murasoli thalayangam

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் சிறக்கட்டும் செழிக்கட்டும்: முரசொலி தலையங்கம் வாழ்த்து!

முரசொலி தலையங்கம் (24-05-2023)

பயணம் சிறக்கட்டும்!

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மையமாக வைத்து பத்து நாள் பயணமாக சிங்கப்பூர். ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பயணமாகி உள்ளார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததற்குப் பின்னால் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் தொழில் துறையில் மாபெரும் புரட்சியே நடந்துள்ளது. சென்னை, கோவை, தூத்துக்குடி. துபாய் ஆகிய இடங்களில் தொழில்துறை மாநாடுகளை தமிழ்நாடு அரசு நடத்தி இருக்கிறது. இதன் மூலம் 2021 முதல் இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன. 2 லட்சத்து 95 ஆயிரத்து 339கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் இதுவரை ஈர்க்கப் பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல் பாட்டுக்கு வரும் போது 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதற்கு இது மாபெரும் எடுத்துக்காட்டு ஆகும்.

தமிழகத்தில் புதிய தொழில்கள் ஏராளமாக இந்த இரண்டு ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வந்து நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க வருகிறார்கள். அந்த வகையில் தொழில் அதிபர்களை - நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது உள்ள பெருத்த நம்பிக்கையுமே!

அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்டத்து வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என் பதை உள்ளடக்கிய 'திராவிட மாடல்' என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது இலக்காக அறிவித்தார்கள். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற உன்னதமான கொள்கையை உள்ளடக்கியதே இந்த இலக்கு ஆகும்.

”தொழில் வளர்ச்சி என்பதை ஏற்றுமதி இறக்குமதியாக அல்லாமல் நாட்டின் வளர்ச்சியாக, நாட்டு மக்களின் வளர்ச்சியாக, சமூகத்தின் வளர்ச்சியாகக் கணிக்க வேண்டும். எவ்வளவு வரிக் கட்டுகிறோம் என்பதல்ல வளர்ச்சி எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்துள்ளோம் என்பதும் சேர்ந்தது தான் வளர்ச்சியாகும்” என்பதை முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி சொல்லி வருகிறார்கள். அதே போல் தொழில்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து விடக் கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக தொழில்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதையும் சொல்லி வருகிறார்கள். 'அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சி' என்பதும் அவரது இலக்கு ஆகும். அதன்படியே இரண்டு ஆண்டுகளாக தொழில் துறையும் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கிய பங்காற்றிடும் விதமாக. 2030-2031 நிதியாண்டிற்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படச் செய்வதை ஒரு இலட்சிய இலக்காகக் கொள்ள வேண் டும் என்பதையும் முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இது சாதாரணமாக எட்டி விடக் கூடிய இலக்கு அல்ல என்பதை அனைவரும் அறிவார்கள். இப்படி இலக்கு வைக்க வேண் டும் என்று யாரும் சொல்லவில்லை. முதலமைச்சர் அவர்கள் தனக்குத் தானே இலக்கு வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். இந்த இலக்கை அடைய வேண்டுமானால் ரூ.23 லட்சம் கோடி அளவுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டாக வேண்டும். இந்தளவு மதிப்பிலான தொழில்கள் தொடங்கப்பட்டாக வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொழில்துறை அடைந்த மேம்பாடுகள் அனைவரும் அறிந்ததே. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் என்று சொல்லப்படுகிற சிப்காட் நிறுவ னத்தை 1974 ஆம் ஆண்டு உருவாக்கியவரே முதல்வர் கலைஞர்தான். ஒரே இடத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்துவதும், அவர்களுக்கு சலுகைகள் தருவதும் வேலை வாய்ப்பை உருவாக்குவதும், ஏற்றுமதியை அதிகப்படுத்துவதும் என்ற தொழில் கொள்கையை முதல்வர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள். இதன் மூலம் 1974ஆம் ஆண்டு ஓசூரில் மாபெரும் தொழில்பேட்டையை முதல்வர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள். 1989ஆம் ஆண்டு ராணிப்பேட்டையிலும் ஓசூரில் இரண்டாம் பிரிவுமாக இரண்டு தொழில்பேட்டையை உருவாக்கினார்கள். 1996 ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் அவர்கள் திருப்பெரும்புதூர், இருங் காட்டுக் கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் தொழில் வளாகங்களை அமைத்தார்கள். தொழில் துறையில் மிக முக்கியமான முன்னெடுப்புகளாக அமைந்து அவை தொழில் துறையை மேம்படுத்தியது. அதே வழித்தடத்தில்தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் செயல்பட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழ் நாடு நிதி நுட்பக் கொள்கை, தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை. தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை. தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு காலணி மற்றும் தோல்பொருட்கள் கொள்கை, தமிழ்நாடு விண்வெளி & பாதுகாப்புத் தொழில் கொள்கை. தமிழ் நாடு எத்தனால் கலவைக் கொள்கை, மற்றும் தொழில் நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புத்திட்டம் போன்ற பல்வேறு துறை சார்ந்த கொள்கைகளை முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். இவை அனைத்தும் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.

சிங்கப்பூரில் முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிபர்களை முதலமைச்சர் அவர்கள் சந்திக்கிறார்கள். ஜப்பானில் 200க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்து கொள் ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பங்கெடுக்கிறார்கள். இரண்டு நாடுகளிலும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலங்களின் பட்டியலில் 14 ஆவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறி வந்துள்ளது தமிழ்நாடு. முதலிடத்தை அடைவோம் என்ற நம்பிக்கை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பயணம் அமைந்துள்ளது. பயணம் சிறக்கட்டும். தமிழ்நாடு செழிக்கட்டும்.

Also Read: ரூ.2000 நோட்டை வைத்து காமெடி செய்து கொண்டு இருக்கும் ஒன்றிய அரசு.. முரசொலி கிண்டல்!