murasoli thalayangam

“அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடு.. ரூ.13,000 கோடி இழப்பு” : CAG அறிக்கையை சுட்டிக்காட்டிய முரசொலி!

முறைகேடுகளின் மொத்த உருவம் - 2

*மடிக் கணினி : அ.தி.மு.க. ஆட்சியில்; 2017-–18 ஆம் ஆண்டு போட்டித் தேர்வு எழுதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 55,000 மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் உத்திரவாத காலம் காலாவதி ஆகியதால் அரசுக்கு 68.51 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க அரசின் உத்தரவின் பேரில் ELCOT நிறுவனம் சார்பில், 2018 ஜனவரியில் 60,000 மடிக்கணினிகள் ரூ.12,370 என்ற விதத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. ஆயினும் கொள்முதல் செய்யப்பட்ட 60 ஆயிரம் மடிக்கணினிகளில் 8,079 மடிக் கணினிகள் மட்டுமே போட்டித் தேர்வு எழுத மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

55 ஆயிரம் மடிக்கணினிகள் இருப்பில் இருந்த போதிலும், தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும் ஆகஸ்ட் 2020ல் இந்த லேப்டாப் பேட்டரிகளின் உத்தரவாதம் காலாவதி ஆகிவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் 68.71 கோடி ரூபாய் மதிப்பிலான மடிக்கணினிகளால் அரசுக்குத் தேவையற்ற செலவு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரியின் உத்திரவாதம் ஏற்கனவே ஆகஸ்ட் 2020–லும், சிஸ்டத்தின் வாரண்டி ஆகஸ்ட் 2022–லும் காலாவதியாகி விட்டது.

* காலணி: இந்தத் திட்டத்தில் 5.47 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. காலணி இருப்பைச் சரி பார்க்காமல் வாங்கிக் குவித்ததால் 3.46 லட்சம் காலணிகள் தேங்கிக் கிடக்கின்றன.

* புத்தகப் பைகள்: 4.88 லட்சம் பள்ளிப் பைகள் தேவைக்கு அதிகமாக வாங்கியதால் அரசு நிதி 7.28 கோடி ரூபாய் முடக்கம் என கணக்கு அறிக்கைத் துறை குழு தெரிவித்துள்ளது.

* பள்ளிக் கல்வி: 2018–2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் 1,627 கோடி ரூபாய் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டது. பின்தங்கிய நிலையில் உள்ள பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட ‘தமிழ்நாடு எக்ஸெல்ஸ்’ திட்டமும் குறைந்த பலன் கொடுத்து தோல்வியுற்றதாக அறிக்கை சொல்கிறது.

* அம்மா சிமெண்ட்: கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2014ஆம் ஆண்டு அம்மா சிமெண்ட் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. டான்செம், தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் இடப்பட்ட ஒப்பந்தத்தை முறையாக நிறைவேற்றவில்லை. ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட அளவை விட குறைவான சிமெண்ட அளவை டான்செம் பெற்றது. இதனால், பயனாளிகளுக்குத் தேவையான அளவு சிமெண்ட்டை வழங்க முடியவில்லை. நிர்வாகச் செலவு செலுத்தப்படாமல், அம்மா சிமெண்ட் திட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் நட்டத்தை சந்தித்தது. பணம் கையாள்வதில் முறைகேடு நடைபெற்று இருப்பதோடு, சிமெண்ட் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

* தகுதியற்றவர்களுக்கு குடியிருப்புகள்: பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தில் 3 ஆயிரத்து 354 வீடுகள் தகுதியற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2016-–21 வரையிலான காலத்தில் 5.09 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு வெறும் 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டது.

மானியம் பெறுவதற்கான ஒன்றிய அரசின் நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றாத காரணத்தால், ஒன்றிய அரசின் ரூ.1,515.60 கோடி நிதி உதவியை உரிய நேரத்தில் அ.தி.மு.க. அரசால் பெற முடியவில்லை. ஊரக வளர்ச்சி இயக்குநர் விளம்பரங்களுக்கும் திட்டத்துடன் தொடர்பற்ற பிறவற்றுக்கும் நிர்வாக நிதியிலிருந்து ரூ.2.18 கோடி செலவு செய்துள்ளார்.

திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் குறைபாடுகளால் ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பங்களுக்கென இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீதம் வீடுகளை எட்ட முடிய வில்லை. பெரும்பாலான எஸ்.சி., எஸ்.டி., குடும்பங்கள் சரியான காரணமின்றி சமூகப் பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பு தரவுத் தளத்தில் இருந்து அகற்றப்பட்டன.

பயனாளியை அடையாளம் காணப் பயன்படுத்தும் சமூகப் பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்புத் தரவில் பல குடும்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவரின் பெயர் ‘தெரியாது‘ என்று குறிக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் குறைபாட்டைத் தவறாகப் பயன்படுத்தி, பெருமளவில் வீடுகள் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. ‘தெரியாது‘ என்ற உள்ளீட்டைத் தவறாகப் பயன்படுத்தி மொத்தம் 3 ஆயிரத்து 354 வீடுகள், பயனாளியாகத் தகுதியற்றோருக்கு முறைகேடாக ரூ.50.28 கோடி செலவில் வழங்கப்பட்டது.

மாநில அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் முறைகேடாக அனுமதிக்கப் பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். இவ்வாறு தணிக்கையாளர் அறிக்கை சொல்கிறது. அ.தி.மு.க. ஆட்சி முறைகேடாகவே நடந்திருக்கிறது என்பதற்கு இது சாட்சியாகும்.

அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போதே மின்சாரத் துறையில் நடந்த முறைகேடுகளை மத்திய தணிக்கைத் துறை அம்பலப்படுத்தியது. ஆனால் அதனை சட்டமன்றத்தில் அ.தி.மு.க. ஆட்சியானது அப்போது வைக்கவில்லை.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் முறையற்ற நிர்வாகச் சீர்கேடு காரணமாக சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக 2021 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த மாதத்துக்கான தணிக்கை அறிக்கை அது.

‘தமிழ்நாட்டின் மின்துறை நிறுவனங்களுக்கு 2014 ஆம் ஆண்டுமுதல் ஒட்டுமொத்தமாக 12 ஆயிரத்து 763 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு 13,176 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மின் கொள்முதல் தான். அதாவது மின்சாரத்தை உற்பத்தி செய்ய எந்த முனைப்பும் காட்டாமல், தமிழ்நாட்டில் இருக்கிற மின் திட்டங்களை செழிப்பாக்க எந்த முயற்சியும் எடுக்காமல் தனியாரிடம் இருந்து வாங்குவதில் தங்கமணி குறியாக இருந்துள்ளார்.

சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் நிறுவுதிறன் தேவையான அளவு அதிகரிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இருந்த அரசு மின் உற்பத்தி நிலையங்களின் குறைந்த செயலாற்றலே இருந்தது’ என்று அந்த அறிக்கை அப்போதே சொன்னது. ஒட்டுமொத்தமாக முறைகேடுகளின் மொத்த உருவமாக இருந்து ஆட்சியை நடத்தி இருக்கிறார் பழனிசாமி!

Also Read: “முறைகேடுகளின் மொத்த உருவம் பழனிசாமிதான்.. அ.தி.மு.க ஆட்சியை அம்பலப்படுத்திய ‘CAG’ அறிக்கை” : ‘முரசொலி’ !