murasoli thalayangam

”குடியரசு தலைவர் அவமதிப்பு பா.ஜ.கவின் சனாதன சர்வாதிகாரத்தை காட்டுகிறது”.. முரசொலி காட்டம்!

முரசொலி தலையங்கம் (26-05-2023)

குடியரசுக்கே அவமானம் அல்லவா?

1949 நவம்பர் 25ஆம் நாள் இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இறுதி உரையாற்றினார். அப்போது குறிப்பிட்டார்:

‘‘இந்த அரசமைப்புச் சட்டத்தின் தகுதிகளைப் பற்றிச் சொல்வதற்கு நான் இப்போது முனைய மாட்டேன். ஓர் அரசமைப்புச் சட்டம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அதைச் செயல்படுத்த அழைக்கப்பட்டவர்கள் மோசமானவர்களாக இருந்தால், அதன் விளைவு மோசமானதாகவே இருக்கும் என்று நான் கருதுகிறேன். அதேபோல ஓர் அரசமைப்புச் சட்டம் மோசமானதாக இருந்தாலும், அதைச் செயல்படுத்த அழைக்கப்பட்டவர்கள் நல்லவர்களாக இருப்பின் நன்மையே விளையும்.

ஒரு அரசமைப்புச் சட்டம் செயல்படுவது அதன் தன்மையை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருப்பதில்லை. அரசமைப்புச் சட்டத்தால் அரசின் அங்கங்களான சட்டமன்றம், நிர்வாக அமைப்பு, நீதித்துறை ஆகியன போன்றவற்றை மட்டுமே வழங்க முடியும். அரசின் அங்கங்களான இவை செயல்படுவதற்கான காரணிகளாக இருப்பவர்கள் மக்களும், அவர்களின் விருப்பங்களையும் அரசியலையும் நிறைவேற்றும் கருவிகளாக அவர்களால் உருவாக்கப்படும் அரசியல் கட்சிகளும் ஆகும். இந்திய மக்களும் அவர்களது கட்சிகளும் எவ்வாறு நடந்து கொள்வர் என்பதை யாரால் சொல்ல இயலும்? ... எனவே மக்களும் அவர்களின் அரசியல் கட்சிகளும் வகிக்கும் பாத்திரத்தைக் குறிப்பிடாமல் அரசமைப்புச் சட்டத்தின் மீது எந்தத் தீர்ப்பையும் வழங்குவது வீண் செயல்” என்று குறிப்பிட்டார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

இன்னொரு கவலையும் தனக்கு இருப்பதாக அம்பேத்கர் அவர்கள் அப்போதே சொன்னார்கள். ‘‘1950 ஜனவரி 26ஆம் நாளில் இருந்து இந்தியா ஜனநாயக நாடாக இருக்கும். ஆனால் அதனுடைய ஜனநாயக அரசமைப்பைப் பாதுகாக்க இயலக்கூடியதாக இருக்குமா அல்லது அதனை மீண்டும் இழந்துவிடுமா என்பது என்னைக் கவலையுறச் செய்கிறது. முன்பு ஒரு முறை இந்தியா ஜனநாயகத் தன்மையை இழந்தது. இரண்டாவது முறையும் ஜனநாயக முறையை இழந்துவிடுமா? எனக்குத் தெரியவில்லை. புதிதாகப் பிறந்துள்ள இந்த ஜனநாயகம் தன் வடிவத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் அதே வேளையில், உண்மையில் சர்வாதிகாரத்துக்கு வழிவிடுவதும் முற்றிலும் சாத்தியமானதுதான். ஒரு நிலச்சரிவு ஏற்படுமானால், இரண்டாவது சாத்தியப்பாடு உண்மையானதாகிவிடும் அபாயம் மேலும் பெரிதாக இருக்கும்” என்று அச்சம் தெரிவித்தார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

அத்தகைய நிலச்சரிவு நிலையைத்தான் பா.ஜ.க. ஆட்சி நம் கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. ‘ஒற்றை’ பிம்பத்துக்குள் அனைத்தையும் அடைக்கப் பார்க்கிறது.

பா.ஜ.க. ஒரே நாடு – ஒரே மதம் – ஒரே மொழி – ஒரே கலாச்சாரம் – ஒரே பண்பாடு – ஒரே நாகரிகம் – ஒரே தேர்தல் – ஒரே தேர்வு – என்பதெல்லாம் ஒரே கட்சியின் ஆட்சியையே நிலைநாட்டும். பின்னர், அது ஒரே ஆள் ஆட்சியாகவே முடியும். அதனை உருவாக்கவே பார்க்கிறார்கள். பா.ஜ.க.வின் ஒற்றைத் தன்மை என்பது ஒற்றை மோடியின் அரங்கேற்றமாக மாறும் காட்சியாகவே நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா என்பது அமைந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா அவர்கள் தலைமையில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடியரசு நாட்டின் நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்கும் -– அல்லது அந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கும் தகுதியை அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் இழந்துவிட்டாரா?

குடியரசுத் தலைவர் பதவியே தகுதியற்றதாக ஆகிவிட்டதா? பழங்குடி சமூகத்தில் பிறந்தவர் என்பதால் அவமானம் செய்கிறார்களா? பெண் என்பதால் அவமானப்படுத்தப்படுகிறாரா? அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண் 79, நாடாளுமன்றத்தில் இரு அவைகளுக்கும் தலைவர் குடியரசுத் தலைவரே என உறுதிபடத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற அவைகளின் கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர் குடியரசுத் தலைவரே ஆவார். நாடாளுமன்ற அவைகளில் விவாதித்து நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளித்தால்தான் அவை சட்டங்கள் ஆகும். அத்தகைய சிறப்பு அதிகாரங்கள் கொண்ட குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்டு இருக்கிறார். இது தனிப்பட்ட திரவுபதி முர்முவுக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல. இந்திய குடியாட்சித் தன்மைக்கே ஏற்பட்ட அவமானம் ஆகும். இந்திய அரசியலமைப்புக்கே ஏற்பட்ட அவமானம் ஆகும்.

மே 28 ஆம் தேதி நடைபெறும் இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்புவிழாவை புறக்கணிக்கப் போவதாக இந்தியாவில் உள்ள 19 முக்கிய எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இது அரசியல் இயக்கங்களின் அரசியல் முடிவல்ல. இந்திய மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் குடியாட்சித் தன்மையைக் காப்பாற்றும் முடிவுகள் ஆகும்.

இது தொடர்பாக தி.மு.க. காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் தளம், கேரள காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய 19 கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவானது, குடியரசுத் தலைவருக்கு அவமானம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்” என்று சொல்லி இருக்கிறார்கள்.

‘’நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா உறிஞ்சப்பட்டுவிட்ட நிலையில், அந்தப் புதிய கட்டிடத்திற்கு மதிப்பு இல்லை” என்றும் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்களை அழைக்கவில்லை. இப்போது திறப்பு விழாவில் இப்போதைய குடியரசுத் தலைவரையும் அழைக்கவில்லை.

இது பா.ஜ.க.வின் அரசியல் சர்வாதிகாரத்தை மட்டுமல்ல, சனாதன சர்வாதிகாரத்தையும் காட்டுகிறது. இது அண்ணலே எதிர்பாராத சர்வாதிகாரம் ஆகும்!

Also Read: ஜல்லிக்கட்டு.. ”அண்ணாமலையின் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு” : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!