murasoli thalayangam

பல்கலைக்கழகங்கள் மாநில உரிமையின் நிறுவனங்களே! இந்தியாவின் குரலாக பேசிய முதல்வர்.. - முரசொலி !

பல்கலைக் கழக உரிமைகள் !

துணைவேந்தர்கள் மாநாட்டில் மாநில அரசுக்கான உரிமைக்குரலை உரக்க ஒலித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! இது தமிழ்நாட்டுக்கான தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கான உரிமைக் குரல் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைக்குரலாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 22 அரசுப் பல்கலைக் கழகங்கள் இருக்கிறது. இதற்கு ஆண்டு தோறும் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான தொகையை மாநில அரசு மட்டுமே செலவு செய்கிறது. மாநில அரசு மட்டுமே செலவு செய்கிறது என்பதை திரும்ப நினைவூட்டிக் கொள்ளவும். ஆனால் அத்தகைய பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களை நியமிப்பது என்பது மாநில முதலமைச்சரின் கையில், மாநில அரசின் கையில் இல்லை என்பதுதான் வேதனைக்குரியது. வேந்தே! வேதனைக்குரியது! இந்த வேதனையைத்தான் முதலமைச்சர் அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

“திராவிட முன்னேற்றக் கழக அரசு, 'துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும்' என்ற மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளது. ஏனென்றால் இது மாநில அரசினுடைய உரிமை தொடர்புடைய பிரச்சினை ஆகும். மாநிலத்தினுடைய பல்கலைக் கழகக் கல்வி உரிமை தொடர்பான பிரச்சினை ஆகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை ஆகும்.

ஆகவே மாநில அரசின் கொள்கை முடிவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக் கழகங்கள் செயல்பட வேண்டும். துணைவேந்தர்களாகிய நீங்கள் செயல்பட வேண்டும்" என்று முழங்கி இருக்கிறார் முதலமைச்சர். அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே வேந்தர்களாக இருக்க முடியும் என்பதே இதன் உள்கருத்து ஆகும்.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே தருவதுதான் இந்த சட்ட முன்வடிவு ஆகும்.

இதுவரை ஆளுநர்கள்தான், பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக இருந்து வருகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. துணை வேந்தர்களை நியமிப்பதற்கான சட்டத்தில் 'வேந்தர்' என்பது 'அரசு' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக் கழகங்கள் வருகின்றன.

இது ஏதோ தனிப்பட்ட முறையில் தமிழ்நாட்டு ஆளுநருக்கு எதிரான மசோதா அல்ல. இத்தகைய முறைதான் குஜராத் மாநிலத்திலேயே இருக்கிறது. இதனை தமிழக முதலமைச்சர் அவர்களே, சட்டமன்றத்தில் விளக்கிச் சொல்லி இருக்கிறார்கள்.

"பல்வேறு மாநிலங்களில் துணைவேந்தர் நியமனங்கள் எப்படி நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்தபோது, இன்றைக்குப் பிரதமராக இருக்கக்கூடிய திரு. மோடி அவர்களது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில், தேடுதல் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை மாநில அரசு நியமிக்கிறது. அதேபோல, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும் தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படக்கூடிய மூவரில் ஒருவர் துணை வேந்தராக மாநில அரசின் ஒப்புதலோடு வேந்தரால் நியமிக்கப்படுகிறார்.

ஆகவே, இந்த மாநிலங்களில் உள்ளதுபோல, குறிப்பாக, பிரதமருடைய சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ளதுபோல, தமிழ்நாட்டிலும், தமிழ் நாடு அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகச் சட்டங்களில் உரிய திருத்தம் செய்து, பல்கலைக்கழகத் துணை வேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டமுன்வடிவினை இங்கே உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள்" என்ற முதலமைச்சரின் விளக்கத் திலேயே இது முழுமையாக இருக்கிறது. அதனைத்தான் துணை வேந்தர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் 6.1.2022 அன்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், “துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்" என்று சொன்னார்கள். எனவே, இப்போதைய ஆளுநரின் செயல்பாடுகள்தான் இதற்குக் காரணம் என்று உள்நோக்கம் கற்பிக்கத் தேவையில்லை.

  • 1949 ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக் கழகச் சட்டம்

  • 1991 ஆம் ஆண்டு தெலுங்கானா பல்கலைக் கழகங்கள் சட்டம்

ஆகியவை பல்கலைக் கழகங்களின் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் அரசுக்குத்தான் உள்ளது என்று கூறுகின்றன. அரசின் ஒப்புதலுடன்தான் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்கிறது கர்நாடக மாநில சட்டம். இதனைத்தான் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜெயலலிதாவே இத்தகைய முடிவை ஒருமுறை எடுத்தார். பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதாவானது 28 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் முன்னெடுப்பால் அன்றைய கல்வி அமைச்சர் பொன்னுசாமி இதனை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இசைப் பல்கலைக் கழகத்துக்கு வேந்தர் முதலமைச்சர்தான் என்பது ஜெயலலிதா நிகழ்த்திக் காட்டியது ஆகும்.

ஆளுநர்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்காத அதிகாரம்தான் இந்த துணைவேந்தர்களின் நியமனம் ஆகும். இன்றைய ஒன்றிய அரசின் பரிசீலனையில் உள்ள பூஞ்சி ஆணையத்தின் அறிக்கையும் இதனைத்தான் சொல்கிறது. பல்கலைக் கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் மசோதாவை மேற்கு வங்க சட்டசபையில் அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள். அதேபோல் தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்துக்கு வேந்தராக மாநில முதலமைச்சரே இருப்பார் என்ற சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறது.

பல்கலைக் கழகங்கள், மாநில உரிமையின் நிறுவனங்களே என்பதை விரைவில் நிரூபிப்போம்!

Also Read: மனித உடல் உறுப்புளை விற்கும் சந்தை.. யார் இந்த வியாபாரிகள்? எப்படி இந்த சந்தை சாத்தியமாகிறது?