஆளுநர் மாளிகையைப் பயன்படுத்துவது அரசியல் சட்டத்தையே அவமதிப்பது ஆகும்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் தமிழ்நாடு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்ட அறிக்கையானது, ஆளுநர் ஆர்.என். ரவியின் முகத்திரையைக் கிழித்தது.
ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிட இசைவு ஆணைக்காக அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதையும் குறிப்பிட்டு, “அதற்கு உரிய அனுமதியைத் தாருங்கள்!” என்று ஆளுநரைக் கேட்டிருந்தார் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சி.பி.ஐ. கோரியது. தமிழ்நாடு அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கி விட்டது. அதற்கு இசைவு ஆணை கோரும் சி.பி.ஐ.யின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.9.2022 ஆம் நாள் தமிழ்நாடு அரசு அனுப்பிவைத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்துக்கு இந்த ஆண்டு ஜூலை வரைக்கும் பதில் இல்லை. 10 மாதங்கள் ஆகிவிட்டன.
பொதுவெளியில் இதனைச் சொன்னதும், என்ன சொல்கிறார் ஆளுநர்? அவரது விசாரணையில் இருக்கிறதாம். இன்னும் எத்தனை மாதங்கள் இவர் சட்ட வல்லுநர்களுடன் விசாரிப்பார்? இந்த சனாதன மேதை, சட்ட மேதைகளுடன் இன்னும் எத்தனை மாதங்கள் ஆலோசனை நடத்துவாரோ தெரியவில்லை?
கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் மூன்று நாட்கள் கழித்து மத்திய முகமைக்கு வழக்கு மாற்றிவிட்டார்கள் என்று கொதித்துப் போனவர்தான், இந்த 10 மாதமாக ஆலோசித்துக் கொண்டே இருக்கும் ஆளுநர்.
இன்னொரு தகவலையும் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வெளிப்படுத்தி இருந்தார். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி மற்றும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிட இசைவு ஆணை கோரியது. இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்கள், 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கைக் கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. முந்தைய அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிடத் தேவையான இசைவு ஆணையை இதுவரை ஆளுநர் வழங்கவில்லை- – என்பது குற்றச்சாட்டு.
கே.சி.வீரமணி மீதான வழக்கின் புலனாய்வு அறிக்கை வர வேண்டுமாம். அதனால் கையெழுத்துப் போடவில்லையாம். ‘புலனாய்வு அறிக்கையை அனுப்பி வையுங்கள்’ என்று இவர் வாயைத் திறந்து அரசிடம் கேட்க வேண்டியதுதானே? சனாதனத்தை ஆதரித்து நித்தமும் உளறிக் கொண்டு இருப்பவருக்கு இதைக் கேட்க என்ன தயக்கம் இருக்கிறது? “இப்படி ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறோம், ஏன் அனுமதி தரவில்லை?” என்று சொன்ன பிறகுதானே இது வெளியில் தெரிகிறது.
«கே.சி. வீரமணி மீதான ஊழல் வழக்கு கோப்புகள் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அன்றே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் லஞ்ச ஒழிப்புத் துறையின் இறுதி விசாரணை அறிக்கை முழுமையாக இருக்கிறது.
«எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்கு தொடர்பான கோப்புகள் கடந்த மே 15ஆம் தேதி அன்றே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் இறுதி விசாரணை அறிக்கை முழுமையாக இருக்கிறது. இந்தக் கோப்பைப் பெற்றுக் கொண்டதாக ஆளுநர் மாளிகை ஒப்புதல் கடிதம் கொடுத்திருப்பதாக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி சொல்லி இருக்கிறார்.
ஆனால் எந்தக் கடிதமும் வரவில்லை என்கிறார் ஆளுநர். அப்படியானால் இவருக்கு ஆளுநர் மாளிகையில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. அங்கு வரும் கடிதங்கள் இவருக்கே மறைக்கப்படுகிறதா? அல்லது இவரே மறந்து போய்விடுகிறாரா? அல்லது அனைத்தையும் மறைக்கிறாரா? இவரது நோக்கமும் – சொல்லும் -– செயலும் சந்தேகத்துக் குரியதாகவே இருக்கிறது.
தெரியாத விஷயங்களை விபரம் இல்லாமல் பேசுகிறார் என்று முன்பு பலரும் விமர்சித்தார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அவர் தெரிந்தேதான் பேசுகிறார். பல்கலைக் கழகங்களுக்கு வேந்தர் அதிகாரம் என்பது ஆளுநரிடம் இருந்து பறித்து, முதலமைச்சருக்கு வழங்கும் கோப்புகளை மட்டும் நிறுத்தினால், ‘தனது அதிகாரம் பறி போகாமல் இருக்க’ கையெழுத்துப் போட மறுக்கிறார் என நினைக்கலாம்.
ஆன்லைன் சூதாட்டத்தில் அவர் ஆடிய அரசியல் சூதாட்டம்தான் ‘மிகமிக விவரமானவர்’ ஆளுநர் என்பதை அம்பலப்படுத்தியது. இப்போது ஊழல்வாதிகளைக் காப்பாற்றவும் செய்கிறார்ள ஆளுநர். இது அவரை முழுமையாக அடையாளப்படுத்தி -– அவரது முகத்திரையைக் கிழிப்பதாக அமைந்திருக்கிறது.
இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள், என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்கள்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!