murasoli thalayangam
தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையில் 'கீழடி அருங்காட்சியகம்' திறக்கப்பட்டுள்ளது-முரசொலி பாராட்டு!
முரசொலி தலையங்கம் (08-03-23)
சொல்லியலும் தொல்லியலும் 2
மதுரைக்கு அருகே கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1 ஆம் நூற்றாண்டுக்கு இடையிலான முதுமக்கள் தாழிகள் புதைந்திருக்கும் ஈமக்காடு கண்டறியப்பட்டுள்ளது.
'கலம்செய் கோவே,கலம்செய் கோவே
அச்சுடை சாக்காட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லிபோலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி
அகலி தாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே' – என்கிறது புறநானூற்றுப்பாடல்.
‘எனது காதல் கணவன் போரில் இறந்துவிட்டான். அவனை புதைக்க தாழி இருக்கிறது. அது ஒரே ஒருவர் மட்டுமே இருக்கும் தாழி. என்னையும் சேர்த்து புதைக்கக் கூடிய பெரிய தாழியைச் செய்து தருவாயா’ என்று அந்தப் பெண் வேண்டுவதைப் போல அந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது. பாடலை எழுதியவர் முதுபாலை என்ற பெண்பாற் புலவர். அக்காலத்தில் எவர் இறந்தாலும் தாழி கவித்தே புதைத்த மரபு தமிழ்நிலத்தில் இருந்துள்ளது. இவைதான் இன்று தடயங்களாகவும் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
சங்கப் பாடல்கள் மதுரையை மூதூர் என்றும், கூடல் என்றும் ஆலவாய் என்றும் குறிப்பிடுகின்றன. வைகை நதிக் கரைகளில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் வைகை ஆற்றின் இருபுறமும் 293 இடங்களில் தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப் பட்டன. அவற்றில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் இருந்த 100 இடங்கள் அகழாய்வு மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டன. முதல்கட்டமாக சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் தொல்லியல் துறையினர் அகழாய்வைத் தொடங்கினர்.
தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பெருமணலூர் என்பது கீழடியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தியாவிலேயே அதிகப்படியான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ்நாட்டில் தான். அதிலும் வைகையைச் சுற்றித்தான். நமக்கு ஏராளமான இலக்கியம் உண்டு. அதனை மெய்ப்பிக்கும் ஆதாரங்களைத் திரட்டுவதற்கு கீழடி வழிகாட்டி விட்டது.
2018-–ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் அரசு திட்டமிட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை தொல்லியல் துறை அனுப்பி வைத்தது. அவர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமான முடிவுகளைப் பெற்றுள்ளது. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு கி.மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்ததை உறுதிப்படுத்தியது. மேலும், கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலமானது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகம் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதை அறிவியல் அடிப்படையில் நிலைநிறுத்தியுள்ளது.
கீழடி அகழாய்வில் 1000–க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பானை ஓடுகளில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது வெளிப்படுகிறது. பண்டைத் தமிழ்ச் சமூகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எழுத்தறிவு பெற்றும், நகர நாகரீகத்துடனும் மேம்பட்ட தமிழ்ச் சமூகமாகவும் விளங்கியதை கீழடி அகழாய்வு முடிவுகள் வாயிலாக அறிவியல் பூர்வமாக தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நிலை நிறுத்தியுள்ளது.
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் உலகத் தமிழர்கள் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் ‘கீழடி அருங்காட்சியகம்’ தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில், மதுரையும் கீழடியும், வேளாண்மையும் நீர் மேலாண்மையும், கலம் செய்கோ, ஆடையும் அணிகலன்களும், கடல்வழி வணிகம், வாழ்வியல் எனும் ஆறு பொருண்மைகள் அடிப்படையில் தனித்தனி கட்டடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழர்களின் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு, உலகின் பல்வேறு பகுதியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு ஆகியவற்றினை பறைசாற்றும் விதத்திலும், அதனை உலகிற்கு வெளிக்கொணரும் வகையிலும், உலகத்தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்துள்ளார்.
“மூத்த இனமாம் நம் தமிழினத்தின் பெருமையை விளக்குகிறது கீழடி அருங்காட்சியகம்.
தோண்டத் தோண்டப் புதையல்கள்! அனைத்தும் அருங்காட்சியகத்தில்!
ஈராயிரம் ஆண்டு வரலாற்றின் சின்னம் கீழடி! அனைவரும் வந்து பாருங்கள்!” - என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பை ஏற்று அனைவரும் கீழடிக்குச் சென்று பாருங்கள்!
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!