murasoli thalayangam
"சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக இன்றும் தேவை நீதிக்கட்சி எழுச்சியே".. முரசொலி!
முரசொலி தலையங்கம் (22-11-2022)
நவம்பர் 20 - நீதிக்கட்சி உருவான நாள்!
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், “தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து - அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம் ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். “ஆயிரம் அரிதாரங்கள் பூசிவந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திவிட முடியாது” என்றும் முதலமைச்சர் அவர்கள் முழங்கி இருக்கிறார்கள்.
காசி தமிழ்ச் சங்கமம் – நடத்தி ஏமாற்ற நினைப்பவர்களைத் தான் நேரடியாகவே முதலமைச்சர் அவர்கள் இப்படி சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்பதில் ஒற்றும் இல்லை, பற்றும் இல்லை என்பதைத் தமிழர்கள் அறிவார்கள். இத்தகைய மயக்கங்களை வீழ்த்துவதற்கு உருவானதுதான் நீதிக்கட்சி.
நாம் நாடாண்ட இனம், பாராண்ட இனம், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி, உலகின் முதல் குடி தமிழ்க்குடி, சிந்து வெளியில் சிகரம் தொட்டவர்கள், கீழடியின் மண்ணுக்குச் சொந்தக்காரர்கள், ஆதிச்சநல்லூர் நம் பெருமையை அகிலத்துக்குச் சொல்லும், பிறமொழிகளுக்கு எல்லாம் இலக்கியமே தோன்றாத போது இலக்கணம் எழுதிவிட்டவன் தமிழன், பிற இனத்தவன் நிர்வாணமாக அலைந்து கொண்டிருந்தபோது ஆடை உடுத்தி இருந்தவன் தமிழன்,
அவன் மொழியாம் தமிழ் மொழி உலக மொழிகளின் தாய், உலகத்துக்கு நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுத் தந்தவன் தமிழன், அவனது எழுத்துக்கள் எப்போது தோன்றியது என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது - என்றெல்லாம் பெருமை பொங்கப் பேசுகிறோம். இவை உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை!
அதைவிடப் பேருண்மை ஒன்று உண்டு. அதுதான், இவை அனைத்தும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருமைக்குரிய நிலையே தவிர முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமை அல்ல. இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய இழிவு வரலாறு அறியாமலேயே ஈராயிரம் ஆண்டுப் பெருமையில் மூழ்கிக் கிடக்கிறோம். இருநூறு ஆண்டுக்கு முந்தைய இழிவை உணராததால்தான், ‘பெரியார் வந்துதான் கிழித்தாரா?’ என்று வாய்வீரம் பேசித்திரிகிறார்கள் சிலர்.
சங்ககாலப் பெருமைகள், காலம் வளர வளரத் தேய்ந்தே வந்தன. இந்த தேய்பிறை தெரியாததால்தான் இருபதாம் நூற்றாண்டின் வளர்பிறை வரலாற்றை உணரத் தெரியவில்லை சிலரால். இதுதான் திராவிட இயக்கத்தின் மீதான வன்மமாக வெளிப்படுகிறது. தமிழ் வேந்தர்களின் ஆட்சி பதினான்காம் நூற்றாண்டில் முடிந்தது. அத்தோடு தமிழர்களின் வாழ்க்கையும் தேயத் தொடங்கியது.
இதன்பிறகு தான் சாதியம் தலை தூக்கியது. பல்வேறு சமயம் சார்ந்த அரசுகள் தோன்றின. ‘தமிழர் நிலப்பரப்பை சமயம் சூறையாடியது’ என்பார் ப.சிவனடி. ‘நாட்டை பழங்குடி நிலையில் இருந்து சமூக நிலைக்கு மாற்றிய பிராமணியம், பின்னர் நாட்டை முன்னேற்ற விடாமல் தடுத்து மிகக் கேவலமாக மூடநம்பிக்கைச் சேற்றில் மக்களை மூழ்கடித்தது’ என்பார் இந்திய வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பி.
