murasoli thalayangam

“ஓய்வுபெற்ற நீதிபதிகளை ஆளுநர்களாக நிர்ணயிப்பது நீதித்துறைக்கே இழுக்கு..” : மோடி அரசை சாடிய முரசொலி!

இது முறையோ? நீதியோ?

எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாகச் செய்வது பா.ஜ.க.வின் பழக்கம் ஆகும். ஆளுநர்களாக தங்களது அடிப்பொடிகளை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். இப்போது அடுத்த கட்டமாக வளர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதிகளையும் நுழைக்கத் தொடங்கிவிட்டார்கள். நீதிபதியாக இருந்தவரை; ஓய்வு பெற்றாலும் ஆளுநர்களாக நிர்ணயிப்பது என்பது நீதித்துறைக்கான இழுக்கே ஆகும்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் எஸ்.அப்துல் நசீர். அவர் நாற்பது நாட்களுக்கு முன்புதான் ஓய்வு பெற்றார். அவரை ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நியமித்திருக்கிறது பா.ஜ.க. நாற்பதே நாட்களுக்குள் லக்கி பிரைஸ் அடித்திருக்கிறது அவருக்கு.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதே. அனைவருக்குமான தூண்டுகோலாக அது அமைந்தது. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த அசோக் பூஷண், ஓய்வு பெற்ற நான்கு மாதங்களுக்குள் தேசிய நிறுவன சட்ட முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இப்போது அப்துல் நசீர், ஆளுநராகவே நியமிக்கப்பட்டு விட்டார். அசோக் பூஷணுக்காவது சட்டரீதியான பதவியாகும். ஆனால் ரஞ்சன் கோகாயும், அப்துல் நசீரும் அப்பட்டமான அரசியல்ரீதியான பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். இதன்மூலமாக அனைவர்க்கும் சமிக்ஞை காட்டுகிறது பா.ஜ.க. அரசு.

அயோத்தி விவகாரம் குறித்து தீர்ப்பளித்த அமர்வில் இடம்பெற்றிருந்த ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகளுக்கு பதவிகள் அளிக்கப்பட்டுவிட்டது என்று சொல்வதைக் கேட்கும்போது, இந்திய நீதித்துறையின் எதிர்காலம் குறித்த கேள்விக்குறியே பெரிதாக எழுந்து நிற்கிறது.

பா.ஜ.க.வின் முகத்தைக் காப்பாற்றிய இரண்டு முக்கியமான வழக்குகள் அயோத்தி வழக்கும் பணமதிப்பிழப்பு வழக்கும் ஆகும். அயோத்தி விவகாரம் தொடர்பான இறுதித்தீர்ப்பு 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் நாள் வழங்கப்பட்டது. நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சந்திரசூட், அரவிந்த் போப்டே, அப்துல் நசீர், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் நடத்திய ஆய்வின் மூலமாக கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மூலமாக இசுலாமியர் அல்லாத சமயத்தவரின் கட்டட அமைப்பின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டது என்றும், மூன்று மாதங்களுக்குள் அந்த இடத்தில் இந்திய அரசு ஒரு அறக்கட்டளையை நிறுவி இராமர் கோவிலைக் கட்ட வேண்டும் என்றும் அயோத்தியில் இசுலாமியர் தொழுகை நடத்துவதற்கு மசூதி கட்டிக் கொள்ள ஐந்து ஏக்கர் நிலத்தைத் தர வேண்டும் என்றும் ஐந்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு மாறுபட்டதாக வந்திருக்குமானால் பா.ஜ.க.வின் அரசியல் முடிந்திருக்கும். மாறாக, அவர்களுக்குச் சாதகமாக இந்தத் தீர்ப்பு வந்தது. இதனை தனது அரசியல் வெற்றியாக அக்கட்சி பரப்புரை செய்து வருகிறது.

இன்னொரு முக்கியமான வழக்கு. பணமதிப்பிழப்பு வழக்கு ஆகும். 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள், இரவில் 1000, 500 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் நரேந்திரமோடி. அதற்கு அவர் சொன்ன காரணங்கள் அபத்தமானவை. ஆறு ஆண்டுகள் கழிந்தபிறகும் அந்த நோக்கங்கள் நிறைவேறவில்லை என்பதுதான் உண்மை. இதுதொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வுக்கு அப்துல் நசீர் தலைமை வகித்தார்.

இப்படி ஒரு முடிவை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்று இதில் பார்க்க முடியாது என்றும்; நீதிபதிகளில் நால்வர் தீர்ப்பளித்தார்கள். ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். ‘பெரும்பான்மை நீதிபதிகள் ஆதரவு' என்ற அடிப்படையில் பணமதிப்பிழப்பு பிழைத்தது; பா.ஜ.க. ஆட்சியின் செயல்பாடும் பிழைத்தது. இதனையும் பெரும் வெற்றியாக பா.ஜ.க. சொல்லி வருகிறது.

இந்த இரண்டு அமர்வுகளிலும் இருந்தவர் நீதிபதி அப்துல் நசீர். அவருக்கு ஆளுநர் என்ற 'பா.ஜ.க.வின் நாற்காலி' போடப்பட்டு இருப்பது இந்திய நீதித்துறையையும் சேர்த்துக் களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது. காங்கிரசு செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, ”நாங்கள் தனிநபர்களைப் பற்றிப் பேசவில்லை. கொள்கை அடிப்படையில் நாங்கள் இதனை எதிர்க்கிறோம். கொள்கை அடிப்படையில் இது ஒரு பெரிய கறை. நீதித்துறையின் சுதந்திரத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் என நாங்கள் நம்புகிறோம்” என்று சொல்லி இருக்கிறார். இதையே பெரும்பாலான ஜனநாயக சக்திகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.

இந்த நேரத்தில் பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான - மறைந்த அருண் ஜெட்லி அனைவராலும் நினைவு கூரப்படுகிறார். அவர் சொன்ன ஒரு பொன்மொழி அதிகப்படியாக பரவி வருகிறது. ”ஓய்வுக்குப் பிறகு பெற இருக்கும் வேலை மீதான ஆசை, ஓய்வுக்கு முந்தைய தீர்ப்பைப் பாதிக்கிறது. இது நீதித்துறையின் சுதந்திரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகும்” என்பதை அடிக்கடி சொல்லி வந்தார் அருண் ஜெட்லி. அதுதான் இன்று நடக்கிறது; பா.ஜ.க. பட்டவர்த்தனமாக நடத்துகிறது.

இந்த நேரத்தில் உச்சநீதிமன்றம் உச்சந்தலையில் 'நொங்' என்று கொட்டுவதைப் போல ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறது. 'ஆளுநர்கள் அரசியல் மாற்றங்கள் குறித்து எதற்காகக் கருத்துச் சொல்ல வேண்டும்?" என்று சொல்லி இருக்கிறார் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள்.

கேட்கிறதா?

Also Read: "கர்ப்­பி­ணி­யாக போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் குழந்தை பெற்ற கழக போராளி"- சத்தியவாணி முத்து அம்மையார்!