murasoli thalayangam

“வெள்ளை இனத்தைச் சேராத ரிஷி சுனக் பிரதமர் பதவியில் ஆள வந்திருப்பது பெருமைக்குரியது தான்” - முரசொலி !

ரிஷி சுனக் - பெருமைக்குப் பின்னால்!

பிரிட்டன் பிரதமராக யார் ஆனால் என்ன? என்பது சிலரது எண்ணமாக இருக்கலாம். பிரிட்டன் பிரதமரைப் புகழ்ந்து எழுதுவது கூட ‘காலனியாதிக்க அடிமைத்தனத்தின் எச்சம்’ என்று சிலரால் விமர்சிக்கவும் படலாம். இருந்தாலும் பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் ஆனது அனைவராலும் பேசப்பட வேண்டியதாகவும், உன்னிப்பாக கவனிக்க வேண்டியதாகவும் இருக்கிறது.

பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டதை ஒரு நாடு இன்னொரு நாட்டை அடிமைப்படுத்தியதாக மட்டுமே பார்க்க முடியாது. ஒரு பெருமிதம், நம்மைக் கீழ்மைப்படுத்தி அடிமைப்படுத்தியதாகப் பார்க்க வேண்டும். இப்படித்தான் அவர்கள் நம்மைப் பார்த்தார்கள். இந்தியாவுக்கு, இந்தியர்களுக்கு ஓரளவு உரிமை தரலாம் என்று எழுதியவர் கிரிப்ஸ்.

ஆனால் அவரே என்ன சொன்னார் என்றால்.. ‘‘இந்தியாவை ஆளும் பொறுப்பு ஆய்ந்தறிய முடியாத இறைவனின் அருளால் பிரிட்டிஷ் இனத்தின் தோள்களில் சுமத்தப்பட்டிருக்கிறது” என்று சொன்னார் கிரிப்ஸ்.

இந்தியாவை இன்னும் மட்டரகமான வார்த்தைகளால் வர்ணித்தவர் வின்சென்ட் சர்ச்சில். ‘’இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தால் அதிகாரம் வஞ்சகர்கள் கைக்குப் போய்விடும். அவர்கள் திறன் குறைந்தவர்கள். அவர்களுக்குள் நடக்கும் அதிகாரச் சண்டையில் இந்தியா ஒன்றுமில்லாமல் போகும்” என்று சொன்னார் அவர்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து மிகக் கடுமையாகப் பேசினார் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார். ‘இப்படி பேசுவதற்கு இந்தியர்களுக்கு உரிமை இல்லை. உங்களுக்கு வாக்குரிமை கிடையாது. வாக்குரிமை இல்லாதவர்க்கு பேசுவதற்கான உரிமையும் இல்லை” என்று வ.உ.சி. தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இவை அனைத்தும் ஒருவிதமான பெருமிதத்தின் குரல்கள்.

அத்தகைய சமூக அமைப்பைக் கடந்து வந்த எழுபத்தைந்து ஆண்டுகளில், பிரிட்டனை ஒரு இந்திய பிறப்புவழி குடிமகனான ரிஷி சுனக் பிரதமர் பதவியில் ஆள வந்திருப்பது பெருமைக்குரியது தானே!

அவரை ஏற்றுக் கொண்டது, கிரிப்ஸ் காலத்து சர்ச்சில் காலத்தில் உலகத்தை ஆண்ட இங்கிலாந்து அல்ல, இப்போது என்றாலும் தனது பெருமிதங்களில் இருந்து விலகி நின்று விவகாரங்களை அணுகும் அரசாக, மக்களாக, அரசியல் கட்சியாக, அரசியல் தலைவர்களாக, பிரிட்டன் மாறி இருக்கிறது என்பதே இதில் கவனிக்க வேண்டியது.

‘’பல ஆண்டுகளுக்கு முன் விதியுடன் ஒரு சந்திப்புக்கு நாம் காலம் குறித்திருந்தோம்’’ என்று நாம் விடுதலை அடைந்ததை பெருமையுடன் சொல்லிக் கொண்டார் முதல் பிரதமர் நேரு. இந்திய நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 14 நள்ளிரவில்தான் இப்படிச் சொன்னார். இத்தகைய எந்த சந்திப்புக்கும் பிரிட்டன் காலம் குறித்திருக்கவில்லை.

ஆனால் ஒரு இந்தியத் தலைமுறைவழிக் குடிமகனை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைக் காலம் கொடுத்திருக்கிறது. இங்கிலாந்து வரலாற்றில் வெள்ளை இனத்தைச் சாராத ஒருவர் முதன் முதலாக பிரதமராக வந்துள்ளார் என்பதே கவனிக்கத்தக்கது.

இப்போது பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருக்கும் சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த குர்ஜன்வாலாவைச் சேர்ந்த குடும்பம் ரிஷியுனுடையது. இவர்களது மூதாதையர்கள் 1937 ஆம் ஆண்டே கென்யாவுக்கு போய்விட்டார்கள். அந்த வகையில் பூர்வீகமாகவே பிரிட்டனில் வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல இவர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இதன் மகத்துவம் கூடுகிறது.

மற்றபடி இந்த பெருமைகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் மிக உன்னிப்பாக கவனித்தாக வேண்டும். தங்கத்தாம்பாளத்தில் வைத்து இந்தப் பதவியை ரிஷி சுனக் அவர்களுக்கு தந்துவிடவில்லை. தவிர்க்க முடியாத சூழலில் தான் அப்பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அல்லது வந்து சேர்ந்திருக்கிறது.

முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ், பதவியில் நீடிக்க முடியாத வகையில் விலகி இருக்கிறார். அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் ரிஷி சுனக். பிரதமர் எடுத்த பொருளாதார நடவடிக்கைகள்தான் அவரது பதவி விலகலுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனை புதிய பிரதமரான ரிஷி சுனக் ஒப்புக் கொண்டுள்ளார்.

‘‘கொரோனா நோய்த்தொற்று, உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் சந்தை, விநியோகச் சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இங்கிலாந்தும் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்றே முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் முயற்சி செய்தார்.

மாற்றத்துக்கான அவருடைய முயற்சிகளை பாராட்டுகிறேன். ஆனால் சில தவறுகளால் மோசமான விளைவுகள் ஏற்பட்டன. அந்த தவறுகளை நான் சரி செய்வேன்” என்று பிரதமர் ரிஷி சுனக் சொல்லி இருக்கிறார். இத்தகைய நெருக்கடியான நேரத்தில்தான் அவர் பிரதமர் ஆக்கப்பட்டுள்ளார்.

3.25 லட்சம் கோடி மதிப்பிலான தொகை வரிச் சலுகை தரப்பட்டு, அதற்கான வருவாய் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என்றே முந்தைய பிரதமர் குற்றம் சாட்டப்பட்டார். இத்தகைய பொருளாதார சவால்கள் புதிய பிரதமருக்கு இருக்கிறது. தாராளமயமாக்கலுக்கு ஆதரவான பிரதமர்தான் ரிஷி சுனக். அவரது சீர்திருத்தங்கள், பிரிட்டன் பொருளாதாரத்தை மீட்குமா, அவரது கட்சியை மீண்டும் ஆட்சிக்கு வர வைக்கும் அளவுக்குச் செயல்பட வாய்ப்பு இருக்கிறதா என்பதை அங்குள்ள பத்திரிக்கைகள் விரிவாக எழுதி வருகின்றன. ரிஷி சுனக் அவர்களது பொறுப்பேற்பு பெருமைக்குப் பின்னால் இது போன்ற சிக்கல்களும் இருக்கின்றன.