murasoli thalayangam
“காலைப் பிடிப்பதும், காலை வாரும் கொள்கை கொண்ட பழனிசாமிக்கு குற்றம் சொல்ல அருகதை இல்லை” : முரசொலி சாடல் !
பழனிசாமிக்கு அருகதை இல்லை!
தி.மு.க. ஆட்சி மீது புகார் கொடுக்கிறாராம் பழனிசாமி. எந்த பழனிசாமி? தான் ஒரு உதவாக்கரை என்பதை நான்காண்டு காலம் ஆண்டு காட்டிய அதே பழனிசாமிதான்! யாரிடம் மனுக் கொடுக்கிறார்? அதே ஆளுநரிடம்தான்! தமிழை - தமிழகத்தை - திராவிடத்தை - திருக்குறளைத் தினம் உள்நோக்கம் கற்பித்துப் பேசி வரும் ஆளுநரிடம் மனுக் கொடுக்கிறார் பழனிசாமி. பழனிசாமிக்குத்தான் எந்தக் கொள்கையும் கிடையாதே!
காலைப் பிடிப்பதும், காலை வாருவதும்தான் பழனிசாமியின் இரட்டைக் கொள்கைகள். அதன் மூலமாகத்தான் சசிகலாவின் காலைப் பிடித்து ஆட்சிக்கு வந்தார். பின்னர் சசிகலா காலையே வாரினார். அடுத்து பா.ஜ.க.வின் காலைப் பிடித்து பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். இன்று பா.ஜ.க., பன்னீரை வளர்ப்புப் பிராணியாக வளர்க்கத் தொடங்கியதால் அதன் காலை வாரலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக பழனிசாமி கூவி இருக்கிறார். தூத்துக்குடியில் 13 உயிர்களை துள்ளத் துடிக்க சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட பழனிசாமிதான் இதைச் சொல்கிறார்.‘‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அப்போதைய முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘அந்த சம்பவத்தை மற்றவர்களைப் போல ஊடகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்து கொண்டேன்’ என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஆனால் இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டி.ஜி.பி. ராஜேந்திரன், அப்போதைய உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்ததாகக் கூறினார்கள்.
எனவே, ஊடகங்கள் மூலமாகத்தான் அந்த சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது தவறான கருத்து என்பது இந்த ஆணையத்தின் கருத்தாகும்” என்று நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் இறுதி அறிக்கை சொல்கிறது. இத்தகைய பழனிசாமிதான் இப்போது சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசுகிறார்.
எந்த வழக்கையும் மேற்கொண்டு புலன்விசாரணையை காவல்துறை நடத்தலாம். மேல் புலன் விசாரணை (Further Investigation) என்பது குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டத்தின் 173(8) பிரிவின் படி நடத்தப்படுவது. அதன்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்னர் கூடுதல் தகவல் கிடைத்தால் அதை முறைப்படி விசாரணை செய்ய காவல்துறைக்கு உரிமையும் கடமையும் உண்டு.
அதன்படி தான் கொடநாடு வழக்கிலும் மேற்கொண்டு புலன் விசாரணை நடத்தப்படுகிறது. இப்படி விசாரணை தொடங்கியதும் அலறி அடித்துக் கொண்டு தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் நுழைந்த பழனிசாமி, குய்யோ முறையோ என்று கத்தினாரே? என்ன காரணம்? கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எடப்பாடியாருக்கு ஏன் இதயம் ‘பச்சக் பச்சக்’ எனத் துடித்தது?
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலையும் நடந்தது, கொள்ளையும் நடந்தது, மர்ம மரணங்களும் நடந்தன. டெல்லி பத்திரிக்கையாளர் மாத்யூ, பழனிசாமியை நேரடியாகக் குற்றம் சாட்டி பேட்டிகள் அளித்தார். இந்த மகா யோக்கியர்தான் இப்போது சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசுகிறார்.
பொள்ளாச்சிக் கயமைகளை பழனிசாமி மறந்திருக்கலாம். நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள். ஆபாச படம் எடுத்து மிரட்டியவர்கள் ஒரு பக்கம், அவர்களைக் காப்பாற்றியது எடப்பாடியின் நிர்வாகம். புகார் கொடுத்தவர்களை மிரட்டியது அ.தி.மு.க. பிரமுகர். அவர் கோவை எஸ்.பி.அலுவலக வாசலில் வைத்து தைரியமாக பேட்டி கொடுத்தார்.
தி.மு.க. மகளிரணி சார்பில் போராட்டம் நடத்திய பிறகுதான் நடவடிக்கை எடுப்பதைப் போல நாடகம் ஆடினார்கள். மாவட்ட எஸ்.பி. கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டார். டி.எஸ்.பி.யும் இன்ஸ்பெக்டரும் மாற்றப்பட்டார்கள். ஆனாலும் குற்றவாளிகளைக் காப்பாற்றினார்கள். சாட்சிகளை மிரட்டுவதை வேடிக்கை பார்த்தார்கள். பிடித்துத் தரப்பட்ட குற்றவாளிகளை விடுவித்தது அ.தி.மு.க. ஆட்சி.
அ.தி.மு.க. பிரமுகரைச் சந்தித்தே கோரிக்கை வைத்த பிறகும் செயல்படவில்லை. தரப்பட்ட ஆபாச வீடியோக்களை வைத்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபற்றி பத்திரிகையாளர்கள் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி யைக் கேட்டார்கள். “அப்படியெதுவும் இல்லை, ஆதாரம் இருந்தால் கொடுங்கள்” என்றார்.
சில நாட்களில், பிரச்சினை பெரிதாக உருவெடுத்ததால் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி உத்தரவு போட்டார். நான்கு பேரை மட்டும் கைது செய்து கணக்குக் காட்டினார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கும் நிலையில் அந்தப் பெண்ணின் பெயரையும் முகவரியையும் வெளிப்படையாக அறிவித்த அக்கறையற்ற ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி.
பெண்களை வசியப்படுத்த ‘பெய்டு கேங்’ என்ற ஒரு கும்பல் பொள்ளாச்சியில் செயல்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுதான் பழனிசாமியின் ஆட்சியாகும்.
ஜெயலலிதாவின் பங்களாவில் கொலையும், கொள்ளையும் நடந்தது யார் ஆட்சியில்?
பொள்ளாச்சி பாலியல் வன்செயலுக்கு காரணமானவர்கள் காப்பாற்றப்பட்டது யார் ஆட்சியில்?
அமைதி வழியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது தடியடி நடத்தியது யார் ஆட்சியில்?
பெண் போலீஸ் ஐ.ஜி.க்கே பாதுகாப்பு இல்லாத வகையில் ஆட்சி நடத்தியது யார்?
கஞ்சா கடத்தல் அதிகமாக நடந்தது யார் ஆட்சியில்? அமைச்சரும், போலீஸ் அதிகாரிகளுமே மாமூல் பட்டியலில் இருந்தார்களே!
இதை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று பழனிசாமி நினைக்கலாம். மக்கள் மறக்கவில்லை. அதனால் பழனிசாமிக்கு யார் மீதும் குற்றம் சொல்ல அருகதை இல்லை!
Also Read
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !
-
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : 13 அரசுத்துறைகள்.. குவிந்த பொதுமக்கள்.. தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!