murasoli thalayangam
ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்களின் மருத்துவக் கல்வித் தடையை உடைப்பார் அனிதா! -முரசொலி உறுதி !
முரசொலி தலையங்கம் (17-03-23)
சாரா தக்கரும் அரியலூர் அனிதாவும்!
திருநெல்வேலியில் சாரா தக்கர் மகளிர் கல்லூரி இருக்கிறது. அந்தப்பெயரைப் பார்த்ததும் ஏதோ ஒரு கிறிஸ்தவப் பெயர் என்றுதான் எல்லார் மனதும் எண்ணும். யார் இந்த சாரா தக்கர் தெரியுமா? அவருக்கும் திருநெல்வேலிக்கும் என்ன தொடர்பு? அவர் இங்கிலாந்தில் வசித்தவர். தனது வாழ்வில் ஒரு முறைகூட திருநெல்வேலிக்கு அவர் வந்ததும் இல்லை. அது எந்தத் திசையில் இருக்கிறது என்றே சாரா தக்கருக்குத் தெரியாது.
1843 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறு கல்வி நிறுவனம் அது. இன்று இத்தனை பெரிதாக வளர்ந்து நிற்கிறது. பல்லாயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு வாழ்வு கொடுத்தவர் சாரா தக்கர். அவர் ஒரு மாற்றுத் திறனாளிப் பெண். சாரா தக்கரின் சகோதரர் பெயர் ஜான் தக்கர். அவர் இந்திய மிஷனரி சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றி வந்தார். பாளையங்கோட்டை பகுதிக்கு வந்தபோது இங்குள்ள பெண்களின் நிலைமையைப் பார்த்தார். வருந்தினார்.
இங்கிலாந்தில் இருக்கும் தனது தங்கை சாரா தக்கருக்கு இதனைக் கடிதமாக எழுதினார். 'பெண்களை இந்த வட்டாரத்தில் படிக்க அனுப்ப மறுக்கிறார்கள். எதற்காகப் படிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்தளவுக்கு பழமைவாதிகளாக இருக்கிறார்கள்' என்று ஜான் தக்கர் கடிதம் எழுதுகிறார். இதனை சாரா தக்கர் படித்துவிட்டு கண்ணீர் வடிக்கிறார். சாரா இதனைப் படிக்கும் போது அவருக்கு 14 வயது.
உடனடியாக தன்னிடம் இருந்த 24 பவுன் நகைகளை விற்றும், தன்னுடைய தோழிகளிடம் பணம் வசூலித்தும் ஜான் தக்கருக்கு பணமாக அனுப்புகிறார். 'பெண்கள் படிப்பதற்காக ஒரு பள்ளியை நீ ஆரம்பித்து வை, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியையும் தொடங்கு' என்று சாரா தக்கர் சொல்கிறார். இதனை அடிப்படையாக வைத்துத்தான் 1843 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் கடாட்சபுரத்தில் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி முதன்முதலாகத் தொடங்கப்பட்டது.அதே ஆண்டு சாத்தான்குளத்தில் பெண்கள் பள்ளியும், விடுதியும் கட்டப்பட்டது. சிறுசிறு கிளைப்பள்ளிகள் நெல்லை மாவட்டத்தின் பல இடங்களில் உருவாக்கப்பட்டன. 1895ஆம் ஆண்டு சாரா தக்கர் பெண்கள் கல்லூரி தொடங்கப்பட்டது.
தன்னால் நடக்க முடியாவிட்டாலும், படுத்த படுக்கையில் இருந்து கொண்டே தையல் வேலைகளைச் செய்தும், தமது நண்பர்களுக்கு கடிதம் எழுதி உதவி பெற்றும் பல முறைகள் பணம் அனுப்பி லட்சக்கணக்கான பெண்களுக்கு அறிவொளி ஏற்ற உதவினார் சாரா தக்கர். இறுதிவரை இந்தியாவுக்கு அவர் வந்ததே இல்லை. 1857 ஆம் ஆண்டு அவர் மறைந்தும் விட்டார். தனது உடலையே மெழுகுவர்த்தியாக ஏற்றி ஒளியூட்டினார் சாரா தக்கர் என்றால் நம் காலத்தில் அத்தகைய ஒளியூட்டியவர் அரியலூர் அனிதா அல்லவா?
