murasoli thalayangam

“முறைகேடுகளின் மொத்த உருவம் பழனிசாமிதான்.. அ.தி.மு.க ஆட்சியை அம்பலப்படுத்திய ‘CAG’ அறிக்கை” : ‘முரசொலி’ !

முறைகேடுகளின் மொத்த உருவம் 1

முறைகேடுகளின் மொத்த உருவமாக பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி அமைந்திருப்பதாக சி.ஏ.ஜி. எனப்படும் தணிக்கை அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் என்பது இந்திய அரசு, மாநில அரசுகளின் வரவு செலவுக் கணக்கை சரிபார்க்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள அமைப்புகளில் ஒன்று.

இதன் தலைவராக இருப்பவர், குடியரசுத் தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர் ஆவார். இத்தகைய தணிக்கைத் துறையின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் என்ன மாதிரி நடந்து கொண்டுள்ளார் என்பதை கண்ணாடியைப் போல எடுத்துக் காட்டுகிறது இந்த அறிக்கை.

* பொதுப்பணித்துறை: இந்தத் துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் பழனிசாமி. தமிழக நெடுஞ்சாலைத் துறையின் 2016 முதல் 2021 வரையிலான செயல்பாடுகள் குறித்து சி.ஏ.ஜி. எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் டெண்டரை சமர்ப்பித்து உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஒப்பந்ததாரர்களால் ஏலம் சமர்ப்பிக்கப்பட்ட கணினியின் அடையாள முகவரியும், துறை சார்ந்த பயனர்களின் அடையாள முகவரியும் தரவுத் தளம் கைப்பற்றியது.

ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்ட அடையாள முகவரி மற்றும் துறை பயனர்களுடன் அடையாள முகவரியுடன் ஒப்பிடுகையில், ஒப்பந்ததாரர்கள் தங்களின் ஏலங்களைச் சமர்ப்பிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தியது தெரியவந்தது.

2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் 57 கணினிகளைப் பயன்படுத்தி 87 ஒப்பந்ததாரர்கள் டெண்டர் தாக்கல் செய்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் 2091 டெண்டர்கள் ஒரே கணினியைப் பயன்படுத்தி தாக்கல் செய்யப் பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. இந்த மூன்று ஆண்டில் கோரப்பட்ட 907 ஒப்பந்தப் புள்ளிகளில் ஒவ்வொரு ஒப்பந்தப் புள்ளிக்கும் 2 முதல் 4 டெண்டர்கள் ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட 490 டெண்டர்கள் ஏற்கப்பட்டுள்ளன.

ஏலதாரர்கள், துறைசார் கணினிகளின் வாயிலாக ஏலங்களைச் சமர்ப்பித்ததின் மூலம் ஒப்பந்தப் புள்ளி நெறிமுறைகளை மீறியதையும், அதிகபட்ச போட்டி ஏலத்தைப் பெற வேண்டும் என்ற துறையின் முயற்சியும் நிறைவேறவில்லை.

மே 2022 இறுதிக் கலந்தாய்வின்போது முதன்மைச் செயலாளர் இதைப் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார். அரசு இதை ஏற்றுக் கொண்டு ஆகஸ்ட் 2022-–ல் இதுபோன்ற தவறுகளை ஆய்வு செய்து, இதுபோன்ற செயல்கள் மீண்டும் நிகழாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து ஒப்பந்தப் புள்ளி அழைக்கும் அதிகாரிகளுக்கும் தகுந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகக் கூறியது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* காவல் துறையில்: கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முக்கியத் துறையான காவல் துறையை நவீனப் படுத்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதத்தால் ரூ.14.37 கோடி வீண் செலவினமும், இந்திய அரசிடமிருந்து பெறப்பட்ட ரூ.74.03 கோடி பயன்படுத்தவே படவில்லை என்பதும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவரின் அறிக்கை வாயிலாகத் தெரிய வந்துள்ளது.

மெகா சிட்டி போலீசிங் (Mega City Policing –- MCP) என்பது, காவல்துறை நவீனமயமாக்கலின் ஒரு துணைத் திட்டம் ஆகும். இத்திட்டமானது, தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 60 சதவிகிதம் ஒன்றிய அரசும் 40 சதவிகிதம் மாநில அரசும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மாநகரங்களிலுள்ள காவல் துறையில் கட்டுப்பாட்டு அறைகளை நவீன மயமாக்குதல், சென்னையில் கண்காணிப்புக் கேமரா நிறுவுதல் ஆகியவற்றைச் செயல்படுத்துவது ஆகும். அதேபோல திருச்சியில் ஏ.பி.சி.ஓ. திட்டத்திற்கான வடிவமைப்பு, வழங்குதல், சோதனை செய்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளுதல் உட்பட அடிப்படை உள் கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இத்தகைய காவல்துறை நவீனமயமாக்கல் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அலைக்கற்றை கட்டணமாகச் செலவிடப்பட்ட ரூ.14.37 கோடி வீண் செலவீனம் ஏற்பட்டுள்ளது.

மேலும், சென்னை மற்றும் திருச்சி திட்டங்களின் இலக்குகளை அடைய முடியாமல் போனதுடன் இந்திய அரசு நிதி ரூ. 74.03 கோடியைப் பயன்படுத்த இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. காலதாமதம் மற்றும் நிலவிய சிக்கல்களை அ.தி.மு.க. அரசு தீர்க்கத் தவறியதால் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை காவல்துறையில் மாநகருக்காக கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்களுக்கான அலைக்கற்றைக் கட்டணங்களுக்காக ஒன்றிய அரசு விடுவித்த 29 கோடியே 49 லட்சத்தில் 14 கோடியே 37 லட்ச ரூபாய் செலவிடப் பட்டதுடன், மீதமான மீதமுள்ள 15 கோடியே 12 லட்சம் ரூபாய் செயல்படுத்தப்படவில்லை.

அதேபோல சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை நவீன மயமாக்குவதற்கும் மற்றும் கண்காணிப்புக் கேமராக்களை நிறுவுவதற்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாடு அரசு 98 கோடியே 18 லட்சம் ரூபாய் ஒப்படைப்பு செய்து 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியது.

இருப்பினும் கொள்முதல் நோக்கத்தில் மாற்றங்கள், புதிய தொழில்நுட்பம் மற்றும் கணிசமான வடிவமைப்பு மாற்றங்கள் காரணமாக 2019 ஆம் ஆண்டு ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டதோடு, கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்ட ஒப்புதல் இன்னமும் நிலுவையில் உள்ளது. ஆனால் 58 கோடியே 91 லட்சம் ரூபாய்க்கான பயன்பாட்டுச் சான்றிதழானது செலவழிக்கப் படாமலேயே வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

- தொடரும்

Also Read: “சூடான் போர்: தடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் உண்டு” - முரசொலி தலையங்கம் வலியுறுத்தல் !