தமிழ் தள்ளி வைக்கப்பட்டது. தமிழைக் காரணம் காட்டி தமிழன் தள்ளி வைக்கப்பட்டான். இத்தகைய காலச் சூழலில் தோன்றியதுதான் நீதிக்கட்சி. பிற்படுத்தப்பட்டோர் – பட்டியலினத்தவர் அணிச்சேர்க்கைக்கு வழிவகுத்த நீதிக்கட்சியானது அவர்களது கல்வி, வேலை உரிமைகளைப் பெற்றுத் தந்தது. வகுப்புவாரி உரிமை வழங்கலானது ( 1922– -1929) மிக முக்கியமான கதவுத் திறப்பாக அமைந்திருந்தது. பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியதும், வேலை வாய்ப்புகளில் தரப்பட்ட இடஒதுக்கீடும் பிற்படுத்தப்பட்டோர் – பட்டியலின நிர்வாக - அறிவுத்தள நுழைவுக்கு அடித்தளம் அமைத்தது.
பட்டியலினத்தவர் இடஒதுக்கீட்டை காலனிய காலத்தில் தொழிலாளர் துறை மூலமாக வழங்கப்பட்டாலும், பள்ளிகளை நீதிக்கட்சி காலத்தில் அதிகப்படுத்தியதே பலன்களைக் கூட்டியது. பள்ளிகளில் படிப்பதற்கு, சேர்வதற்கு பாகுபாடு காட்டப்பட்டால், உரிமம் ரத்து செய்யப்படும் என்று சட்டம் போட்டது நீதிக்கட்சி காலம்.
* வகுப்புவாரி உரிமையை 1922 ஆம் ஆண்டே வழங்கியது நீதிக்கட்சி ஆட்சி.
* அனைவர்க்கும் கல்வி என்பதை கட்டாயம் ஆக்க நீதிக்கட்சி அரசு 09.03.1923 அன்று ஒரு அரசாணையை வெளியிட்டது.
* எந்த சமூகத்தவரையாவது பாகுபாடு பார்த்து கல்விச் சாலைக்குள் அனுமதிக்க மறுத்தால் அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
* மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்பதை நீக்கியது.
* அதுவரை சென்னை மாகாணத்துக்கு சென்னைப் பல்கலைக் கழகம் மட்டும்தான் இருந்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை உருவாக்கித் தந்தது நீதிக்கட்சி அரசு.
* கல்லூரி முதல்வர்கள் கையில்தான் மாணவர் சேர்க்கை அதிகாரம் இருந்து. இதனை மாற்றி கல்லூரிக் குழுக்களை அமைத்தது நீதிக்கட்சி ஆட்சி. தகுதியுடைய அனைவரும் உள்ளே வர இது வாய்ப்பை ஏற்படுத்தியது.
* அனைத்து மாணவர்க்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்கியது.
* பட்டியலின மாணவர் கல்விக்கு ஊக்கத்தொகை வழங்கியது.
* மாணவர் விடுதிகள் கட்டித் தந்தது.
* பெண் கல்வியை ஊக்கப்படுத்தியது. பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சி பள்ளி உருவாக்கப்பட்டது.
* இரவுப் பாடச்சாலைகள் உருவாக்கப்பட்டன.
* பஞ்சாயத்து வாசக சாலைகள் திறக்கப்பட்டன.
* அப்போது இருந்த 78 நகராட்சிகளில் 26 நகராட்சிகளில் இலவச கட்டாய ஆரம்பக் கல்வி வழங்கப்பட்டது.
சமூகநீதிக்கு வேட்டு, தேசியக் கல்விக் கொள்கை மூலமாக தடைக்கற்கள், மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட், ஒடுக்கப்பட்டவர்களை மீண்டும் எழ வாய்ப்பு இல்லாமல் தடுப்பது, ஒற்றைத் தன்மை கொண்டதாக ஒன்றிய அரசை மாற்றுதல் - இவை அனைத்துக்கும் எதிராக இன்றும் தேவை நீதிக்கட்சி கால எழுச்சியே.
இதனைத்தான் உணர்த்துகிறது முதலமைச்சரின் அறிக்கையும்!
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!