மேனிலைக் கல்விப் பொதுத்தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றவர் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா. ஆனால் 'நீட்' பலிபீடத்தில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாள் தன்னைத் தானே பலியாக்கிக் கொண்டார். பதினேழு வயதில் இத்தியாகத்தைச் செய்தார். 'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டத்தீக்கு அவரே விறகானார். நெய்யானார். இன்று வரை வெப்பமாக இருந்து கொண்டு இருக்கிறார். 'நீட்' தேர்வை கருக வைக்கும் கனலாக இருந்து கொண்டு இருக்கிறார்.ஆறு வயதில் தாயை இழந்தவர் அனிதா. தனது தாய்க்கு சரியான சிகிச்சை அளித்திருந்தால் வாழ்ந்திருப்பார் என்று நினைத்தார். அதற்காகவே மருத்துவம் படிக்க நினைத்தார். 200க்கு 196.7 மதிப்பெண் பெற்றாலும் அவரால் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய முடியவில்லை.ஏழை எளிய விளிம்பு நிலை மக்களின் மருத்துவக் கல்லூரிக் கனவைச் சிதைக்கும் 'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டத்துக்கு அனிதாவே அகரம் ஆக இருக்கிறார். 'இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே 'நீட்' தேர்வில் வெற்றி பெற முடியும், அது ஏழை எளிய மக்களுக்கு சாத்தியம் இல்லை' என்று சொல்லி அந்தத் தேர்வையே ரத்து செய்யச் சொல்லி உச்சநீதிமன்றம் சென்று வழக்குப் போட்டார் அனிதா.
அதனால்தான்... ‘அனிதா நினைவு அரங்கம்' என்று பெயர் சூட்டி இருக்கிறார் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் முதலமைச்சர்களுக்கெல்லாம் முதல்வரான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில், அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்" என்று பெயர் சூட்டி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்கள் 'அனிதா நினைவு அரங்கம்' என்ற பெயர்ப் பலகையைத் திறந்து வைத்துள்ளார்.
“நீட் தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க.வின் சட்டப் போராட்டம் தொடரும்" என்று அதே மேடையில் அறிவித்துள்ளார் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி. “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி இந்த அரங்கத்துக்கு சகோதரி அனிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் போதெல்லாம் 'நீட்' தேர்வுக்காக நாம் போராடுவது நினைவுக்கு வரும். அண்மையில் நான் பிரதமரைச் சந்தித்த போது, ‘நீட்" தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையைத் தான் முதலில் வைத்தேன். ‘நீட்' தேர்வின் அவசியத்தை என்னிடம் பிரதமர் அவர்கள் எடுத்துக் கூறினார். ஆனால் தமிழ்நாட்டு மாணவர்கள் 'நீட்' தேர்வை ஏற்கவில்லை என்று கூறினேன். ‘நீட்' தேர்வை ரத்து செய்யும் வரை தி.மு.க.வின் போராட்டம் தொடரும் என்று பிரதமரிடம் கூறிவிட்டு வந்துள்ளேன். நமது போராட்டம் தொடரும், தொடரும்..." என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முழங்கி இருக்கிறார். அவருக்குள் இருந்து அனிதா முழக்கமிட வைத்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அனிதா பெயரை அதிகம் உச்சரித்து பரப்புரை செய்தவர் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். “உன் போன்ற தங்கைகளுக்கு எங்களால் ஆன உதவிகளை நிச்சயம் செய்வோம்" என்று உறுதி அளித்திருந்தார். அதைத்தான் பிரதமர் முன்னால் எதிரொலித்து இருக்கிறார், அமைச்சராக உதயநிதி அவர்கள்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தீர்க்கமான முடிவுகளால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட 'நீட்' விலக்கு மசோதாவானது ஆளுநர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அனிதாவின் ஆசை டெல்லியில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. அனிதா கடைசியாகச் சென்ற இடமும் டெல்லிதான். அவரை டெல்லி வரை அழைத்துச் சென்று. சட்டப் போராட்டம் நடத்தக் காரணமாக இருந்தவர், இன்றைய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்.சாரா தக்கரின் ஆசை நிறைவேறியதைப் போல அனிதாவின் ஆசையும் நிறைவேறும். பெண்களுக்கான கல்வித் தடையை உடைத்தார் சாரா தக்கர். ஏழை எளிய விளிம்பு நிலை மக்களின் மருத்துவக் கல்வித் தடையை உடைப்பார் அனிதா!
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!