murasoli thalayangam

இரக்கமற்றுப் போய்விட்டார் பழனிசாமி.. விஷம அரசியலை நிறுத்திக் கொண்டு மண்சோறு சாப்பிடலாம் : முரசொலி!

முரசொலி தலையங்கம் (20-05-2023)

விஷச் சாராயமும் விஷம அரசியலும் 2

கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார் பழனிசாமி. கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 649 சாராய வழக்குகள் பதிவாகி உள்ளன. 1 லட்சத்து 39 ஆயிரத்து 697 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் பயன்படுத்திய 2 ஆயிரத்து 957 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் இதுவரையில் 55 ஆயிரத்து 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதில் 4 ஆயிரத்து 534 பேர் பெண்கள். 79 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இது எதையும் தெரிந்துகொள்ளாமல் பொறுப்பற்றுப் பேசி இருக்கிறார் பழனிசாமி.

பழனிசாமி எந்தளவுக்கு இரக்கமற்றுப் போய்விட்டார் என்பதற்கு உதாரணம் ... பார்வை பாதிக்கப்பட்டவர்களை கிண்டல் செய்திருக்கிறார். ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்று பழமொழி சொல்வார்களாம். அதுபோல இன்றைக்கு கள்ளச்சாராயம், போலி மதுபானம் குடித்தவர்கள் கண்ணையும் இழந்துவிட்டார்கள்’ என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. இந்த உதாரணத்துக்கும் மக்கள் அடைந்த பாதிப்புக்கும் என்ன சம்பந்தம்? குடிக்கப் போய் பார்வையை இழந்துவிட்டு எதற்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகிறீர்கள் என்கிறாரா?

ஜெயலலிதா ஆட்சியில் 2001ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கள்ளச்சாராயத்துக்கு 52 பேர் பலியானார்கள். 30 பேரின் பார்வை பறிபோனது. இப்போது பேசுவது எல்லாம் ஜெயலலிதாவுக்கும் பொருந்துமா?

தூத்துக்குடியில் அமைதியாக ஊர்வலம் சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. இதனை நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதி செய்துள்ளது.

“தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘அந்தச் சம்பவத்தை மற்றவர்களைப் போல ஊடகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்து கொண்டேன்’ என்று பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். ஆனால் இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டி.ஜி.பி. ராஜேந்திரன், அப்போதைய உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்ததாகக் கூறினார்கள். எனவே, ஊடகங்கள் மூலமாகத்தான் அந்தச் சம்பவம் பற்றித் தெரிந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது தவறான கருத்து என்பது இந்த ஆணையத்தின் கருத்தாகும்” - என்று ஆணையத்தின் அறிக்கை சொல்கிறது. 13 பேர் படுகொலைக்கு பொறுப்பேற்க வேண்டியது பழனிசாமி அல்லவா?

பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்தவர்கள் தைரியமாக அ.தி.மு.க. ஆட்சியில் வலம் வந்தார்கள். புகார் கொடுத்தவர்களை மிரட்டினார் அ.தி.மு.க. பிரமுகர். அவர் கோவை எஸ்.பி.அலுவலக வாசலில் வைத்து தைரியமாக பேட்டி கொடுத்தார்.

தி.மு.க. மகளிரணி சார்பில் போராட்டம் நடத்திய பிறகுதான் நடவடிக்கை எடுப்பதைப் போல நாடகம் ஆடினார்கள். ஆனால் சாட்சிகளை மிரட்டுவதை வேடிக்கை பார்த்தார்கள். பிடித்துத் தரப்பட்ட குற்றவாளிகளை விடுவித்தது அ.தி.மு.க. ஆட்சி. அ.தி.மு.க. பிரமுகரைச் சந்தித்து கோரிக்கை வைத்த பிறகும் செயல்படவில்லை. தரப்பட்ட ஆபாச வீடியோக்களை வைத்து நடவடிக்கை எடுக்கவில்லை. இது பற்றி பத்திரிகையாளர்கள் அன்றைய முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டார்கள். “அப்படியெதுவும் இல்லை, ஆதாரம் இருந்தால் கொடுங்கள்” என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கும் நிலையில் அந்தப் பெண்ணின் பெயரையும் முகவரியையும் வெளிப்படையாக அறிவித்த அக்கறையற்ற ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி.

பெண்களை வசியப்படுத்த ‘பெய்டு கேங்’ என்ற ஒரு கும்பல் பொள்ளாச்சியில் செயல்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுதான் பழனிசாமியின் காலம்.

தேசிய குற்றப் பதிவேடு ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் 6 ஆவது இடத்தை எட்டியது தான் எடப்பாடி ஆட்சிக் காலம் ஆகும்.

கொலைகள் அதிகம் நடந்த மாநகரங்களில் நான்காவது இடத்தை சென்னை பெற்றது எடப்பாடி ஆட்சிக் காலம்.

இந்திய தண்டனைச் சட்டப்படியான குற்றங்களில் 6 ஆவது இடத்தில் தமிழ்நாட்டை கொண்டுபோய் நிறுத்தியவர் பழனிசாமி.

பொதுமக்கள் மீது சட்டவிரோதமாகக் கூடியதாக அதிகம் வழக்குப் போட்டதில் 4 ஆவது மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்கியவர் பழனிசாமி.

பட்டியல் மற்றும் பழங்குடியினர் கொலை அதிகம் நடக்கும் மாநிலப் பட்டியலில் 4 ஆவது இடத்தில் தமிழ்நாட்டை ஆக்கியவர் பழனிசாமி.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் 8 இடத்தில் தமிழ்நாட்டை நிறுத்தியவர் பழனிசாமி.

தற்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டை 2 ஆவது இடத்தில் நிறுத்தியது பழனிசாமி ஆட்சிக்காலம்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எனவே விஷம அரசியலை பழனிசாமி நிறுத்திக் கொள்ளட்டும். வளர்மதியோடு சேர்ந்து மண்சோறு சாப்பிடலாம்.

Also Read: ”உயிர்கள் பலியான நேரத்திலும் விஷம அரசியல் செய்யும் பழனிசாமி”.. முரசொலி கடும் தாக்கு!