murasoli thalayangam

“இதை சொல்ல வெட்கமில்லையா? - வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்தது மறந்து போனதா?” : மோடிக்கு பாடம் எடுத்த முரசொலி!

செலக்டிவ் அம்னீஷியா!

பா.ஜ.க.ஆட்சி குறித்து ஏராளமான கேள்விகளை திராவிட முன்னேற்றக் கழகம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வைத்துள்ளது. அவை எதற்கும் பதில் அளிக்காத பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசுடன் நீங்கள் கூட்டணி வைக்கலாமா, உங்கள் ஆட்சியைக் கலைத்தது காங்கிரசுதானே என்று கேட்கிறார் பிரதமர்.

தி.மு.க. முன் வைத்தது அனைத்தும் ஆட்சி ரீதியாக, நிர்வாக ரீதியான புகார்கள். ஆனால் பிரதமர் கேட்பது அரசியல் ரீதியான கேள்வி ஆகும். அதற்கு அரசியல் ரீதியான பதிலையே சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இன்றைக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருக்கிறது அ.தி.மு.க. - இந்த அ.தி.மு.க.தான் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்த்தது என்பதை பிரதமர் மோடி மறந்திருக்கலாம். நாட்டு மக்கள் மறக்கவில்லை. 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அ.தி.மு.க. கூட்டணியில்தான் பா.ஜ.க. இருந்தது.

அமைச்சரவை அமைக்குமாறு வாஜ்பாய்க்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்த பிறகும், பா.ஜ.க.வுக்கு ஆதரவுக் கடிதத்தை ஜெயலலிதா தரவில்லை. யார் யாருக்கு என்ன துறை வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா நிபந்தனை விதித்தார். அதனை வாஜ்பாய் ஏற்கவில்லை. 'அ.தி.மு.க. கூட்டணிக்கு நிதி துறையை ஒதுக்குவதில் பிரச்சினை இருக்கிறது' என்று வாஜ்பாய் வெளிப்படையாக பேட்டியே கொடுத்தார். இரண்டு கட்சிக்கும் பேச்சுவார்த்தை நடந்தது.

‘ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு ஆதரவு தருகிறோம். ஆதரவுக் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம். ஆனால் அமைச்சரவையில் சேர மாட்டோம்' என்று ஜெயலலிதா அறிக்கை விட்டார். சில மாதங்கள் கழிந்ததும் ஜெயலலிதா இறங்கி வந்து அமைச்சரவையில் சேர்ந்து கொண்டார். தம்பிதுரை, சேடப்பட்டி முத்தையா, ஆர்.கே.குமார், கடம்பூர் ஜெனார்த்தனம் ஆகியோர் அமைச்சர்கள் ஆனார்கள். அமைச்சரவையில் இணைந்த பிறகும் பா.ஜ.க.வுக்கு அவர் கொடுத்த குடைச்சல்கள் அதிகம். ஓராண்டுகள் கழிந்த நிலையில், பா.ஜ.க. அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெற்றார் ஜெயலலிதா. அ.தி.மு.க. சார்பில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் திடீரென பதவி விலகினார்கள்.

கடற்படை ராணுவத் தளபதி விஷ்ணு பகவத்தை டிஸ்மிஸ் செய்த காரணத்தை எனக்குச் சொல்ல வில்லை என்று சொன்னார் ஜெயலலிதா. அமைச்சரவையில் இருந்து ஜார்ஜ் பெர்னாண்டஸை நீக்கச் சொன்னார். அ.தி.மு.க. அமைச்சர்கள் இல்லாமலேயே அமைச்சரவைக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டிய கூத்தெல்லாம் அப்போது நடந்தது. மாற்று அரசை அமைக்கப் போவதாகச் சொல்லி டெல்லிக்கு ஜெயலலிதா போனார். வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்க்க டெல்லி சென்றார் ஜெயலலிதா. குடியரசுத் தலைவரைச் சந்தித்து பா.ஜ.க. ஆட்சிக்கு தந்த ஆதரவை திரும்பப் பெறுவதாகக் கடிதம் கொடுத்தார்.

இதனால் வாஜ்பாய் அரசு, பெரும்பான்மையை இழந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். 17.4.1999 அன்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. வாஜ்பாய் அரசைக் கவிழ்த்த அ.தி.மு.க.வுடன் தான் இப்போது மோடி கூட்டணி வைத்திருக்கிறார். இதை எல்லாம் மறந்து விட்டாரா பிரதமர்?

'அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா' என்று அப்போது சொன்னார் ஜெயலலிதா. (ஒரு வகையான மறதி நோய்-சிலவற்றை மட்டும் மறந்துவிடுவது!) இப்போது அது யாருக்கு இருக்கிறது?

வாரம் தோறும் ஒன்றிய அமைச்சர்கள் ஜஸ்வந்த்சிங், யஷ்வந்த்சின்கா, பெர்னான்டஸ் போன்றவர்கள் சென்னை வந்து ஜெயலலிதா வீட்டு வாசலில் காத்திருப்பார்கள். இது மறந்து விட்டதா?

வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்க்க சுப்பிரமணியம் சுவாமி, டெல்லியில் தேநீர் விருந்து நடத்தியதும், அதில் ஜெயலலிதாவை பங்கெடுக்க வைத்ததும் மறந்து போனதா?

ஷக்தி சின்கா என்பவர் வாஜ்பாய் பற்றி ஒரு புத்தகம் எழுதினார். “ஒரு பிரதமரான வாஜ்பாய்க்கு தேனிலவுக் காலம் என்பதே கிடைக்காமல் போனது. ஜெயலலிதா முதல் நாளில் இருந்தே கண்ணில் விரலை விட்டு ஆட்டினார். ஜெயலலிதா தனக்கு எதிரான வழக்குகளில் இருந்து தப்பிக்க வாஜ்பாய் தனக்கு உதவ வேண்டும் என்று விரும்பினார். அரசாங்கமும் அவர்களுக்கு முடிந்த வரை சட்டபூர்வமாக உதவியது." என்று எழுதினார்.

'அவுட்லுக்' ஆசிரியர் வினோத் மேத்தா, பிரதமரைச் சந்திக்கச் சென்றதாகவும், அப்போது வாஜ்பாய் ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததாகவும், என்ன இப்படி இருக்கிறீர்களே என்று வினோத் மேத்தா கேட்டதாகவும், 'அடுத்து என்னைச் சந்திக்க ஜெயலலிதா வரப்போகிறார்' என்று வாஜ்பாய் சொன்னதாகவும் அந்தப்புத்தகத்தில் இருக்கிறது. இத்தகைய அ.தி.மு.க.வுடன்தான் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சி கவிழ்க்கப்பட்ட அன்று, 'நான் இன்று நிம்மதியாக உறங்குவேன்' என்றார் வாஜ்பாய். 'எனது வாழ்க்கையில் மனநிம்மதி இல்லாத காலம் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்திருந்த காலம்' என்றார் வாஜ்பாய். இதே அ.தி.மு.க.வுடன் தான் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறது. இவை அனைத்துக்கும் மேலாக "மோடியா? லேடியா” என்று கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தவர் ஜெயலலிதா.

'இந்தியாவின் சிறந்த நிர்வாகி மோடி அல்ல, இந்த லேடிதான்' என்று பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா. குஜராத் வளரவே இல்லை, தமிழ்நாடுதான் வளர்ந்துள்ளது என்று சொன்னவர் ஜெயலலிதா. அவர் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளார் பிரதமர் நரேந்திரமோடி.

இவை அனைத்துக்கும் மேலாக, “எங்களுக்கு யார் தயவும் தேவையில்லை, தனித்தே ஜெயிப்போம், நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் கூட்டணியைப் பற்றி முடிவெடுப்போம்" என்று இரண்டு நாட்களுக்கு முன்னால் எடப்பாடி பழனிசாமி சொன்ன பிறகும், “உங்கள் கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம்" என்று சொல்லிக் கொள்ள பா.ஜ.க.வுக்கு வெட்கமில்லையா? 'கழகங்கள் இல்லாத தமிழகம்' என்று கிளம்பி, இன்று அ.தி.மு.க. ஆக்சிஜனில் பா.ஜ.க. உயிர்வாழ்வதுதான் இந்தியாவின் 'இரண்டாவது இரும்பு மனிதருக்கு' அழகா?

Also Read: அதானி முறைகேடு விவகாரம்.. உண்மையை காட்டிக் கொடுக்கும் பிரதமர் மோடியின் 'மௌனம்' : முரசொலி தாக்கு!