murasoli thalayangam

“வளர்ச்சி என்பது சமூக வளர்ச்சியையும் சேர்ந்தது..” : சமூகநீதியை நிலைநாட்டிய ‘திராவிட நாயகன்’ பிறந்த நாள்!

சமூகநீதியை நிலைநாட்டிய பிறந்த நாள்!

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஒவ்வொரு சமூக நலத் திட்டத்தைத் தொடங்கி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். கண்ணொளி வழங்கும் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், கருணை இல்லங்கள் - ஆகியவை ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒன்றாகத் தொடங்கப்பட்ட திட்டங்கள்தான். விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்காக எங்களை நாங்களே ஒப்படைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை இதன் மூலமாக அவர் அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தார்.

‘நெஞ்சுக்கு நீதி'யின் முதல் பாகத்தை வெளியிடுவதற்கான விழா 1975 ஆம் ஆண்டு நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது வருகை தந்து வெளியிட ஒப்புதல் தந்திருந்தார். கடைசியில் அவரை வரவிடாமல் சில சக்திகள் தடுத்துவிட்டது. அதற்காக நிகழ்ச்சியை ஒத்தி வைப்பவரா தலைவர் கலைஞர்? விழாவுக்கு, ஆசீர்.நல்லதம்பி தலைமை வகித்தார். முகமது அலி வெளியிட்டார். சாந்தகுமாரி பெற்றுக் கொண்டார். யார் இவர்கள்?

விழி இழந்தோர் சங்கத் தலைவர் ஆசீர்.நல்லதம்பி. தொழுநோய் மறுவாழ்வு சங்கத் தலைவர் முகமது அலி. மாற்றுத்திறனாளி சாந்தகுமாரி. இவர்களை வைத்து வெளியிட்டார் கலைஞர். இந்தியக் குடியரசின் உண்மையான குடிமக்கள் இவர்கள் தான் என்பதை அன்று அறிவித்தார் கலைஞர். கழகத்தின் உயிரான சமூகநீதி இதில்தான் குடியிருக்கிறது.

அந்த வழியில்தான் 1984 ஆம் ஆண்டு முதல் சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளிக் குழந்தைகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். நேற்றைய தினமே அங்கு சென்று அந்தப் பிள்ளைகளுக்கு கேக் ஊட்டிக் கொண்டாடினார்.

தலைவர் கலைஞரைப் போலவே தனது பிறந்தநாளையும் சமூகநீதித் திருநாளாக அடையாளப்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். எழுபதாவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் 'திராவிட நாயகன்' அவர்கள், ஏற்றமிகு ஏழு திட்டங்களை நேற்றைய தினம் தொடங்கி வைத்துள்ளார். இதில் மிகமிக முக்கியமானது மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஆகும்.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க DICCI அமைப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது. “தூய்மைப் பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தை ஏற்கனவே மதுரையில் நான் தொடங்கி வைத்துள்ளேன்.

இத்திட்டப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக, பாதாளச் சாக்கடைப் பராமரிப்பு மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளை நவீன இயந்திரங்கள் மூலம் மேற்கொண்டு, உயிரிழப்புகளை முற்றிலும் தவிர்க்கத் திட்டமிட்டுள்ளோம். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை தொழில் முனைவோர்களாக ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் சென்னை பெருநகரப் பகுதியில் செயல்படுத்தப்படும்.

தூய்மைப் பணியில் ஈடுபடும்போது உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கும், தற்போது தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் முன்னுரிமை அளித்து, தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் என்ற நிலையில் இருந்து அவர்களை உயர்த்தி, இப்பணிகளை அனைத்து நவீன இயந்திரங்களோடு மேற்கொள்ளக் கூடிய தொழில் முனைவோர்களாக அவர்களை மாற்றிடுவதற்காக, தலித் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (DICCI) அமைப்புடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் தூய்மைப் பணியாளர் குடும்பத்தினருக்கு, நவீனக்கருவிகளும், வாகனங்களும் வழங்கப்படுவதோடு, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படும். சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியம் மூலமாக சென்னை மாநகரப் பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம், படிப்படியாக மாநிலத்தின் மற்ற நகர்ப்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்" என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இது இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக அமையப் போகிறது.

மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் பணியில் தமிழ்நாட்டில் 425 பேர் இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. இனி, இவர்களுக்குப்பதிலாக இயந்திரங்கள் செய்ய வழிவகை காணப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் 66,692 பேர் இருக்கிறார்கள். இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 37,379 பேர் இருப்பதாகக்

கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், மகாராஷ்டிரா 7,378 பேருடன் இரண்டாவது இடத்திலும், உத்தரகண்ட் 6,170 பேருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பலர் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்திய அளவில் 340 தொழிலாளர்கள் இறந்துள்ளதாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளில் 43 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே முதலமைச்சர் அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். 'மனிதக் கழிவுகளை அகற்றும் முறையை ஒழிக்க இயந்திரம் கொண்டுவரப்படும்' என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை முதன்முறையாகத் தமிழ்நாட்டில் சேப்பாக்கம் --திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள கொய்யாத்தோப்பு பகுதியில், அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இது விரிவுபடுத்தப்பட இருக்கிறது. வளர்ச்சி என்பது சமூக வளர்ச்சியையும் சேர்ந்தது - என்று 'திராவிட நாயகன்' சொல்லி வருவதன் உண்மையான பொருள் இதுதான்!

Also Read: ‘2 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்ற பரிமாணங்கள் இவை..’ பிறந்தநாள் நாயகனுக்கு முரசொலி புகழாரம் !